01

E   |   සි   |  

 திகதி: 2025-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0978/2025: மீனவர்களான எம்.எப். முஸ்தகீன், என். குணபாலசிங்கம், ஏ. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரேமசிறி: நட்டஈடு

978/2025
கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024.07.07ஆந் திகதி பருத்தித்துறையிலிருந்து (வெற்றிலைக்கேணிக் கடல்) ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்ற எம்.எப். முஸ்தகீன், என்.குணபாலசிங்கம், ஏ.ராதா கிருஷ்ணன் மற்றும் பிரேமசிறி ஆகிய மீனவர்கள் 194 நாட்களுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் என்பதை அறிவாரா;
(ii) மேற்படி மீனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதா;
(iii) ஆமெனில், மேற்படி நட்ட ஈடு தொடர்பிலான விபரங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-23

கேட்டவர்

கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)  (i)        ஆம்.

                     2025.03.17ஆம் திகதி யாழ். மாவட்டக் கடற்றொழில் அலுவலகத்தில் குறித்த படகின் உரிமையாளர் மற்றும் படகோட்டியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, இன்பசிட்டியில் வசிக்கும் சி. அமிர்தலிங்கம் என்பவருக்குச் சொந்தமான, IDAY-A-0184 KMN இலக்கமுடைய மீன்பிடிப் படகில் 2024.07.07ஆம் திகதி பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற் காகக் கடலுக்குச் சென்றுள்ள மேற்படி நான்கு மீனவர்களும் பலத்த காற்று காரணமாகப் படகு அடித்துச் செல்லப்பட்டுக் காணாமற்போயிருந்த நிலையில், 29 நாட்களின் பின்னர் இந்திய மீனவர்கள் படகொன்றில் வந்து அவர்களைக் காப்பாற்றியுள்ளதுடன், 9 நாட்கள் அவர்களுடன் இருந்ததாகவும், பின்னர் அவர்கள் இந்தியக் கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, சென்னை பொலிஸாரினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சென்னையில் 3 மாதங்களும் 10 நாட்களும் இருந்துள்ளதாகவும், பின்னர் திருச்சி சிறைச்சாலையில் 4 மாதங்களும் 13 நாட்களும் இருந்துள்ளனர் எனவும், அதன் பின்னர் மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 13 நாட்கள் தடுப்பில் வைக்கப்பட்ட பின்னர் ஆகாய மார்க்கமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நான்கு மீனவர்களையும் 2025.02.25ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தலையீட்டின்பேரில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் 344,424 ரூபாய் செலவினத்தை ஏற்றுள்ளது. தேவையாயின் மேற்படி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆள் அடையாள அட்டை இலக்கங்களை உங்களுக்கும் வழங்க முடியும்.

(ii) இந்த மீனவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக உயிரிழக்கும் மீனவர்களுக்கு அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்கப் படுகின்றது. அதற்கமைய, அவ்வாறு உயிரிழக்கும் கடற்றொழிலாளி ஒருவர் சார்பாக அவரில் தங்கியிருப்போருக்கு ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி வாரியத்தின்மூலம் இரண்டு மீனவர் காப்புறுதித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் நட்டஈடு பெறுவதற்குக் குறித்த மீனவர்கள் அத்திட்டத்திற்குப் பங்களித்தல் வேண்டும். அந்த இரண்டு திட்டங்களின் கீழும் திடீர் அனர்த்தத்தின்போது உயிரிழக்கும் மீனவ ரொருவர் சார்பாக 1 மில்லியன், 1.5 மில்லியன் மற்றும் 2 மில்லியன் ரூபாய் வரை பயன்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

அதுதவிர, மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பிற வெளிநாட்டுக் கடற்படைப் படகுகளுடன் மோதுவதனால் ஏற்படும் அனர்த்தங்களின் போது உயிரிழக்கும் மீனவர்களுக்கு, குறித்த தகவல்களை உறுதிப் படுத்திய பின்னர் அதனுடன் தொடர்புடைய கப்பல் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு இழப்பீடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எனினும், இந்த நான்கு மீனவர்களும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

(iii) ஏற்புடையதல்ல.

(ஆ) மேலே குறிப்பிட்டவாறு மூன்று முறைகளின்கீழ் இழப்பீடு வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த மீனவர்கள் நால்வரும் பாதுகாப்பாக எந்தவித அபாயமுமின்றி நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருப் பதால் இழப்பீடு வழங்கப்படவில்லை.

பதில் தேதி

2025-09-23

பதில் அளித்தார்

கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks