02

E   |   සි   |  

2026-10-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட கலந்துரையாடல், அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு மத்தியூ ஜோன் டக்வர்த் உள்ளிட்ட அதிகாரிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின்  பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஒன்றியத்தின் பிரதித் இணைத் தலைவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மற்றும் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.

மாவட்ட மட்டத்தில் இயலாமையுடைய நபர்கள் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகளை இணைத்துக்கொண்டு தொடர்ச்சியான ஆலோசனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், வட மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் இந்நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் ஆறு மாவட்டங்களில் இந்நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் பிரதித் இணைத் தலைவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பங்கேற்புடன் முன்மொழிவுகள் திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்திலும் இயலாமையுடைய நபர்களின் சமூகத்திற்கெனத் தனியான செலவின ஒதுக்கீட்டுத் தலைப்பொன்றை உள்ளடக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்திற்குப் பதிலாக, சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான புதிய இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றுதல், சைகை மொழிச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் விசேட கல்வித்துறையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகளையும் ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது.
செவித்திறன் குறைபாடுடையவர்கள் அவசரநிலைகளின்போது 119 பொலிஸ் அவசர அழைப்புச் சேவையைச் சைகை மொழி மூலம் அணுகக்கூடிய வகையில், சைகை மொழிப் பயிற்சி பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் வட்சப் (WhatsApp) காணொளி அழைப்புச் சேவையொன்று ஒன்றியத்தின் தலைவரின் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த. த சில்வா ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி, பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தினால் வழங்கப்படும் 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை ஒரு முக்கிய சாதனையாகும் என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார். மேலும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் ஒரு முக்கியமான வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இயலாமையுடைய நபர்களின் சமூகத்தை ஏனைய சமூகங்களுடன் சமநிலையில் முன்னேற்றுவது ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், அது அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய இலக்காகவும் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். தரவுக் கட்டமைப்புகளை உருவாக்குதல், சைகை மொழி அகராதிகளைத் தயாரித்தல் உள்ளிட்ட கொள்கை மற்றும் சட்டத் திருத்த நடவடிக்கைகளுக்கு நீண்டகால அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய விரிவான செயற்றிட்டமொன்று (Action Plan) முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்புடன் இலங்கையின் இயலாமையுடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஒன்றியத்தின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-10-29

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் முன்னெடுப்பில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான நாடளாவிய விசேட வேலைத்திட்டம் நவம்பர் 02ஆம் திகதி

இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதையும், அது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் சுகாதார அமைச்சுடன் இணைந்து விசேட தேசிய வேலைத்திட்டத்தை நவம்பர் 02ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில், அண்மையில் (22) கூடிய ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.மார்பகப் புற்றுநோயின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இங்கு விளக்கிக் கூறினர். வருடாந்தம் இலங்கையில் ஏறத்தாழ 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாகச் சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பது முக்கிய பிரச்சினையாக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதற்கமைய, நவம்பர் 02ஆம் திகதி திங்கட்கிழமை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் சுகாதார மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் நேரடியாகவும் பங்கேற்கவுள்ளனர். இதன்போது, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இளஞ்சிவப்பு நிறச் சின்னங்கள் (Pink Ribbons / Pink Wristbands) மற்றும் ஆடைகளைப் பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இளஞ்சிவப்பு மாதத்திற்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.கிராமப்புறங்கள், பெருந்தோட்டப் பகுதிகள், நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குறைந்தளவில் பங்கேற்பு காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை சுவநாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. தற்போது 35–45 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 50 சதவீதமானவர்களே சுவனாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதால், ஏனைய பெண்களையும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பிரதான மையங்களில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் செயற்படும் மகளிர் சங்கங்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரை ஒருங்கிணைத்து, 35–45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் பரிசோதனைகளுக்கு (Screening Tests) உட்படுத்தும் விரிவான வேலைத்திட்டமொன்றை அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஜனவரி மாதத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னெடுப்பில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பாலின அடிப்படையிலான வரவு செலவுத் திட்டமிடல் (GRP) மற்றும் பராமரிப்புப் பொருளாதாரம் (Care Economy) தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தேசிய பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் வரவு செலவுத் திட்டச் செயன்முறையில் பாலின உணர்திறன் கொண்ட கொள்கைகளை உள்ளடக்குதல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப ஆலோசனை உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கான சட்டம், பராமரிப்புக் கொடுப்பனவுகள் தொடர்பான சட்டம் மற்றும் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, நீதி அமைச்சுடன் இணைந்து அவற்றுக்கான திருத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடல்களில் கௌரவ பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதித் இணைத் தலைவியும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள்,  சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-10-28

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் கடந்த ஒக். 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாகப் பயணங்கள் தாமதமடைந்த தொழிலாளர்களின் பயண வசதிகளை ஏற்படுத்துவதற்காக விசேட விமான சேவைகளைப் பயன்படுத்துதல், தேவையான சந்தர்ப்பங்களில் தற்காலிக தங்குமிட மற்றும் உணவு வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.அத்துடன், இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும்போது அவர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதிப்படுத்தப்படும் வகையில் வெளிநாட்டு நாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், ரஷ்யாவுடனான வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களின்போது ரஷ்ய ரூபிளைப் பயன்படுத்துவதில் நிலவும் தடைகள் மற்றும் மாற்றுக் கொடுப்பனவு முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதனுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சுற்றுலாத்துறைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-10-28

2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள், அரச வருமானம் மற்றும் செலவினங்களை முகாமைத்துவம் செய்தல், முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 22) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துகொண்ட நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலிண சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.2027ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள அரச செலவினங்கள், மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அரச வருமான இலக்குகள் மற்றும் கடன் சேவைக்கான செலவுகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பேரினப் பொருளாதார முன்னறிவிப்புகள் மற்றும் அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான சட்டக் கட்டமைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.2027ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த மூலதனச் செலவினங்களில், வீதி அபிவிருத்தி, சுகாதார மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துதல், மின்சாரக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களும் உள்ளடங்குகின்றன. இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு நிதி வசதிகளை வழங்குதல், கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் வணிகத் துறைக்கு ஆதரவளித்தல் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. அரச சேவையின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் அரச சேவைகளின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், 2027ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கான தேவைகள், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நிதி வசதிகள் மற்றும் அரச கடன் முகாமைத்துவம் தொடர்பிலும் அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். அரச வருமான இலக்குகளை அடைதல், வரி நிர்வாகத்தின் வினைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை முறையாகப் பயன்படுத்துதல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.


2026-10-28

மத்திய மாகாண சபையின் வீதி மற்றும் போக்குவரத்துத் திட்டங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து கோபா குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

மத்திய மாகாண சபையின் 2021–2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் மூன்றாண்டு அறிக்கை, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. 2026.05.21 ஆம் திகதி நடைபெற்ற கோபா குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான மீளாய்வும் இங்கு மேற்கொள்ளப்பட்டது.மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீதி அபிவிருத்தி மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திட்டங்களின் முன்னேற்றம், வீதி மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் இடம்பெற்ற குறைபாடுகள், தரநிலைகளுக்கு இணங்காத நிர்மாணப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட மேலதிக வேலைகளுக்காகப் பணம் செலுத்தப்பட்டமை தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், பயணிகள் போக்குவரத்துச் சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மற்றும் GPS/SIM தொழில்நுட்பக் கட்டமைப்புகள் முறையாகப் பயன்படுத்தப்படாமை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீர்செய்து, இக்கட்டமைப்புகளை வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசாரிக்கப்பட்டது.மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டடங்கள் சட்டபூர்வமான அனுமதியின்றி உள்வாடகைக்கு விடப்பட்டமை, நிலுவையிலுள்ள வாடகைத் தொகைகள் அறவிடப்படாமை மற்றும் அரச சொத்துக்களின் உரிமை தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, மலபார் ஹவுஸ் கட்டடம் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கருத்திட்ட அலுவலகமொன்றுக்கு வழங்கப்பட்டதையடுத்து, அதற்கான வாடகையை அறவிட முடியாமை தொடர்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இதற்கு மேலதிகமாக, KMTT திட்டங்களின் நோக்கங்கள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பங்களில் அவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை மீள அறவிடுதல், அரச சொத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்தளிக்கும்போது உரிய விதிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் பயன்பாடின்றிக் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் சொத்துக்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அலுவலகக் கோப்புகளை அழித்தமை தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் குழு விசாரணைகளை மேற்கொண்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, டீ. கே. ஜயசுந்தர, சுசந்த குமார நவரத்ன, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சந்தன சூரியஆரச்சி, ஓஷானி உமங்கா மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks