logo

02

E   |   සි   |  

2026-06-11

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பொதுப் படுகடன் செலுத்துவதற்காக பொதுத் திறைசேரியிடம் காணப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமற்போனமை தொடர்பான அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னிலையில்

பொதுப் படுகடன் செலுத்துவதற்காக பொதுத் திறைசேரியிடம் காணப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமற்போனமை தொடர்பாக, நிதி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு வழங்கப்பட்டிருந்த அறிக்கை குறித்துக் கலந்துரையாடுவதற்காக அக்குழு அண்மையில் (ஜுன் 08) பாராளுமன்றத்தில் கூடியது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் கூடிய இக்குழுக்கூட்டத்தில், கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிரி பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை கணினி அவசர தாயார்நிலைக் குழுவின் (CERT) அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வறிக்கையைப் பரிசீலித்த பின்னர் இது தொடர்பிலான தங்களது பிறிதொரு அறிக்கையையும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதற்கமைய, இவ்விரு அறிக்கைகளையும் பரிசீலித்த பின்னர் இறுதி அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-11

காணி முகாமைத்துவத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் நவீனமயப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-08-11

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக, நிதி மற்றும் டிஜிட்டல் முகாமைத்துவ செயற்பாடுகள் குறித்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் அவதானம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவம், நிறுவன ஆளுகை, உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு, டிஜிட்டல் கட்டமைப்புகளின் முகாமைத்துவம், ஒழுக்காற்று விசாரணைகள், வெளிநாட்டு கல்வி விடுமுறையைப் பெற்றுக்கொண்ட விரிவுரையாளர்களின் பிணை ஒப்பந்தங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பேராதனைப் பல்கலைக்கழகம் உள்நாட்டு தரவரிசையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், உலகளாவிய தரவரிசையில் பின்னடைவை எதிர்கொள்வதாகக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட நிலைமையல்ல என்றும், சர்வதேச போட்டித்தன்மை அதிகரித்துள்ளதன் காரணமாக ஏற்பட்ட நிலைமையாகும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தரவு முகாமைத்துவம் தொடர்பிலும் குழு விசேட கவனம் செலுத்தியது. ERP கட்டமைப்பின் நிலையான சொத்துக்கள் குறித்த மொடியுலை நடைமுறைப்படுத்தும்போது சேவை வளங்குனரின் திறன் போதுமானதாக இல்லாமை, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை, தனியார் துறையுடன் ஒப்பிடுகையில் நிலவும் சம்பள வேறுபாடுகள் காரணமாக திறமையான தொழில்நுட்ப அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் காணப்படும் சிரமம், கட்டமைப்புகளைப் புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாத மென்பொருள் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நிரந்தரமானதும் நிபுணத்துவம் வாய்ந்ததுமான தொழில்நுட்பக் குழுவொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பிலும் குழு கடுமையான கவனம் செலுத்தியதுடன், சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாமல் இருப்பது மற்றும் சட்டரீதியான, நிர்வாகரீதியான தாமதங்கள் காரணமாக நிறுவனத்திற்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.வெளிநாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத விரிவுரையாளர்கள் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. இதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பில் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 201 மில்லியன் ரூபாய் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முடிந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்தப் பிரச்சினையை தனியொரு பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரம் தீர்க்க முடியாத காரணத்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு அனைத்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் வகையில் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், பிணை ஒப்பந்தங்களை மீறிய விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி, அவர்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையவழி ஊடாக இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் பங்களிக்கச் செய்வது போன்ற மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது  குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.இறுதியாக, பல்கலைக்கழகத்தின் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்துவதற்காக, கணக்காய்வு பரிந்துரைகள் மற்றும் குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டிஆரச்சி, தினேஷ் ஹேமந்த, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷண எகொட விதான, எம். கே. எம். அஸ்லம் மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-08-10

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், ஒரு தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்குத் தேவையான அதிகாரிகளை சேவையில் இணைந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினர்.புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நன்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு நடவடிக்கைகளை திறைமையான முறையில் முன்னெடுப்பதற்கு சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, முஜிபுர் ரஹ்மான், எம்.கே.எம்.அஸ்லம், தர்மசிறி விஜேசிங்ஹ, மேஜர் ஜெனரல் (ஒய்வு)  ஜி.டி.சூரியபண்டார ஆகியோரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 


2026-08-10

வரி முகாமைத்துவ மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் அவசியம் குறித்து பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் வலியுறுத்து

இலங்கையின் நிதிச் செயற்பாடுகள், வரி வருமானம் சேகரிப்பின் முன்னேற்றம் மற்றும் வரி முகாமைத்துவ மறுசீரமைப்புகள் தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. வரி முறையை மேலும் திறன்மிக்கதாக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் நிறுவனங்களின் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய  பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுக் கூட்டத்திற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர் இங்கு இலங்கையின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் வரி முகாமைத்துவ மறுசீரமைப்புகள் தொடர்பில்  விரிவாக ஆராயப்பட்டது.2026 ஆம் ஆண்டுக்கான வரித் திட்டம், 2026 ஜூன் 30 ஆம் திகதி வரையான வரி வருமான சேகரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வருமான மதிப்பீடுகள், வரி வகைகளுக்கு ஏற்ப வருமான செயல்திறன், வரி அடிப்படை, தற்போதைய வரி இணக்க நிலை, வரி முறையை எளிமைப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் RAMIS முறைமையின் முன்னேற்றம், டிஜிட்டல் சேவைகளுக்குப் பொருந்தும் வரிகள், வரி முகாமைத்துவத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.அண்மைக்கால வரிக் கொள்கை திருத்தங்கள் மற்றும் வருமான முகாமைத்துவ நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் நிதித் துறையில் ஓரளவு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக வரி நிர்வாகத்தை நவீனமயப்படுத்துதல், வரி செலுத்துவோரின் அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி இணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.வரி முறையை மேலும் திறன்மிக்கதாக்குவதற்காக மின்னணு சேவைகளை விரிவுபடுத்துதல், நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் முறைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.மேலும், வரி நிர்வாகத்தில் காணப்படும் சவால்களாக முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளை வரி வலையமைப்பிற்குள் கொண்டுவருதல், தொழில்நுட்ப முறைமைகளைப் புதுப்பிக்க வேண்டிய தேவை, தரவு ஒருங்கிணைப்பில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் குறிப்பிட்ட துறைகளுக்குத் தேவையான மனித வளங்களை அபிவிருத்தி செய்தல் ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், RAMIS முறைமையை மேம்படுத்துதல், மின்னணு பதிவுசெய்தல், வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்தல் மற்றும் கொடுப்பனவு முறைகளை விரிவுபடுத்துதல், தரவு முறைமைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் வரி நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் திறன்மிக்கதாக்குவதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, பேராசிரியர் ருவன் ரணசிங்க, எரங்க வீரரத்ன மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, கே. சுஜித் சஞ்சய பெரேரா, கலாநிதி நந்தன மில்லகல, சுனில் பியன்வில மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks