logo

01

E   |   සි   |  

2026-08-03

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அஸ்வெசும திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான அளவுகோல்களை மறு ஆய்வு செய்வது தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் ஆராய்வு

அஸ்வெசும திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் போது தற்பொழுது நடைமுறையில் உள்ள அளவுகோல்களை மறு ஆய்வு செய்வது தொடர்பான நடைமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் ஆராயப்பட்டது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

அஸ்வெசும திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் தற்போது பயன்படுத்தப்படும் அளவுகோல்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அதனை மறு ஆய்வு செய்யுமாறு குறித்த குழு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதற்கு இணங்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ள புதிய முறை குறித்த முன்னோடி ஆய்வு பற்றி நலன்புரி சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தெரிவுக்கான அளவுகோல்களுக்குப் பதிலாக சமூக-பொருளாதார பாதிப்பு நிலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய முறையை குறித்த  நிபுணர்கள் குழு முன்மொழிந்திருப்பதாகவும், இது தொடர்பான முன்னோடி ஆய்வொன்றை  குறிப்பிட்ட சில மாவட்டங்களில் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஒரு குடும்பத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு, குடும்ப அமைப்பு, வயது, இயலாமை, நீண்டகால நோய்கள், வீட்டுவசதி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல், மற்றும் கடன் சுமை உள்ளிட்ட சமூக-பொருளாதார இடர் காரணிகளைக் கருத்தில் கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய முறைமை குறித்து குழுவில் நிண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய முன்னோடி ஆய்வினை இனை மேற்கொள்வதற்கு குழு அனுமதி வழங்கியது. 

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க மற்றும் எரங்க வீரரத்ன, அத்துடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி நந்தன மில்லகல, திலின சமரகோன், சம்பிக்க ஹெட்டியாராச்சி மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-03

கருங்கல் மற்றும் சரளைக்கல் போன்ற கனிம வளங்களின் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்குப் புதிய சுற்றுநிருபம்

கருங்கல், மணல், மண், சரளைக்கல் மற்றும் களிமண் உள்ளிட்ட கனிம வளங்களின் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் தலைமையில் அண்மையில் கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலணியினால் வெளியிடப்பட்ட செயற்பாட்டு நடைமுறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதனை அமுல்படுத்தும்போது ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.கற்கள், மணல், மண், சரளைக்கல் மற்றும் களிமண் போன்ற கனிம வளங்களுக்காக அறவிடப்படும் கட்டணங்களை ஒழுங்குபடுத்தி, ஒரே சீரான கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.இதற்கமைய,  சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களுடனும் கலந்துரையாடி, பல்வேறு கட்டணங்களை ஒருங்கிணைத்து பொதுவான கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடாத பொதுவான கட்டண முறையொன்றைத் தயாரித்து, அதனை பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. இந்த ஒரே சீரான கட்டண முறையை 2026 செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. கனிம வளங்கள் தொடர்பில் உரிமம் பெறும் நபர் பல்வேறு நிறுவனங்களுக்கு தனித்தனியாகக் கட்டணங்களைச் செலுத்துவதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் அனைத்து கட்டணங்களையும் செலுத்தக்கூடிய முறையொன்றை அறிமுகப்படுத்த இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையில் கட்டணங்களைப் பகிர்ந்தளிக்கும் செயன்முறையையும் முறைப்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், உள்ளூராட்சி நிறுவனங்களினால் அறவிடப்படும் கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்களை மத்திய அரசாங்கத்தின் ஊடாக ஒருங்கிணைந்த முறையில் அறவிட முடியுமா என்பது தொடர்பில் நிலவும் சட்ட மற்றும் நிர்வாக வரம்புகளையும் கருத்திற்கொண்டு, குறித்த நடைமுறை மேலும் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


2026-08-03

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுதல், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், புதிய சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் சமூக சீர்திருத்தத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டத்தை வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் ஆகியோருக்கு இடையிலான வேறுபாட்டைத் தெளிவாக அடையாளம் காண்பது தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.அத்துடன், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.பிணை வழங்கும் நடைமுறைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்தல், சிறிய குற்றங்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதற்குப் பதிலாக மாற்றுத் தண்டனை முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், சிறைச்சாலை நிர்வாகத்தை நவீனமயப்படுத்துதல், அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை வலுப்படுத்துதல், சிறியளவிலான போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் ஏனைய சிறிய குற்றங்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதற்குப் பதிலாக சமூக சேவை போன்ற மாற்று வழிமுறைகளைப் பரிசீலித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் மற்றும் அவர்களுடன் தங்கியுள்ள 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் நலன் தொடர்பிலும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழந்தைகளை 5 வயதுக்குப் பின்னர் நன்னடத்தைப் பராமரிப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களை புனர்வாழ்வு மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வழிநடத்துதல், அத்துடன் பிணைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.குறித்த விடயத்தை மேலும் கலந்துரையாடுவதற்கு குழுத் தலைவர் முன்வைத்த யோசனைக்கு குழு இணக்கம் தெரிவித்தது.மேற்படி விடயம் தொடர்பில் குழுவின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னர், சிறைச்சாலை அதிகாரிகளைச் சந்தித்து அவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும், பல சிறைச்சாலைகளுக்குச் சென்று அவதானிப்புகளை மேற்கொள்வதற்கும் குழு இணக்கம் தெரிவித்தது.இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பி. பெரேரா, ஜீ.ஜீ. பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கே. சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் சட்டத்தரணி ஹசாரா லியனகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.அத்துடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆர். பிரசாத் ஹேமந்த குமார உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


2026-07-30

இலங்கை துறைமுக அதிகாரசபையின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனம்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயலாற்றுகை, அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலைமை, இதற்கு முன்னர் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிரிவாகக் கலந்துரையாடப்பட்டது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைலமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் பதிவுசெய்யப்பட்டுள்ள நிதி முன்னேற்றம் மற்றும் இலாபத்தன்மை தொடர்பில் குழு கவனம் செலுத்தியதுடன், அடைந்துள்ள முன்னேற்றத்தை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக, கொழும்பு துறைமுகம் எதிர்கொண்டுள்ள பிராந்திய மற்றும் உள்நாட்டு போட்டித்தன்மை தொடர்பில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தின் வளர்ச்சி, உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களில் ஒன்றான MSC (Mediterranean Shipping Company) நிறுவனம் அத்துறைமுகத்தில் முதலீடு செய்துள்ளமை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான திட்டங்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் எதிர்கொள்ளக்கூடிய போட்டித் தாக்கங்கள் தொடர்பில் குழு அதிகாரிகளிடம்  கேட்டறிந்தது.அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், அவை தாமதமடைவதற்கான காரணங்கள், கொள்முதல் மற்றும் கேள்விப்பத்திர நடைமுறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அந்தத் தாமதங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதித் தாக்கங்கள் தொடர்பிலும் குழு விரிவாகக் கலந்துரையாடியது.இதன்போது, தாமதங்களுக்கான காரணங்கள் தொடர்பில் முறையான கணக்காய்வொன்றை மேற்கொண்டு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. எதிர்காலத்தில் இவ்வாறான தாமதங்களைத் தவிர்ப்பதற்காக வினைத்திறன்மிக்க கொள்முதல் மற்றும் திட்ட முகாமைத்துவ நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் குழு சுட்டிக்காட்டியது.ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் காங்கேசன்துறை உள்ளிட்ட பிராந்திய துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல், அவற்றைச் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு நிர்மாண நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு ஆற்றலை மேம்படுத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இறுதியாக, துறைமுக அதிகாரசபையின் திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்தல், நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், அரச நிறுவனமொன்றாக அதன் வினைத்திறன் மற்றும் இலாபத்தன்மையை மேலும் அதிகரித்தல் ஆகியவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என குழு வலியுறுத்தியது.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, மஞ்சுல சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, தனுஷ்க ரங்கநாத் மற்றும் சாந்த பத்ம குமார ஆகியோரும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-07-30

பாதியில் கட்டப்பட்ட மற்றும் முடங்கியுள்ள வீட்டுத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ளது

கடந்த காலங்களிலும், முந்தைய அரசாங்கங்களின் கீழும் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் கட்டப்பட்ட மற்றும் முடங்கியுள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கௌரவ வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.கௌரவ அமைச்சர் தலைமையில் நடைபெற்ற வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த வீட்டுத் திட்டங்களைப் பூர்த்திசெய்வதற்கான ஒரு புதிய திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்வது குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுவசதித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன்களும் மானியங்களும் முழுமையாக வழங்கப்படாததால், அந்த வீட்டுவசதித் திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அவ்வாறு முடிங்கிய 5,000 வீட்டுத் திட்டங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவற்றில் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வது குறித்து அடையாளம் கண்டு பரிந்துரைகளை மேற்கொள்ள அமைச்சுக்களின் இரண்டு முன்னாள் செயலாளர்கள்   இணைத் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.இந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளுக்கு அமைய பாதியில் கட்டப்பட்டு கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பாதியில் கட்டப்பட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய குடும்பங்களுக்கு அடுத்த ஆண்டு உதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக ஏறத்தாழ 2,000 குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.குறித்த அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் நீர்வழங்கல் குறித்த பல்வேறு பிரச்சினைகளை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட வீட்டுப் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாக விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks