பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2008-10-06
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைமகள் விழா, இவ்வாண்டும் ஐந்தாவது தடவையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வீரம், செல்வம், கல்வி என்பனவேண்டி துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடும் இவ்விழாவை, முழு நாட்டு மக்களும் பயன்பெறவேண்டி, சட்டமியற்றும் உயர்பீடமான பாராளுமன்றத்திலும் கொண்டாடவேண்டுமென்பது மாண்புமிகு சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்குபண்டார அவர்களின் விருப்பமாகும். அவர்தம் விருப்புக்கமைய மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய அலுவல்கள், கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் அனுசரணையுடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவினையொட்டி, ஒக்ரோபர் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை காலை பாராளுமன்ற முற்புற வளாகம் நந்திக்கொடிகள், குருத்தோலைத் தோரணங்கள் மற்றும் வாழைமரங்கள்கொண்டு அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அழகிய பீடத்தில் மலைமகள், அலைமகள், கலைமகள் எனும் முப்பெருந்தேவியரின் திருவுருவப்படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டிய கலை நிகழ்ச்சிகளுக்கெனப் பிரத்தியேகமாகப் பெரிய அளவிலான மேடையொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
மு.ப.10.00 மணிக்கு திருவாளர்கள் எஸ். பாலமுருருகன், எம். ஜனகராஜ், ஆர். ஆனந்தகணேசன், எஸ். செந்தில்நாதன் குழுவினரின் மங்கள வாத்திய இசை ஆரம்பமானது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மு.ப. 10.30 மணிக்கு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் சகிதம் சபாநாயகர் மாண்புமிகு டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டார, மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு பண்டு பண்டாரநாயக்க, குழுக்களின் பிரதித் தவிசாளர் மாண்புமிகு இரா. சந்திரசேகர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையுடன் விசேட பூசை வழிபாடு ஆரம்பமானது. கொழும்பு, கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் ஆலயத்தின் எஸ். இராதாகிருஷ்ணக் குருக்கள், எஸ். ஜெயராம சர்மா மற்றும் கொழும்பு, பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலய பிரதம குருக்களான பிரம்மஸ்ரீ சிற்சபேசக் குருக்கள் ஆகியோர் பூசையைச் சிறப்புடன் நடாத்தினர். இந்நிகழ்வில் பாராளுமன்ற ஊழியர்களும் மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள ஊழியர்களும் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.
பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதல் நிகழ்வாக நடைபெற்ற, இந்தியாவின் ஹைதராபாத் நகரிலிருந்து வருகைதந்திருந்த “தீபாஞ்சலி” நிலையத்தின் “கலாரத்னா” ஸ்ரீமதி தீபிகா ரெட்டி அவர்களின் குச்சுப்புடி நடனமும் தாம்பாளத்தின்மீது நின்று தளம்பாமல் அவர் வழங்கிய அதிகமாகப் பிரபல்யமில்லாத புதியதொரு நடன வடிவமும் அங்கு குழுமியிருந்த அனைவரையுமே மிகவும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
அதனைத்தொடர்ந்து கண்டி, கலா சமர்ப்பண நிருத்தியஷேத்திரா மாணவ, மாணவிகளின் பந்தாசுரனை வதம்செய்யும் வகையிலமைந்த “பராசக்தி” எனும் நாட்டிய நாடகம் இடம்பெற்றது. செல்வி பிரசாதினி குமாரசுவாமி மற்றும் செல்வி எச்.ஏ.சமந்தி ஹம்சா திலகரத்ன ஆகியோர் இணைந்து இந்நடன நிகழ்ச்சியை நெறியாள்கை செய்திருந்தனர்.
இறுதி நிகழ்வாக திரு. பந்துல சேனாநாயக்கவின் புதல்விகளான செல்வி தீக்ஷ்ணா, செல்வி அனுத்தரா மற்றும் திரு. வித்தியாசங்கரின் புதல்வியான கோசலி ஆகியோர் இணைந்து “மோகனவர்ணம்” எனும் நடன விருந்தளித்தனர். வளர்ந்துவரும் இச்சிறுமிகளின் நடனம் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் குளிர்பானம் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், அனைவருக்கும் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, தெஹிவளை நெடுமால் ஆலய நிர்வாகத்தினரால் தயாரிக்கப்பட்ட சுவைமிகு பிரசாதமும் வழங்கப்பட்டது.
வீரம், செல்வம், கல்வி வேண்டி, துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரையும் வழிபடும் நவராத்திரி தினங்களில் சரஸ்வதி தேவியின் அருட் கடாட்சமாக விளங்கும் எமது கலாசார விழுமியங்களின் அடையாளங்களைப் பேணிப் பாதுகாக்கும்வகையிலும், எமது நாட்டுக்கு இன்றைய அவசியத் தேவையான சாந்தியும் சமாதானமும் வேண்டியும் இடம்பெற்ற ஓர் ஆன்மீகப் பெருவிழாவாக இக்கலைமகள் விழா இனிதே இடம்பெற்றது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks