02

E   |   සි   |  

குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கான சட்டத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆராய்வு

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டத்தை மேலும் பயனுள்ள வகையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்துகொள்ளாத காரணத்தினால், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களான சட்டத்தரணி சமிந்திராணி கிரிஎல்ல மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

குடும்ப வன்முறையைத் தடுப்பதும், அதன் காரணமாகப் பாதிக்கப்படும் நபர்களுக்கு துரிதமான சட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதும் இச்சட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்தச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றம் பல்வேறு முன்மொழிவுகளை இதன்போது முன்வைத்தது.

வன்முறைக்கு உள்ளாகும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நபர்கள் மற்றும் அதிகாரிகளின் வரம்பை விரிவுபடுத்துதல், விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்துதல், இடைக்காலப் பாதுகாப்புக் கட்டளைகளை மேலும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புக் கட்டளைகள் தொடர்பான பின்தொடர் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அத்துடன், சட்டவாக்கத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களின் உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், கிரிசாலிஸ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் பெண்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடத்தப்பட்டது. பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அப்பால் சென்று, கொள்கை வகுத்தல் உள்ளிட்ட தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களின் பங்கேற்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு வன்முறைக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டப் பாதுகாப்பு வழிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பெண்களின் உரிமைகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks