பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவியும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது சிறுவர் உரிமைகளை மேம்படுத்துதல், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத் திறன்களை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நவம்பர் 20ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள “விசேட சிறுவர் பாராளுமன்றப் பங்கேற்பு நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் 1,200க்கும் அதிகமான சிறுவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று தயாரிக்கப்பட்ட சிறுவர் அறிக்கையை (Children’s Statement), 50 சிறுவர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சிறுவர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமொன்றை மீண்டும் ஸ்தாபிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளைத் துரிதப்படுத்துதல், அதற்குத் தடையாக உள்ள சட்டரீதியான இடையூறுகளை நீக்குதல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் கீழ், “This is my right” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணியொன்றை ஏற்பாடு செய்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இப்பேரணியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கச் செய்ய எதிர்பார்ப்பதாக வருகை தந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர். அத்துடன், வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் சேவை வழிகாட்டியொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்றை நடத்துதல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இதேவுளை, மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பில் இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின்போது, பாராளுமன்ற ஆய்வு உதவி மற்றும் அறிவுப் பரிமாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமூலங்களைத் தயாரித்தல், ஒப்பீட்டுச் சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் சட்டமூலங்கள் பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்தல் போன்ற துறைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொழில்நுட்ப மற்றும் ஆய்வு உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சிறுவர் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடல்களில் பாராளுமன்றத்தின் கௌரவ பிரதிக் குழுத் தலைவி ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கௌரவ பிரதித் இணைத் தலைவிகளான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்ல மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks