பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையிலான இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தூதுக் குழுவினர் மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பையேற்று இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களை வலுவூட்டுவது, பாராளுமன்ற விவகாரங்கள், சமூக அபிவிருத்தி மற்றும் பாலின உணர்வுடனான ஆளுகை போன்ற விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கும் அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால பாராளுமன்ற, கலாசார மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இந்திய பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய இலங்கைத் தூதுக் குழுவினர், லோக் சபாவின் சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவின் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இலங்கைத் தூதுக் குழுவினர் இந்திய மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கௌரவ அமைச்சர் அன்னபூர்ணா தேவியுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இச்சந்திப்பில் பெண்களை வலுவூட்டும் திட்டங்கள், சிறுவர் நலன்புரி முயற்சிகள், பாலின உணர்திறன் மிக்க கொள்கைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள், சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இலங்கைத் தூதுக் குழுவினர் டில்லி பொலிஸ் கமிஷனரைச் சந்தித்து கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பது, அவை தொடர்பில் பின்பற்றக் கூடிய வினைத்திறனான மூலோபாயத் திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் சமூக ரீதியான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
பெண்களைத் தலைமையாகக் கொண்ட சுய உதவிக் குழுக்கள் மற்றும் இந்திய வணிக மற்றும் கைத்தொழில் பெண்கள் அமைப்பின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளையும் இத்தூதுக் குழுவினர் சந்தித்தனர்.
இந்திய பாராளுமன்றத்தின் ஜனநாயகத்துக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விரிவான நிகழ்ச்சிகளிலும் இத்தூதுக் குழுவினர் பங்குபற்றுகின்றனர். இந்திய பாராளுமன்ற முறைமை, குழு முறைமை, பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இதில் ஆராயப்படுவதுடன், பெண்களை முன்னுரிமையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை இந்தியா கையாழும் முறைமைகள் பற்றியும் கலந்துரையாடப்படும்.
புதுடில்லி முதலமைச்சருடனான சந்திப்பு, தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை உள்ளிட்ட கலாசார, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான விஜயம் என்பவற்றிலும் இவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.
பாலின சமத்துவம், பெண்களை வலுவூட்டல், சமூக ஒருங்கிணைப்பை முன்னெடுக்க பாராளுமன்ற ஈடுபாடு மற்றும் பொதுமக்கள் தொடர்பு என்பவற்றின் மூலம் நடவடிக்கைகளை எடுப்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் முக்கிய பங்காற்றி வருகின்றது.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ பெண் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) சமிந்திரானி கிரியல்ல, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சதுரி கங்கானி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
இக்குழுவில் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, உதவி பிரதான உத்தியோகத்தர் ஹஷ்மி பெர்னாந்து, சிரேஷ்ட பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சமிலா நிசங்க, சிரேஷ்ட உதவி பாராளுமன்ற ஒழுங்கு மரபு உத்தியோகத்தர் ரணில் நாணயக்கார ஆகியோரும் இணைந்துள்ளனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks