02

E   |   සි   |  

2026-10-09

செய்தி வகைகள் : செய்திகள் 

ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை பிரதமர் சந்தித்தார்

ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.


ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர, இலங்கையுடன் ஆசிய மன்றம் நீண்டகாலமாக பேணிவரும் பங்குடைமைக்கும், நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.


அண்மையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு பிரதிநிதிகள் குழுவினர் பாராட்டுத் தெரிவித்ததுடன், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமையையும் பாராட்டினர்.


இச்சந்திப்பில், இலங்கையில் ஆசிய மன்றம் முன்னெடுத்து வரும் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த எதிர்பார்க்கும் முக்கிய துறைகள் தொடர்பில் பிரதிநிதிகள் குழுவினர் விளக்கமளித்தனர். அவற்றில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றம், பெண்களின் பொருளாதார வலுவூட்டல், பராமரிப்புப் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவை அடங்குகின்றன.


சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் உறுதிப்பாடுகளுடன் இணைந்து, பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதும் சமமானதுமான பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதிநிதிகள் குழுவினருக்கு விளக்கமளித்தார்.


அத்துடன், நல்லாட்சியை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக பொது நிறுவனங்களை வலுப்படுத்துதல், நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், ஊழலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அரசாங்க வருவாய் திரட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.


எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பணியாளர்களை உருவாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கும் கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன் அடிப்படையிலான கல்வியை விரிவுபடுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் டிஜிட்டல் மாற்றத்தையும் முன்னேற்றுவது தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பொதுச் சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


இந்தச் சந்திப்பில் ஆசிய மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தூதுவர் கெத்லீன் ஸ்டீபன்ஸ், சபையின் தலைவர்  தூதுவர் ரொபர்ட் ஓ. பிளேக் ஜூனியர் உள்ளிட்ட ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகளும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-10-09

2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE Tax) மூலம் 569,193 மில்லியன் ரூபா வருமானம்

2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE Tax) மூலம் அரசாங்கம் 569,193 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார். 2022ஆம் ஆண்டில் 25,546 மில்லியன் ரூபாவும், 2023ஆம் ஆண்டில் 144,955 மில்லியன் ரூபாவும், 2024ஆம் ஆண்டில் 197,572 மில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டில் 201,120 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தினால் வரியாக ஈட்டப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களால் வாய்மூல விடைக்கான வினாக்களாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ், மாதாந்தம் 150,000 ரூபாவைத் தாண்டிய வருமானத்தைப் பெறும் அனைத்து ஊழியர்களினதும் வருமான மூலம் தனியாள் முற்பண வருமான வரிக்கு (APIT – Advance Personal Income Tax) உட்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், வேறு எந்தவொரு மூலத்திலிருந்தும் வருமானம் பெறும் நபர்களின் வரி விதிக்கத்தக்க வருமானம் சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும் பட்சத்தில், அவர்களும் தனிநபர் வருமான வரிக்கு உட்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.அரசாங்கத்தின் நிதித் தேவைகள் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, PAYE வரியின் வருடாந்த வரி விலக்கு வரம்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.இதன்படி, 2019ஆம் ஆண்டு வரை 1,200,000 ரூபாவாக இருந்த வரி விலக்கு வரம்பு, 2020ஆம் ஆண்டில் 3,000,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2022/2023ஆம் ஆண்டில் அந்த வரம்பு மீண்டும் 1,200,000 ரூபா வரை குறைக்கப்பட்டது. அதேவேளை, 2025ஆம் ஆண்டில் வரி விலக்கு வரம்பு 1,800,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.எதிர்காலத்தில் PAYE வரியின் வரி விலக்கு வரம்பு மற்றும் வரி வீதங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின், அரசாங்க வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation) செயற்பாட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு அது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


2026-10-09

சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவு

சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக, இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் அடையாளம் காணப்பட்டிருந்ததாக கௌரவ  கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான  வினாக்களுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியல் எதுவும் இல்லை எனவும், விண்ணப்பிக்கும் சிறுநீரக நோயாளர்களின் தகைமைகளின் அடிப்படையில் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


2026-10-09

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்கள் இரண்டிலும் 658,081 பேர் இணைவு

சமூகப் பாதுகாப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்களிலும் 658,081 பேர் இணைந்துள்ளதாகவும், 2026 ஜூலை மாதம் வரையில் ஓய்வூதியம் பெறும் 37,474 பேருக்கு ஓய்வூதியமாக 39,000,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் கௌரவ  கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். இதற்கமைய ஆரஸ்ஸாவ முன்திட்டமிடல்  திட்டத்தில் 551,549 பேரும், சுரெகும ஓய்வூதியத் திட்டத்தில் 106,532 பேரும் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இத்தகவல்களை வழங்கினார். ஆரஸ்ஸாவ திட்டமானது 17 வயது வரையிலான சிறுவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்திட்டமிடல் ஓய்வூதியத் திட்டமாகும். இதன் கீழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பொறுப்பின் கீழ் சிறுவர்களை இத்திட்டத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள முடியும். இதன்படி, அவர்கள் 18 வயதை அடையும் போது கணக்கு முதிர்ச்சியடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சுரெகும ஓய்வூதியத் திட்டமானது 18 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அரச ஓய்வூதியம் பெறாத, முறைசாராத் துறையில் பணியாற்றும் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், குறிப்பிட்ட இலக்குக் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்ப கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


2026-10-08

செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வை போற்வற்றில் சர்வதேச அனுபவங்களின் ஊடாக சட்டவாக்க ஆய்வுகளை வலுப்படுத்தும் இலங்கை பாராளுமன்றம்

“பாராளுமன்ற ஆய்வுகளில் சாட்சியங்கள், புத்தாக்கம் மற்றும் தெலைநோக்குப் பார்வை” எனும் தலைப்பில் 2026 செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை பிராட்டிஸ்லாவாவில் அமைந்துள்ள ஸ்லோவாக் குடியரசின் தேசிய சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுபவப் பகிர்வு பயிற்சி நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்றத்தின் தூதுக்குழு பங்கேற்றது. இலங்கைப் பாராளுமன்றத்துடனான Inter Pares பங்குடமையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாராளுமன்றத்தின் ஆய்வுப் பிரிவின் தொடர்ச்சியான அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஐரோப்பாவின் முன்னணி பாராளுமன்றங்களின் ஆய்வுச் சேவைகளுடன் ஒப்பீட்டு ரீதியான அனுபவப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுப் பணிச்சுற்று, தர உறுதிப்படுத்தல், எளிதில் அணுகக்கூடிய ஆய்வுகளை உருவாக்குதல், டிஜிட்டல் அறிவு முகாமைத்துவம், செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துதல் மற்றும் எதிர்கால நோக்குடன் கூடிய ஆய்வு முறைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமை தாங்கியதுடன், பிரதான நூலகர் சியாத் அஹமட், சிரேஷ்ட ஆராய்ச்சி உத்தியோகத்தர் மொஹமட் அஜிவதீன், சிரேஷ்ட ஆராய்ச்சி உத்தியோகத்தர் டெக்ஷிலா எரந்ததி லொகுகே, முறைமைப் பகுப்பாய்வாளர் நிஷான் விக்கிரமசிங்க மொஹொட்டிகே மற்றும் பிரதிப் பிரதான உத்தியோகத்தர் சசினி குணசேகர ஆகியோர் உள்ளடங்கினர்.சட்டவாக்க ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதும் இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது. செயற்கை நுண்ணறிவு முகாமைத்துவம்,  தரவுப் பாதுகாப்பு, இரகசியத்தன்மை, துல்லியத்தன்மை, அரசியல் நடுநிலைமை மற்றும் கடுமையான மனித மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவன ரீதியான கட்டமைப்புகள் தொடர்பில் பங்கேற்பாளர்கள் ஆராய்ந்தனர். ஆதாரங்களைத் திரட்டுதல், ஆவணங்களை ஒப்பிடுதல், சுருக்கங்களைத் தயாரித்தல் மற்றும் அறிவு முகாமைத்துவம் ஆகிய பணிகளை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் விதம் தொடர்பிலும் நடைமுறை அமர்வுகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.அத்துடன், சட்டவாக்க ஆய்வுகளில் எதிர்கால நோக்குடன் கூடிய அணுகுமுறையின் மூலோபாய முக்கியத்துவமும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. Horizon scanning, போக்குகளை அடையாளம் காணுதல் மற்றும் சாத்தியமான எதிர்கால நிலைமைகளை உருவாக்குதல் போன்ற முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உடனடி அரசியல் சுழற்சிகளுக்கு அப்பால் எதிர்கால சவால்களை முன்கூட்டியே எதிர்பார்ப்பதற்கும், பொதுக் கொள்கைகளின் நீண்டகால தாக்கங்களை ஆய்வு செய்வதற்கும் சட்டவாக்க ஆய்வாளர்களால் சட்டவாக்க உறுப்பினர்களுக்கு சிறந்த ஆதரவை வழங்க முடியும்.இந்த விஜயத்தின்போது, பிரதிநிதிகள் குழுவினர் ஸ்லோவாக் குடியரசின் தேசிய சபையின் செயலாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்ததுடன், சபாநாயகர் கலரி மற்றும் தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கான கலாசார விஜயங்களையும் மேற்கொண்டனர்.இத்தகைய பெறுமதிமிக்க ஆற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து முன்னெடுத்ததற்காக ஸ்லோவாக் குடியரசின் தேசிய சபை, International IDEA மற்றும் Inter Pares Partnership ஆகியவற்றுக்கு இலங்கைப் பாராளுமன்றம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன், செக்கியா, ஹங்கேரி, ஒஸ்திரியா, இத்தாலி, லித்துவேனியா மற்றும் அமெரிக்க காங்கிரஸ் ஆய்வுச் சேவை ஆகியவற்றின் நிபுணர்கள் மற்றும் பங்காளிப் பாராளுமன்றங்களுக்கும் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வழங்கிய பங்களிப்புக்காக நன்றி தெரிவிக்கப்படுகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks