பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-10-20
இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் இலங்கையின் கௌரவ பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர ஆகியோர், 2026 ஒக்டோபர் 13 முதல் 15 வரை பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸுக்கு விஜயம் செய்து, 2026ஆம் ஆண்டுக்கான 12ஆவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், பல இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்றனர்.
12ஆவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பு, இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தூதுக்குழுவின் தலைவர் சேர்பன் டிமெத்ரி ஸ்டேட்சா ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது. இச்சந்திப்பு 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலங்கையின் கௌரவ பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, பெல்ஜியம், லக்ஸம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு சந்தன வீரசேன மற்றும் பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இலங்கைத் தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பு என்ற வகையில், இச்சந்திப்பு இரு தரப்பினருக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகளில் முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இரு தரப்பினரினதும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள், GSP+ வரிச்சலுகைத் திட்டம், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட பரஸ்பர அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கான முக்கிய தளமாக இச்சந்திப்பு அமைந்தது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் இந்து – பசுபிக் பிராந்தியங்களின் நிலைமைகள், கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, நிலைபேறான அபிவிருத்தி, இணைப்புத்திறன் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதும் இலங்கை வெளிப்படுத்திய மீண்டெழும் திறனை இணைத் தலைவர் Șerban-Dimitrie Sturdza மற்றும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டினர். குறிப்பாக, தித்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கின் அமைதியின்மையால் ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடி உள்ளிட்ட சவால்களைச் சுட்டிக்காட்டிய அவர்கள், சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் சாதகமான பொருளாதார வளர்ச்சிப் போக்கையும் பாராட்டினர்.
இணைத் தலைவரான கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, தித்வா சூறாவளித் தாக்கத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய பெறுமதிமிக்க நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். அவசர நிவாரணப் பொருட்கள் வழங்குதல், அனர்த்த மதிப்பீட்டுக்கான ஆதரவு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆகியனவும் இவ்வுதவிகளில் அடங்கும். சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஈடுபாடு மற்றும் பரிஸ் கழகத்தின் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை உள்ளிட்ட சவாலான காலப்பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார். தற்போதைய புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியில் பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலதிக உதவியையும் கௌரவ சபாநாயகர் கோரினார்.
1995ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கௌரவ சபாநாயகர் (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன, இந்த உறவுகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான தருணம் இதுவென வலியுறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கிய பொருளாதாரப் பங்காளிகளில் ஒன்றாகத் தொடர்ந்தும் விளங்குவதாகவும், இலங்கையின் முக்கிய ஏற்றுமதிச் சந்தையாகவும் அபிவிருத்திப் பங்காளியாகவும் திகழ்வதாகவும் இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான ஈடுபாடு இவ்வுறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு தரப்பினரதும் பொதுவான முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும் உதவும்.
இலங்கைத் தூதுக்குழுவினருக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இணைத் தலைவர் Șerban-Dimitrie Sturdza மற்றும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ இராப்போசன விருந்தையும் வழங்கினர்.
இந்த விஜயத்தின்போது, கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உப தலைவர் யூனெஸ் ஒமர்ஜீ உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் பல சந்திப்புகளில் ஈடுபட்டார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், வழக்கமான ஈடுபாட்டுக்கான பொறிமுறைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தூதுக்குழு, கௌரவ சபாநாயகர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தினுள் சுற்றுப்பயணமொன்றையும் ஏற்பாடு செய்தது. இதன்போது, குழுக் கூட்டமொன்றை நேரில் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.
கௌரவ சபாநாயகர் பெல்ஜியம் பாராளுமன்றத்திற்கும் விஜயம் செய்து, பிரதிநிதிகள் சபையின் தலைவர் பீட்டர் டு ரூவர் உள்ளிட்ட உறுப்பினர்களைச் சந்தித்தார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் மக்களிடமிருந்து கிடைத்த ஆணையைத் தொடர்ந்து, இலங்கையின் நிலையான அரசியல் சூழல், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பொருளாதார மீட்சி மற்றும் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்புகளை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கௌரவ சபாநாயகர் விளக்கமளித்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்காக பெல்ஜிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த கௌரவ சபாநாயகர், பெல்ஜியத்திலிருந்து உயர்மட்ட இருதரப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் அழைப்பு கோரிக்கை விடுத்தார். 2028ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடத் தயாராகும் நிலையில், இத்தகைய விஜயம் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான உந்துசக்தியாக அமையும் என அவர் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான 12ஆவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பில் பங்கேற்ற இலங்கைத் தூதுக்குழுவில், பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் மதுசங்க ஜயசிங்க, வர்த்தக அமைச்சர் தாவிஷ்ய முல்லேகம்கொட மற்றும் அமைச்சர் திலினி லெனகல ஆகியோரும் இடம்பெற்றனர்.
2026-10-20
இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஒக். 20) பாராளுமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பல்லின மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்து மதக் குருமார் நவராத்திரி பூஜைகளை முன்னெடுத்து அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினர். இங்கு பரதநாட்டிய நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நற்சிந்தனையுடன் நடத்தப்படும் இந்தப் பூஜை விழா முழு நாட்டிற்கும் ஆசீர்வாதமாக அமையும் எனத் தெரிவித்தார். ஏனைய கலாசாரங்களுக்கு மதிப்பளித்து, சமய மற்றும் கலாசார நல்லிணக்கத்தைப் பேணுவதன் மூலம் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்ற நவராத்திரி விழாவில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் குறிப்பிடுகையில், இந்து சமய நம்பிக்கையின்படி துர்க்கை அம்மனின் அருளால் தீமைகள் நீங்கவும், லட்சுமி தேவியின் அருளால் செல்வமும் செழிப்பும் பெருகவும், சரஸ்வதி தேவியின் அருளால் ஞானம் மேம்படவும் தாம் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். மேலும், அனைவரினதும் பங்களிப்புடன் எவ்வித வேறுபாடுகளுமின்றி இவ்வாறான விழாக்களை ஏற்பாடு செய்வது சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.இந்து பக்தர்களால் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த நவராத்திரி விழா காணப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுடன், முப்பெரும் சக்திகளை நினைத்து ஒன்பது இரவுகள் வழிபடும் நிகழ்வாகும். இதில் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கா தேவியை நினைத்து வழிபாடுகள் நிகழ்த்தப்படும். அடுத்த மூன்று நாட்கள் அழியாத செல்வத்தையும் புகழையும் தரும் லக்ஷமி தேவியை வேண்டியும், இறுதி மூன்று நாட்கள் கல்விச் செல்வத்தை வேண்டி சரஸ்வதி தேவியை நினைத்தும் வழிபாடுகள் நிகழத்தப்படும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் இடம்பெறும்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் இந்து மதக் குருமார்கள், சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, கௌரவ பிரதிக் குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், கௌரவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, கௌரவ கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட அமைச்சர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக உள்ளிட்ட ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உட்பட பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள், இணைந்த பணியாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
2026-10-19
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (ஒக். 19) சான்றுரைப்படுத்தினார்.இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் 2026.10.08 ஆம் திகதி நடைபெற்றதுடன், இது திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இச்சட்டமூலத்தை முதலாம் மதிப்பீட்டிற்காக 2026.08.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அடையாளம் காணப்பட்ட சட்டரீதியான, விளக்கமளித்தல் தொடர்பான, நிர்வாக ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இத்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், சிங்கள மற்றும் ஆங்கிலச் சட்ட வாசகங்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைச் சீர்செய்தல், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்தல் நடவடிக்கைகளில் காணப்படும் சிக்கல்களைத் தீர்த்தல், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துதல், அத்துடன் மத்தியப்படுத்தப்பட்ட இலத்திரனியல் முறைமையினூடாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை மேலும் ஒழுங்குபடுத்துதல் ஆகியனவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன.இத்திருத்தங்களின் மூலம், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான இலங்கையின் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய, ஊழல் எதிர்ப்புத் (திருத்தம்) சட்டமூலம், 2026 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புத் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.
2026-10-19
இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா எதிர்வரும் ஒக். 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் கொண்டாடப்படவிருக்கும் இந்த நவராத்திரி விழாவில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ சபாநாயகர் வைத்தியர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்து பக்தர்களால் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த நவராத்திரி விழா காணப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுடன், முப்பெரும் சக்திகளை நினைத்து ஒன்பது இரவுகள் வழிபடும் நிகழ்வாகும். இதில் முதல் மூன்று நாட்களும் துர்க்கா தேவியை வேண்டி வழிபாடுகள் நிகழ்த்தப்படும். அடுத்த மூன்று நாட்கள் அழியாத செல்வத்தையும் புகழையும் தரும் லக்ஷமி தேவியை வேண்டியும், இறுதி மூன்று நாட்கள் கல்விச் செல்வத்தை வேண்டி சரஸ்வதி தேவியை நினைத்தும் வழிபாடுகள் நிகழத்தப்படும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் இடம்பெறும்.கௌரவ சபாநாயகரின் வழிகாட்டுதல்களுக்கு அமை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பாராளுமன்ற இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
2026-10-16
பாராளுமன்றம் ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் இன்று (ஒக். 16) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.30மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு என்பவற்றை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறவுள்ளது.இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணிக்கு 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் இரண்டு (திருத்தச்) சட்டமூலம் (சட்டமூல இலக்கம் 70 மற்றும் 80) தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.இதன் பின்னர் 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை விசர்நாய்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர், ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks