பார்க்க

01

E   |   සි   |  

2026-09-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2026ஆம் ஆண்டின் 01ஆம் மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டு சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழான கட்டளை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து குறித்த ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டளைகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், வெளிநாட்டு முதலீடுகள், புலம்பெயர்ந்தவர்கள் தமது நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் மற்றும் வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் அதன் வெளிநாட்டு செலாவணித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இங்கு, 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகளின் கீழ் இலங்கையில் வசிப்பவர்களால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள தகுதியுடைய நபர்கள், முதலீடு செய்யக்கூடிய துறைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு மூலதனத்தை மாற்றும்போது பொருந்தும் வரம்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்குத் தேவையான நிதி வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகள் தொடர்பில், புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் உள்ள தமது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதற்குப் பொருந்தும் வரம்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் கொடுப்பனவு ஊடாக மூலதனத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் மற்றும் வாடகை வருமானம், வட்டி மற்றும் இலாபப் பங்குகள் போன்ற நடப்பு வருமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல் தொடர்பில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் குறித்தும் குழுவில் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள தற்காலிக வரம்புகள் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

பொருளாதார நிலைமை மேம்படுவதுடன், குறித்த வரம்புகளைப் படிப்படியாகத் தளர்த்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் குழுவிடம் மேலும் தெரிவித்தனர்.

ஏற்றுமதியாளர்கள் முந்தைய ஆண்டில் நாட்டிற்கு கொண்டுவந்த ஏற்றுமதி வருமானம் மற்றும் அந்த வருமானத்தின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டு வர்த்தகர்களுக்கு சர்வதேச சந்தையில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், வெளிநாட்டு செலாவணி சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளியேறுவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் அதற்காக நடைமுறையில் உள்ள கண்காணிப்பு முறைகள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வங்கித் தரவுகள் மற்றும் சுங்கத் தரவுகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அத்துடன் வெளிநாட்டு செலாவணி முறைகேடுகளைத் தடுப்பதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், உள்நாட்டு கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் வர்த்தக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும்போது தேவையான வங்கி உத்தரவாதங்கள் மற்றும் ஏனைய நிதி வசதிகள் தொடர்பில் நிலவும் வரம்புகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின்போது, விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பிலும் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையும் வகையில் தேவையற்ற ஒழுங்குவிதிகளை விதிப்பதன் மூலம் வர்த்தகர்களை ஊக்கமிழக்கச் செய்யும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். வெளிநாட்டு செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதன் காரணமாக நாட்டிற்குள் வரும் வெளிநாட்டு செலாவணியின் அளவும் குறையக்கூடும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஒழுங்குவிதிகளில் அமெரிக்க டொலர் 2 மில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கட்டளையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக அந்தத் தொகை அமெரிக்க டொலர் 0.75 மில்லியன் என குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பிலும் குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வெளிநாட்டு செலாவணித் திணைக்கள அதிகாரிகள், அமெரிக்க டொலர் 0.75 மில்லியன் என்ற வரம்பு சுமார் 6 மாத காலத்திற்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும் எனவும், 2027 ஆம் ஆண்டில் அதனைத் தளர்த்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதேபோன்று, பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு இந்த வரம்பு அமெரிக்க டொலர் 0.2 மில்லியனாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வரம்புகளை விட அதிகளவிலான வெளிநாட்டு செலாவணியை மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் நடவடிக்கை எடுக்க முடியும் என வெளிநாட்டு செலாவணித் திணைக்களம் தெரிவித்தது. இதன்போது, குறித்த அங்கீகாரம் வணிகத்தின் நிதிநிலை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இவ்வாறான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகளவான சொத்துக்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கு அதிகமாகக் கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.



தொடர்புடைய செய்திகள்

2026-10-21

போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டங்களைத் திருத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு சட்டமூலங்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்குப் பிணை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகளைத் திருத்துதல் மற்றும் கனாபிஸ் செடியின் சட்டரீதியான வரைவிலக்கணத்தைத் தெளிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான இரு சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (ஒக். 15) ஆராயப்பட்டு, சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுவில், கைப்பற்றப்பட்டு அரசாங்கத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கும், அச்செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் தொடர்பில் சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கையை 60 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளுதல், அந்த அறிக்கை கிடைத்த பின்னர் 15 நாட்களுக்குள் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் போதைப்பொருட்களை அழித்தல் ஆகியவற்றுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.அத்துடன், சந்தேகநபர் ஒருவர் இல்லாத அல்லது போதைப்பொருட்கள் கைவிடப்பட்டுச் சென்றுள்ள சந்தர்ப்பங்களில், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையையும் சாட்சியங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அச்செயற்பாட்டைப் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளியாகப் பதிவு செய்தல், தேவை ஏற்படின் இரண்டாவது ஆய்வகப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக மாதிரியைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் மற்றும் அதிகளவிலான போதைப்பொருட்களிலிருந்து பிரதிநிதித்துவ மாதிரிகளைப் பெறும்போது விஞ்ஞான ரீதியான முறையைப் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கான முன்மொழியப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்குப் பிணை வழங்குவது தொடர்பான சட்ட ஏற்பாடுகளைத் திருத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, 100 கிராம் வரையிலான எடையைக் கொண்ட போதைப்பொருட்கள் தொடர்பான பிணை விண்ணப்பங்களை உரிய மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், அந்த எடை வரம்பை மீறும் சந்தர்ப்பங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த 10 கிராம் என்ற வரம்பைத் திருத்துவதன் நோக்கம், இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமடைதல் உள்ளிட்ட காரணங்களால் சந்தேகநபர்கள் நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்படுவதைக் குறைப்பதுடன், சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கும் பங்களிப்பதாகும் எனவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்கள் விடயத்தில், கட்டளைச் சட்டத்தின் 54(1) ஆம் பிரிவுடன் தொடர்புடைய ஏற்பாடுகளைத் திருத்துவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.இந்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் மேலதிகத் திருத்தங்கள் குழுநிலையில் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், சட்டமூலங்கள் இரண்டும் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், சந்தன சூரியஆராச்சி மற்றும் தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-10-15

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் கௌரவ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இங்கு பெருந்தோட்டத்துறையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். பெருந்தோட்டக் காணிகளில் பயன்படுத்தாத பகுதிகளைப் பயன்படுத்துவது, பெருந்தோட்டங்களில் உள்ள மக்களுக்கு காணப்படும் காணிப் பிரச்சினை, வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-10-15

கொழும்பு துறைமுக நகரின் முதலீட்டு முன்னேற்றம், வர்த்தகங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடல்

கொழும்பு துறைமுக நகரில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு (BSI) வழங்கப்பட்டுள்ள அங்கீகாரங்கள், எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 08) பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோருடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலிண சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களாக (BSI) அண்மையில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வணிகங்கள் மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இங்கு முன்வைக்கப்பட்டதுடன், துறைமுக நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவற்றின் விற்பனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கொழும்பின் பிரதான வர்த்தக வலயத்திற்கு அண்மித்த பகுதியில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 1.12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 9 காணித்துண்டுகள் இதுவரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 6 காணித்துண்டுகளைக் குத்தகைக்கு விடுவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.அத்துடன், அரசாங்கத்திற்குச் சொந்தமான 4 காணித்துண்டுகளை, மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் ஏழில் ஒரு பங்கிற்குச் சமமான அளவில், சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான காணித்துண்டுகள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் விளக்கமளித்தனர்.இந்தக் காணிகள் 99 வருட காலப்பகுதிக்குக் குத்தகைக்கு வழங்கப்படுவதுடன், ஒரு சதுர மீற்றரின் சராசரி பெறுமதி 3,000 அமெரிக்க டொலர்களாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மொத்தக் குத்தகைத் தொகையில் 1 சதவீதத்திற்குச் சமமான 398 மில்லியன் ரூபா இதுவரை ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.துறைமுக நகரில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பயனாளி உரிமையாளர்களை அடையாளம் காணுதல், வெளிநாட்டு முதலீடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குமுறைச் செயன்முறைகள் தொடர்பிலும் குழு ஆராய்ந்தது.அதேவேளை, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு சுமார் 14,300 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட தகவல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களைக் கண்காணிப்பதற்கான நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.துறைமுக நகரில் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் நாட்டின் சர்வதேச நற்பெயரைப் பாதுகாப்பதற்கும் உரிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புத் திட்டங்களில் வீடுகளை வாங்குவதற்கு எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களால் முன்கூட்டியே செலுத்தப்படும் பணத்தின் (Pre-Sale Deposits) பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழு விளக்கம் கோரியது. இதன்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் அத்தகைய பணம் குறித்த திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் மற்றும் அப்பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் எஸ்க்ரோ (Escrow) கணக்கு முறைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், துறைமுக நகருக்குக் கிடைத்துள்ள உண்மையான வெளிநாட்டு முதலீட்டின் அளவு, அங்கீகரிக்கப்பட்ட வணிகங்களின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பான தகவல்களும் குழுவில் கலந்துரையாடப்பட்டன.


2026-10-14

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்வது தொடர்பான பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் குறித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை பாராளுமன்ற விசேட குழுவிடம்

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்துவது தொடர்பான பொதுமக்களின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்ற விசேட குழுவிடமர் சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்னவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அண்மையில்  கூடியபோதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 31 முன்மொழிவுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பாக முன்னர் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற   குழுக்களின் அறிக்கைகளையும் ஆழமாக மீளாய்வு செய்து அறிக்கையிடுவதற்கான நிபுணர்கள் குழுவில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சாமிந்த அபேசிங்க, எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினர் கலாநிதி கே.தவலிங்கம், மற்றும் வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்ன குறிப்பிடுகையில், முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் மற்றும் கருப்பொருள்கள் தொடர்பில் தனித்தனியான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.தற்போது அரசியல் கட்சிகளினாலும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அத்துடன் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள அனைத்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் மீளாய்வு செய்து, இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், நாட்டின் பிரஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு தமது திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதேவேளை, தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட காலத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவும் குழு தீர்மானித்துள்ளது. அத்துடன், பொது மக்களின் கருத்துக்களை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்தவர்கள் விரும்பினால் அவர்களின் தனிப்பட்ட முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியும் என்றும் குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தின் பின்னர் குழுவின் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே,  கௌரவ பிரதியமைச்சர்களான சட்டத்தரணி சுனில் வட்டகல, முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி.அலவத்துவல,  கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயக்கொடி, சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks