பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-08-06
எதிர்காலத் தலைவர்களாக உருவாகக் கூடிய மாணவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருப்பதும் மிகவும் அவசியமானது என கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார். அதேபோன்று, மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும்போதும் அவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும் ஜனநாயக ஆட்சி செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இங்கு மேலும் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர், மாணவர் பராயம் முதலே ஒழுக்கத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பெரியோருக்கு மதிப்பளித்து கஷ்டத்தை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேறுவதில் மாணவர்கள் உறுதியான கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கல்வி பயின்று நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செலுத்துபவர்கள் என்றும், பாடநெறிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படாமல், தலைமைத்துவப் பண்புகள், குழுவாகப் பணியாற்றுதல் மற்றும் முடிவெடுக்கும் திறன் போற்றவற்றை வெளிப்படுத்துவது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மேலும் வழி வகுக்கும் என்றும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட இணைச் செயலாளர் (ஜனாதிபதி நிதியம்) சுபாஷ் ரோஷன் அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகளை விளக்கினார். அதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் பொதுசன தொடர்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மாணவர் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடையே உரையாற்றும் போது, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் மனிதாபிமானம் நிறைந்த குடிமக்களாக மாறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் சியாத் அஹமட் அவர்கள், இலங்கைப் பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சபாநாயகர் தேர்தல் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்புடன் தொடங்கியது. இதன் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுக்களின் சார்பில் பாடசாலையில் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவ பிரதிசபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பி.பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-10-23
‘பிரஜா சக்தி’ வறுமையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 25,000 மில்லியன் ரூபா நிதியில், 23,000 மில்லியன் ரூபா மாவட்ட மட்டத்தில் சமூக அபிவிருத்திச் சபைகளால் அடையாளம் காணப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2,000 மில்லியன் ரூபாவிலிருந்து தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படும் நடுத்தர அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பதிலிலேயே அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் 24,221.38 மில்லியன் ரூபா செலவில் 15,725 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15,316 திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தியின் கீழும், 273 திட்டங்கள் கல்வியின் கீழும், 136 திட்டங்கள் சுகாதாரத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துத் திட்டங்களையும் 2026.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகள் ஊடாக, அந்தந்த மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதற்கு நேரடியாகப் பங்களிக்கும் திட்டங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சமூகச் சூழல், மனித வள அபிவிருத்தி, பராமரிப்பு, விநியோக வலையமைப்புகள் மற்றும் அணுகல் வசதிகள் ஆகிய துறைகளின் கீழ் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் ஊடாக மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கல்வி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அமைச்சுகள் ஊடாகவும் மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி அல்லது ஏனைய நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.அத்துடன், மாற்றுத்திறனாளிகளையும் அவர்களது குடும்ப அலகுகளையும் வலுவூட்டும் நோக்கில், அவர்களுக்கென விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், நிதியுதவி வழங்குதல், நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
2026-10-22
மிளகு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக மரபியல் பண்புகளின் மதிப்பீடு, நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், பயிர் மேம்பாடு, தாவரப் போசணை முகாமைத்துவம், பயிரியல் ஆய்வுகள், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், பெறுமதி சேர்த்தல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இலங்கையின் மிளகு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் மாவட்டங்களாக கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.தற்போது நாட்டில் பயிரிடப்படும் மிளகு வகைகளில் உள்ளூர் மிளகு வகை, பன்னியூர் 1 மற்றும் டிங்கிரி ரால, கொஹுகும்புரே ரால, பூட்டாவே ரால ஆகிய உள்ளூர் தெரிவு வகைகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.மிளகு பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவதற்காக நடுகைப் பொருட்களை இலவசமாக வழங்குதல், முதலீட்டு உதவிகளை வழங்குதல், சிறிய அளவிலான வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைத் திட்டங்களின் கீழ் மிளகுச் செடிகளை இலவசமாக வழங்குதல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான அறிவையும் உதவிகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன், காலநிலை மாற்றங்களுக்கு மிளகு பயிர்ச்செய்கையை ஏற்புடையதாக்குவதற்குப் பொருத்தமான நீர்ப்பாசன முறைகளை அறிமுகப்படுத்துதல், நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், விலங்குகளால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான முதலீட்டு உதவிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.மிளகு உற்பத்திகளை சர்வதேச தரங்களுக்கு அமைவாகத் தயாரிப்பதற்காகச் சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் சிறந்த உற்பத்தி நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தி, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை உருவாக்குவதற்குத் தேவையான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முதலீட்டு உதவிகள் வழங்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், மிளகு உற்பத்திகளை வெளிநாட்டுச் சந்தைகளில் சேதன உற்பத்திகளாகச் சந்தைப்படுத்தும் நோக்கில், பயிர்ச்செய்கைகளைச் சேதனப் பயிர்ச்செய்கைகளாக மாற்றுதல், அதற்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு உதவிகளை வழங்குதல், அத்துடன் ஏற்றுமதி விவசாயக் கிராமங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.பல்வேறு ஊடகங்கள் ஊடாக மிளகு பயிர்ச்செய்கை தொடர்பான அறிவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், மிளகு உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதிக்குத் தேவையான ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் மற்றும் விநியோகஸ்தர்களையும் கொள்வனவாளர்களையும் தொடர்புபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
2026-10-22
விசர்நாய்க்கடி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்காக 2025ஆம் ஆண்டில் ரூ. 655,824,000 செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் வழங்கிய பதிலிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சர் சபையில் சமர்ப்பித்த பதிலுக்கு அமைய, 2025ஆம் ஆண்டில் நாய்க்கடிக்கு உள்ளாகி விசர்நாய்கடி நோயினால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், 2025ஆம் ஆண்டில் பொதுச் சுகாதார கால்நடை மருத்துவ சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ. 220 மில்லியன் எனவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.பொதுச் சுகாதார கால்நடை மருத்துவ சேவைகள் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் விசர்நாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டில் ரூ. 51 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாய்களுக்குத் தடுப்பூசி வழங்குதல், கருத்தடை செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இத்திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதியாகும்போது நான்கு மாவட்டங்களில் 5,951 தெருநாய்களுக்குக் கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களிலும் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வழங்கிய பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026-10-21
2026 ஒக்டோபர் 20 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட முப்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.அத்துடன், 2026 ஒக்டோபர் 07, 08 மற்றும் 20 ஆம் திகதிய அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட இருபத்தைந்து மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் பதினொரு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாகவும் சபாயாகர் சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks