பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.
வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.
மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.
இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks