logo

பார்க்க

02

E   |   සි   |  

2026-07-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முறையான விவசாயத் தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்து

நெல் கொள்வனவு செயன்முறை மற்றும் நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், விவசாய உற்பத்திக்கும் சந்தைத் தேவைக்கும் இடையிலான சமநிலையின்மையைக் குறைப்பதற்காகத் துல்லியமான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

பயிரிடப்படும் பயிர் வகைகள், பயிரிடப்படும் அளவுகள் மற்றும் சந்தைத் தேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலதிக உற்பத்தி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டது.

அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரையில் சம்பா, கீரி சம்பா, நாடு மற்றும் சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் தொடர்பிலும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் திட்டமிடுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கோரிக்கைக்கு அமைய, 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுtதவிசாளரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் பரிசீலிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, கிட்ணன் செல்வராஜ் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு  ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-07-20

மாகாணசபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கை விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில்

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தற்பொழுது காணப்படும் விகிதாசார முறை மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றாமல் வைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்ட இந்தத் தேர்தல் முறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் எழக்கூடிய சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஆய்வுக்குப் பின்னர் எதிர்காலக் கூட்டத்தில் இவ்விடயத்தை மீண்டும் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.மாகாண சபை மற்றும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 33% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக வலியுறுத்தியது. இதற்கமைய, தொடர்புடைய தேர்தல் வழிமுறைகளை வகுக்கும்போது இந்தக் கொள்கை முடிவு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, சட்டத்தரணி சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 


2026-07-16

கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம்

இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021–2024 கணக்காய்வாளர் தலைமையதிபதியின் யகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து “கோபா” குழுவில் விரிவாக ஆராயப்பட்டது

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

தேசிய இளைஞர் கொள்கை வரைபு தொடர்பாக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கவனம்

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks