பார்க்க

01

E   |   සි   |  

2026-07-13

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நெல் கொள்வனவில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து அவதானம் – கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடல்

நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பல புதிய நடைமுறைகளை அமுல்படுத்துவது குறித்து, கௌரவ அமைச்சர் கே. டி. லால் காந்த அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 08) பாராளுமன்றத்தில் கூடிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில்  ஆராயப்பட்டது. 


அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலைக்கு அமைவாக நெல் கொள்வனவை திறம்பட மேற்கொள்வது, மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது, விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வது ஆகியவற்றிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

வியாபாரிகள் விவசாயிகள் போன்று காண்பித்து அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உர மானியப் பயனாளி விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை நெல் கொள்வனவு நிலையங்களுக்கு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், விவசாயி பயிரிட்டுள்ள ஏக்கர் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு அவர் விற்பனை செய்யக்கூடிய நெல் அளவை உறுதிப்படுத்துவதன் மூலம், மோசடியான முறையில் அதிகளவு நெல்லை விற்பனை செய்வதைத் தடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.


நெல் கொள்வனவின்போது எடையை அடிப்படையாகக் கொண்ட தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில், கூட்டுறவு மற்றும் தனியார் களஞ்சியங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குழுவுக்குத் தெரிவித்தனர்.


கூட்டுறவுச் சங்கங்களும் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இணைந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்வதன் மூலமும், சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலமும், போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளுக்கு மேலும் திறம்பட்ட மற்றும் நியாயமான சேவையை வழங்க முடியும் எனவும் குழு வலியுறுத்தியது.


அத்துடன், களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பழமையான கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்தல், அவற்றை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள், மேலும் வனவிலங்கு மற்றும் தொல்பொருள் பாதுகாப்புப் பகுதிகளை அண்டியுள்ள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் போது நிலவும் சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த சேனரத் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




தொடர்புடைய செய்திகள்

2026-10-22

அரச கொள்முதல் செயன்முறையை வினைத்திறனாக்குவதற்கான புதிய கொள்முதல் சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

அரச கொள்முதல் செயன்முறையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், முறைப்படுத்தப்பட்டதாகவும் மாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் புதிய கொள்முதல் சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உ றுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று அண்மையில் (ஒக். 20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான கௌரவ சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோருடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, திலின சமரகோன், அஜித் அகலகட, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.அரச கொள்முதல் செயன்முறை, அதில் பின்பற்றப்படும் தரநிலைகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய துறைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள், பதிவு நடைமுறையில் நிலவும் சிக்கல்கள், சட்டக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் டிஜிட்டல் முறைமைகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது ஏற்படும் தாமதங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.கொள்முதல் செயன்முறையைத் துரிதப்படுத்துவதற்காக கொள்முதல் குழுக்களின் நிதி அதிகார வரம்புகளை அதிகரித்தல், மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் கொள்முதல்களுக்காக நீண்டகாலக் கட்டமைப்பு ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் கொள்முதல் வழிகாட்டல்களைத் தயாரித்தல் ஆகியவை தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், மருந்துப் பதிவு நடைமுறையை நீண்டகால அடிப்படையில் முறைப்படுத்துவதன் மூலம் தாமதங்களைக் குறைத்து சந்தைப் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.அரச கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் PROMIS (Procurement Management Information System) முறைமை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது 19 அமைச்சுக்கள் உள்ளிட்ட 394 செயற்பாட்டிலுள்ள கொள்முதல்  பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் கொள்முதல் செயன்முறைகளைக் கண்காணிப்பதற்கு இம்முறைமை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 2027ஆம் ஆண்டளவில் மாகாண சபைகள் மற்றும் அனைத்து அரச திணைக்களங்களையும் உள்ளடக்கும் வகையில் இம்முறைமையை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.இந்த டிஜிட்டல் முறைமையை அபிவிருத்தி செய்வதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் முன்னைய ஒப்பந்ததாரருடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டமை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. புதிய அபிவிருத்தியாளரைத் தெரிவுசெய்வதற்கான தொழில்நுட்ப மதிப்பீடுகள் நிறைவுசெய்யப்பட்டு, உலக வங்கியின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறைமையை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், தற்போது நடைமுறையிலுள்ள கொள்முதல் வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகளைச் செயற்படுத்துதல், அத்துடன் ஒட்டுமொத்த கொள்முதல் செயன்முறையையும் முறைப்படுத்துவதற்காகப் புதிய கொள்முதல்ச் சட்டத்தைத் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு அமைவாகத் தயாரித்தல், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சட்டமூலத்தைத் திருத்தும்போது எதிர்கொள்ளப்பட்ட சிக்கல்கள் ஆகியன இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் பயனாளி உரிமை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துதல், குறிப்பாக குறித்த நிறுவனங்கள் முன்னர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவையா என்பதைக் கண்டறிதல், அத்துடன் மேன்முறையீடுகள் தொடர்பான நடைமுறைகளை முறைப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.அரச கொள்முதல் செயன்முறையில் காணப்படும் நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் தடைகளைக் குறைத்து, அரச நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக, 2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, 2026ஆம் ஆண்டுக்கான 06ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடும் (நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்) குழுவில் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.இதன்போது, காத்திருப்புப் பட்டியலில் உள்ள கடன் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கி இக்கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


2026-10-21

கொழும்புத் துறைமுகத்தில் காணிகளை குத்தகைக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தல்

2023 ஆம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதிகளுக்காகக் காணிகளை குத்தகைக்கு வழங்கியமை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து முழுமையான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.கொழும்புத் துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத காணிகளைக் குத்தகைக்கு வழங்குதல், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளுக்காகக் காணிகளை ஒதுக்குதல் மற்றும் அவை தொடர்பான சட்டரீதியான சமரச நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் சந்தைப் போட்டித்தன்மை ஆகிய விடயங்கள் குறித்து இத்துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் துறையை போட்டித் தன்மைக்குத் திறந்துவிடுவது தொடர்பில் 2022 ஜூன் 27 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமையவும், 1971 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின்படியும் வெற்றுக் காணிகளைக் குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டிருந்தன. இக்கேள்விப்பத்திர நடைமுறையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றுக்கு பரந்தன் பிரதேசத்தில் வழங்கப்பட்ட காணிக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியாமையினால், துறைமுகத்தின் உட்பகுதியில் மாற்றுக் காணியொன்றை வழங்குமாறு அந்நிறுவனம் கோரியுள்ளதாகத் தெரியவந்தது.குறித்த நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்ட ஆறு மாத காலப்பகுதிக்குள் அளவுசார் இடர் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க முடியாமையினால், இலங்கை துறைமுக அதிகாரசபை அந்த உடன்பாட்டை இரத்துச் செய்திருந்தது. எனினும், அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் சமரச இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.இதற்கமைய, இலங்கை துறைமுக அதிகாரசபையின் மேலதிக முகாமைத்துவப் பணிப்பாளர் (தொழில்நுட்பம்), பிரதம சட்ட அதிகாரி மற்றும் வளாக முகாமையாளர் ஆகியோர் அடங்கிய உத்தியோகத்தர்கள் குழுவொன்று குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரச இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்படி, ஆரம்பத்தில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சுமார் நான்கு ஏக்கர் காணிக்குப் பதிலாக, எண்ணெய் களஞ்சியத்திற்கு அருகில் அமைந்துள்ள சுமார் இரண்டு ஏக்கர் காணியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தில் கூட்டு சமரசப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.துறைமுகத்தின் உட்பகுதியில், கப்பல் துறைக்கும் எண்ணெய் களஞ்சியத்திற்கும் அண்மையில் அமைந்துள்ள காணியைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதன் மூலம் சந்தை ஏகபோக நிலைமை அல்லது நியாயமற்ற போட்டித்தன்மை உருவாகுமா எனக் குழு கேள்வி எழுப்பியது. தற்போது கப்பல்களுக்கான எரிபொருள் களஞ்சியப்படுத்தலில் ஏகபோக உரிமை ஜயபஹலு முனையத்திடம் மாத்திரமே காணப்படுவதால், புதிய முதலீட்டாளர் ஒருவர் வருகை தருவதன் மூலம் அந்த ஏகபோக நிலைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, திறந்த போட்டித்தன்மையை உருவாக்க முடியும் என இலங்கை துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.இந்தச் சமரச ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னர், அது தொடர்பான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அமைச்சுக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் அறிவித்திருந்தது. குறிப்பிட்ட காணியொன்றை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பதுடன், சமரசத் தீர்வாகக் குறித்த காணியை வழங்குவதற்கான முன்மொழிவை இலங்கை துறைமுக அதிகாரசபையே முன்வைத்துள்ளது. எனவே, அந்த முன்மொழிவு முறையாக நியாயப்படுத்தப்பட வேண்டும் எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.“ஒரு தீர்மானம் சரியானதாக இருப்பது மட்டுமன்றி, அது சரியானது என்பதும் வெளிப்படைத்தன்மையுடன் தென்பட வேண்டும்” என்ற கொள்கையின் அடிப்படையில், இந்த நடவடிக்கையின் மூலம் வர்த்தக ஏகபோக நிலைமை உருவாகுமா அல்லது அது இல்லாதொழிக்கப்படுமா, நீண்டகால அடிப்படையில் நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்படுமா என்பன உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையொன்றை ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்புவதற்கு முன்னர், குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவருக்கும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.கொழும்புத் துறைமுகத்தின் செயற்பாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தும் இதன்போது குழு விசாரணை நடத்தியது. செங்கடல், சுயஸ் கால்வாய் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஆகிய பகுதிகளைச் சார்ந்த விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியிலும், கொழும்புத் துறைமுகத்தின் ஐந்து முனையங்களும் இணைந்து, ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 11 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் செயற்பாட்டுத் திறனையும் வருமானத்தையும் அதிகரிக்க முடிந்துள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-10-21

போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டங்களைத் திருத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு சட்டமூலங்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்குப் பிணை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகளைத் திருத்துதல் மற்றும் கனாபிஸ் செடியின் சட்டரீதியான வரைவிலக்கணத்தைத் தெளிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான இரு சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (ஒக். 15) ஆராயப்பட்டு, சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுவில், கைப்பற்றப்பட்டு அரசாங்கத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கும், அச்செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் தொடர்பில் சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கையை 60 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளுதல், அந்த அறிக்கை கிடைத்த பின்னர் 15 நாட்களுக்குள் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் போதைப்பொருட்களை அழித்தல் ஆகியவற்றுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.அத்துடன், சந்தேகநபர் ஒருவர் இல்லாத அல்லது போதைப்பொருட்கள் கைவிடப்பட்டுச் சென்றுள்ள சந்தர்ப்பங்களில், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையையும் சாட்சியங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அச்செயற்பாட்டைப் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளியாகப் பதிவு செய்தல், தேவை ஏற்படின் இரண்டாவது ஆய்வகப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக மாதிரியைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் மற்றும் அதிகளவிலான போதைப்பொருட்களிலிருந்து பிரதிநிதித்துவ மாதிரிகளைப் பெறும்போது விஞ்ஞான ரீதியான முறையைப் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கான முன்மொழியப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்குப் பிணை வழங்குவது தொடர்பான சட்ட ஏற்பாடுகளைத் திருத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, 100 கிராம் வரையிலான எடையைக் கொண்ட போதைப்பொருட்கள் தொடர்பான பிணை விண்ணப்பங்களை உரிய மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், அந்த எடை வரம்பை மீறும் சந்தர்ப்பங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த 10 கிராம் என்ற வரம்பைத் திருத்துவதன் நோக்கம், இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமடைதல் உள்ளிட்ட காரணங்களால் சந்தேகநபர்கள் நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்படுவதைக் குறைப்பதுடன், சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கும் பங்களிப்பதாகும் எனவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்கள் விடயத்தில், கட்டளைச் சட்டத்தின் 54(1) ஆம் பிரிவுடன் தொடர்புடைய ஏற்பாடுகளைத் திருத்துவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.இந்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் மேலதிகத் திருத்தங்கள் குழுநிலையில் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், சட்டமூலங்கள் இரண்டும் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், சந்தன சூரியஆராச்சி மற்றும் தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-10-15

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் கௌரவ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இங்கு பெருந்தோட்டத்துறையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். பெருந்தோட்டக் காணிகளில் பயன்படுத்தாத பகுதிகளைப் பயன்படுத்துவது, பெருந்தோட்டங்களில் உள்ள மக்களுக்கு காணப்படும் காணிப் பிரச்சினை, வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks