பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-10-20
இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஒக். 20) பாராளுமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பல்லின மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்து மதக் குருமார் நவராத்திரி பூஜைகளை முன்னெடுத்து அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினர். இங்கு பரதநாட்டிய நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நற்சிந்தனையுடன் நடத்தப்படும் இந்தப் பூஜை விழா முழு நாட்டிற்கும் ஆசீர்வாதமாக அமையும் எனத் தெரிவித்தார். ஏனைய கலாசாரங்களுக்கு மதிப்பளித்து, சமய மற்றும் கலாசார நல்லிணக்கத்தைப் பேணுவதன் மூலம் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற நவராத்திரி விழாவில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் குறிப்பிடுகையில், இந்து சமய நம்பிக்கையின்படி துர்க்கை அம்மனின் அருளால் தீமைகள் நீங்கவும், லட்சுமி தேவியின் அருளால் செல்வமும் செழிப்பும் பெருகவும், சரஸ்வதி தேவியின் அருளால் ஞானம் மேம்படவும் தாம் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். மேலும், அனைவரினதும் பங்களிப்புடன் எவ்வித வேறுபாடுகளுமின்றி இவ்வாறான விழாக்களை ஏற்பாடு செய்வது சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இந்து பக்தர்களால் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த நவராத்திரி விழா காணப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுடன், முப்பெரும் சக்திகளை நினைத்து ஒன்பது இரவுகள் வழிபடும் நிகழ்வாகும். இதில் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கா தேவியை நினைத்து வழிபாடுகள் நிகழ்த்தப்படும். அடுத்த மூன்று நாட்கள் அழியாத செல்வத்தையும் புகழையும் தரும் லக்ஷமி தேவியை வேண்டியும், இறுதி மூன்று நாட்கள் கல்விச் செல்வத்தை வேண்டி சரஸ்வதி தேவியை நினைத்தும் வழிபாடுகள் நிகழத்தப்படும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் இடம்பெறும்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் இந்து மதக் குருமார்கள், சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, கௌரவ பிரதிக் குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், கௌரவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, கௌரவ கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட அமைச்சர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக உள்ளிட்ட ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உட்பட பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள், இணைந்த பணியாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
2026-10-19
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (ஒக். 19) சான்றுரைப்படுத்தினார்.இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் 2026.10.08 ஆம் திகதி நடைபெற்றதுடன், இது திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இச்சட்டமூலத்தை முதலாம் மதிப்பீட்டிற்காக 2026.08.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அடையாளம் காணப்பட்ட சட்டரீதியான, விளக்கமளித்தல் தொடர்பான, நிர்வாக ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இத்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், சிங்கள மற்றும் ஆங்கிலச் சட்ட வாசகங்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைச் சீர்செய்தல், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்தல் நடவடிக்கைகளில் காணப்படும் சிக்கல்களைத் தீர்த்தல், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துதல், அத்துடன் மத்தியப்படுத்தப்பட்ட இலத்திரனியல் முறைமையினூடாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை மேலும் ஒழுங்குபடுத்துதல் ஆகியனவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன.இத்திருத்தங்களின் மூலம், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான இலங்கையின் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய, ஊழல் எதிர்ப்புத் (திருத்தம்) சட்டமூலம், 2026 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புத் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.
2026-10-19
இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா எதிர்வரும் ஒக். 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் கொண்டாடப்படவிருக்கும் இந்த நவராத்திரி விழாவில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ சபாநாயகர் வைத்தியர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்து பக்தர்களால் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த நவராத்திரி விழா காணப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுடன், முப்பெரும் சக்திகளை நினைத்து ஒன்பது இரவுகள் வழிபடும் நிகழ்வாகும். இதில் முதல் மூன்று நாட்களும் துர்க்கா தேவியை வேண்டி வழிபாடுகள் நிகழ்த்தப்படும். அடுத்த மூன்று நாட்கள் அழியாத செல்வத்தையும் புகழையும் தரும் லக்ஷமி தேவியை வேண்டியும், இறுதி மூன்று நாட்கள் கல்விச் செல்வத்தை வேண்டி சரஸ்வதி தேவியை நினைத்தும் வழிபாடுகள் நிகழத்தப்படும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் இடம்பெறும்.கௌரவ சபாநாயகரின் வழிகாட்டுதல்களுக்கு அமை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பாராளுமன்ற இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
2026-10-16
பாராளுமன்றம் ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் இன்று (ஒக். 16) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.30மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு என்பவற்றை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறவுள்ளது.இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணிக்கு 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் இரண்டு (திருத்தச்) சட்டமூலம் (சட்டமூல இலக்கம் 70 மற்றும் 80) தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.இதன் பின்னர் 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை விசர்நாய்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர், ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-10-15
பேராதனை ரணபிம ரோயல் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.பேராதனை ரணபிம கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன கல்லூரியுடன் இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு உரையாற்றிய பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர அவர்கள், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக அமைகின்றன எனத் தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது ஓர் அலங்காரம் அல்ல என்றும், பிறரின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்காலத்தில் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான முழுமையான பொறுப்பு இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் உரியது எனத் தெரிவித்த அவர், பாரம்பரியமான சிந்தனைச் சட்டகங்களுக்கு அப்பால் சிந்திப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் மனிதவள அபிவிருத்திப் பிரிவின் பிரதானியும் நிர்வாக உதவிப் பணிப்பாளருமான சூலா ஹேரத் அவர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.பேராதனை ரணபிம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையினரும் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தமது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திட்டங்கள் தொடர்பில் சபைக்கு விளக்கமளித்தனர்.இதன்போது, மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவில், பேராதனை ரணபிம கல்லூரியின் அதிபர் எம். எம். பெரேரா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks