பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கைப் பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தூதுக் குழுவினர், சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் அவர்களின் அழைப்பையேற்று 2026 ஜூலை 25ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை சீன மக்கள் குடியரசுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது.
பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் இந்த விஜயத்தின் நோக்கங்களாக அமைந்தன.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட தூதுக் குழுவிற்கு கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தலைமைதாங்கியதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஓஷானி உமங்கா, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, சட்டத்தரணி கீதா ஹேரத், சட்டத்தரணி ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
இத்தூதுக் குழுவில் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் ஒழுங்குமரபு அலுவலகத்தின் பாராளுமன்ற உத்தியோகத்தர் லஹிரு பத்திரணகே ஆகியோரும் இணைந்திருந்தனர்.
குவாங்டொங் மாகாணத்தின் ஷென்சென் மற்றும் குவாங்சோ நகரங்களுக்கு இக்குழுவினர் விஜயம் மேற்கொண்டதுடன், உத்தியோகபூர்வ சந்திப்புகள், கல்விசார் அமர்வுகள், நிறுவன ரீதியான விஜயங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் உள்ளடங்கிய விரிவான நிகழ்ச்சித்திட்டங்களிலும் இவர்கள் பங்கேற்றனர். சீனாவின் அபிவிருத்தி அனுபவம், புத்தாக்கச் சூழல் மற்றும் ஆட்சி முறைகள் தொடர்பில் நேரடி அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான பெறுமதிமிக்க வாய்ப்பையும் இந்நிகழ்ச்சித்திட்டம் வழங்கியது.
ஷென்சென் விசேட பொருளாதார வலயத்தின் குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கை தொடர்பில் இடம்பெற்ற விரிவுரையிலும் இலங்கைத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இங்கு, சீனாவின் பொருளாதார அபிவிருத்தி மூலோபாயம் தொடர்பான முக்கியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.
அத்துடன், Huawei Technologies, Tencent, Mindray, BYD உள்ளிட்ட சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிலையங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர். இதன்போது செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், நவீன சுகாதாரப் பராமரிப்பு, நவீன விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் கைத்தொழில் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நேரடியாக அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவ்விஜயத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஷென்சென் மாநகர அரசாங்கம், குவாங்டொங் மாகாண அரசாங்கம் மற்றும் குவாங்சோ மாநகர அரசாங்கம் ஆகியவற்றின் தலைவர்களுடனான சந்திப்புகளும் இடம்பெற்றன. இதன்போது பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மக்கள் மட்டத்திலான தொடர்புகளை மேம்படுத்துதல், பெண்களின் வலுவூட்டலை ஊக்குவித்தல் மற்றும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் எதிர்காலத்தில் ஒத்துழைக்கக்கூடிய துறைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இவ்விஜயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ஷென்சென் பெண்கள் சம்மேளனத்துடனான சந்திப்பு அமைந்தது. இதன்போது பெண்களின் வலுவூட்டல், சிறுவர் பராமரிப்பு சேவைகள், குடும்ப நலன் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் சீனா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் அறிந்துகொண்டனர். பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பொது வாழ்வில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது தொடர்பில் இருதரப்பினரும் தமது அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொள்வதற்கும் இக்கலந்துரையாடல் வாய்ப்பளித்தது.
மேலும், இத்தூதுக் குழுவினர் லியான்ஹுவா மலைப் பூங்கா, ‘Great Tides Surge Along the Pearl River’ கண்காட்சி மண்டபம், குவாங்டொங் அருங்காட்சியகம் மற்றும் குவாங்சோ மெட்ரோ அருங்காட்சியகம் உள்ளிட்ட கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்தனர். இதன்மூலம் சீனாவின் செழுமையான கலாசாரப் பாரம்பரியம், நகர அபிவிருத்தி மற்றும் வரலாற்றுப் பரிணாமம் தொடர்பில் மேலும் ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இவ்வுத்தியோகபூர்வ விஜயம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், பாராளுமன்றங்களுக்கிடையிலான கலந்துரையாடல், நிறுவன ரீதியான ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
இவ்விஜயத்தின்போது வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் சிறப்பான ஏற்பாடுகளுக்காக சீன மக்கள் குடியரசின் அரசாங்கம், இலங்கைக்கான சீனத் தூதரகம், குவாங்டொங் மாகாண அதிகாரிகள் மற்றும் அனைத்து விருந்தோம்பல் நிறுவனங்களுக்கும் இத்தூதுக் குழுவினர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks