பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-05-29
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மோசமான காலநிலை மாற்றத்தினால் யானைகள் மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பது தொடர்பில் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இதுபற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக எல்-நினோ மற்றும் லா–நினோ காலநிலையினால் யானைகள் மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இது பற்றி விளக்கமளித்தனர்.
காலநிலை மாற்றத்தினால் வனஜீவராசிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் முதற் கட்டமாக யானை மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்துக் கவனம் செலுத்துவதுடன், எதிர்காலத்தில் இவ்விடயத்தை விரிவாக ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பரிந்துரைகளை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
காலநிலை தொடர்பான நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். யானை மனிதன் மோதல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, ரியாஸ் பாரூக், சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-05-29
அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” ஒன்றை உருவாக்குவதற்காக, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் கடந்த மே 25 மற்றும் 27ஆம் திகதிகளில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமானது இயலாமையுடைய நபர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்முனை அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், இயலாமையுடைய சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள சமூகப் பங்கேற்பு மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைத் தொடர்வதற்கும், புதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதற்கும் இயலாமையுடைய நபர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பணியாற்றும் துறைசார் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமது சார்பிலான முன்மொழிவுகளை முன்வைத்தனர்.தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் குறித்த கலந்தாய்வுச் செயல்பாட்டில், இயலாமையுடைய நபர்கள் நேரடியாகவும் தேசிய அளவிலும் பங்களிப்பது இதுவே முதல் முறை என ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார். இந்த இரு நாட்களிலும் இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புள் வாய்மொழி விளக்கங்களை முன்வைத்ததுடன், ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட எழுத்துபூர்வமான முன்மொழிவுகள் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த முன்மொழிவுகள், நிதி மானிளங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, அணுகல்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உதவி தொழில்நுட்ப சாதனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள், சட்ட உதவி, தரவு முகாமைத்துவம், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிற முன்னுரிமைகள் உட்பட அவர்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் குறித்து உள்ளடக்கியுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் கோப்புக்களாக்கி ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒன்றியத்தினால் நேரடியாகக் கையளிக்கப்படும் என ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.இதில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) இக்கூட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கியது.
2026-05-29
சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.வெவ்வேறு ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் காரணமாக 400, 500 சாரதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலபேர் வேறு வருமானங்களைப் பெற்று வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பல்வேறு சட்ட ஏற்பாடுகளின் கீழ் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் அவர்களுக்கு சம்பளத்தைச் செலுத்த வேண்டியிருப்பதாகவும், இவ்வாறு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சிலர் தனியார் பஸ்களில் சாரதிகளாகப் பணியாற்றி வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.இவ்விடயம் தொடர்பில் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான சட்ட ஆலோசனையை உடனடியாகப் பெறுமாறும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் கௌரவ அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.அத்துடன், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய சட்டக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாக இத்துறையை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கை மற்றும் புகையிரத திணைக்களத்தை வினைத்திறனான மற்றும் திருப்திகரமான சேவைகளை வழங்கும் இடமாக மாற்றுதல் தொடர்பான உபகுழுவின் இடைக்கால அறிக்கை என்பனவும் இங்கு சமர்ப்பிக்கப்பட்டன.நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருடைய கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இது குறித்து விசாரித்த குழுத் தலைவர், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, (வைத்தியர்) பிரசன்ன குணசேன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-05-29
2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட பொருத்தனை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள கட்டளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தி கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2026 ஜனவரி 5ஆம் திகதிய 2470/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டளை 2026.05.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் ஊடாக குற்றவியல் கருமங்களில் இருதரப்பும் பரஸ்பர நீதி ஒத்துழைப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, பயங்கரவாாதத்துடன் தொடர்பான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காகவுள்ள நிதிகளைச் குற்றச் செயல்களின் வரும்படிகள் மற்றும் சாதனங்களையும் கண்டறிதல், தடை செய்தல், இழப்பித்தல் மற்றும் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்தல், புலனாய்வு செய்தல், வழக்குத் தொடருதல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான குற்றவியல் கருமங்களில் ஒத்துழைப்பதனூடாகவும் பரஸ்பர சட்ட உதவியளிப்பதனூடாகவும் பொருத்தனையின் இரு திறத்தவர்களின் பங்கும் மேம்படுத்தப்பட்ட பயனுறுதியுடன் சம்பந்தப்பட்டதாகின்றது.நீதித்துறையில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 2018ஆம் ஆண்டின் பின்னர் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாமையினால் இது வரையில் 2647 வெற்றிடங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அத்துடன், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் நீதித் துறையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இவற்றுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks