01

E   |   සි   |  

 திகதி: 2017-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1369/2017: இளமருதங்குளம் மற்றும் சேமமடு கிராம மக்கள்: நலன்புரித் திட்டங்கள்

கெளரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வவுனியா மாவட்டத்தின், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், ஓமந்தை சந்திக்கு கிழக்கே 7 கிலோ மீற்றர் தூரத்தில், இளமருதங்குளம் கிராமமும், அங்கிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்தில் சேமமடு கிராமும் அமைந்துள்ளன என்பதையும்;

(ii) யுத்த நிலைமைக்கு முன்னர் இக்கிராமங்களில் 500 குடும்பங்கள் வாழ்ந்துவந்ததுடன், யுத்த நிலைமை முடிவடைந்ததன் பின்னர் தற்போது இளமருதங்குளம் கிராமத்தில் 19 குடும்பங்களும், சேமமடு கிராமத்தில் 65 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன என்பதையும்;

(iii) இக்கிராமங்களில் யுத்த நிலைமைக்கு முன்னர் சுமார் 1100 ஏக்கர் அளவான காணிப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயம் செய்வதற்கு முடியாத நிலைமை உருவாக்கியுள்ளது என்பதையும்;

(iv) இம்மக்களுக்கென எந்தவொரு வீடமைப்புத் திட்டமும் அமுல்படுத்தப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இளமருதங்குளம் மற்றும் சேமமடு கிராமங்ளில் வாழும் மக்களின் நலன்புரிக்காக தற்போது கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

(iii) இன்றேல், எதிர்காலத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-09

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ) (i)        ஆம்.

          (ii)       யுத்தத்திற்கு முன்னர் இளமருதங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 240 குடும்பங்களும் இளமருதங்குளம் கிராமத்தில் மட்டும் 85 குடும்பங்களும் வாழ்ந்துவந்ததுடன் சேமமடு கிராம அலுவலர் பிரிவில் 269 குடும்பங்களும் வசித்து வந்துள்ளன. யுத்தம் முடிவடைந்த பின்னர் இளமருதங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் தற்பொழுது 54 குடும்பங்களும் இளமருதங்குளம் கிராமத்தில் மட்டும் 19 குடும்பங்களும் சேமமடு கிராம அலுவலர் பிரிவில் 105 குடும்பங்களும் வசித்து வருகின்றன.

(iii) இக்கிராமத்தில் யுத்தத்திற்கு முன்னர் இளமருதங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 540 ஏக்கர் வயல் நிலம் பயிர்ச்செய்கைக்கு உட்பட்டதுடன் சேமமடு கிராம அலுவலர் பிரிவில் 1,000 ஏக்கர் வயல் நிலமும் பயிர்ச்செய் கைக்கு உட்படுத்தப்பட்டது. எனினும் யுத்த நிலைமையின் பின்னர் இளமருதங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 2016ஆம் ஆண்டு 302 ஏக்கர் வயல் நிலமும் சேமமடு கிராம அலுவலர் பிரிவில் 1,200 ஏக்கர் வயல் நிலமும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டது. காட்டு யானைகளின் தாக்கத்தைத் தடுப்பதற்கு யானை வேலி அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(vi) வீடமைப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப் பட்டுள்ளன. விபரங்கள் வினா ஆ(ii) இற்குரிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

(ஆ) (i) ஆம்.

(ii) வவுனியா மாவட்டத்தின் சேமமடு கிராம அலுவலர் பிரிவில் வசித்துவரும் 94 குடும்பங்  களுக்கு 2014 ஆம் ஆண்டு SEED எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் 135,000 ரூபாய் நிதியினைப் பயன்படுத்தி அரை நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த ஆண்டில் (2017) நிரந்தரக் கல் வீடு அமைப்பதற்கு 63 பயனாளிகளும் பாதிப்படைந்த வீடுகளைத் திருத்தி அமைப்பதற்கு 03 பயனாளிகளுமாக மொத்தம் சேமமடு கிராம அலுவலர் பிரிவில் 66 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இளமருதங்குளம் கிராம அலுவலர் பிரிவில் வசித்துவரும் 47 குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியின்கீழ் தற்காலிக வீடுகள் திருத்திக் கொடுக்கப் படுள்ளன. மேலும் இவ்வாண்டில் நிரந்தர கல் வீடு அமைப்பதற்கு 41 பயனாளிகளும் பாதிப்படைந்த வீடுகளைத் திருத்தி அமைப்பதற்கு 15 பயனாளிகளும் என மொத்தம் இளமருதங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 56 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு எமது அமைச்சின் நிதி உதவியின்கீழ் சேமமடு கிராம அலுவலர் பிரிவில் 6 பயனாளிகளுக்கு  70,000 ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்களும் 2 பயனாளிகளுக்கு  70,000  ரூபாய் பெறுமதியான நல்லினப் பசு மாடுகளுமாக மொத்தம் 8 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இளமருதங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 8 பயனாளிகளுக்கு  100,000 ரூபாய்  பெறுமதியான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2016ஆம் ஆண்டு எமது அமைச்சின் நிதி உதவியின்கீழ் தெரிவு செய்யப்பட்ட 7 பயனாளிகளுக்கு  55,000 ரூபா பெறுமதியான மலசலகூடங்கள் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன.

(iii) பொருத்தமற்றது.

(இ) பொருத்தமற்றது.

 

பதில் தேதி

2017-08-08

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks