logo

E   |   සි   |  

2026-05-27

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் சீனக் குடியரசில் செயலமர்வு

கௌரவ வெகுஜன ஊடக பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்கள் தலைமையிலான இருபது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு பாராளுமன்ற அதிகாரிகளைக் கொண்ட இலங்கைத் தூதுக் குழுவினர் சீனாவில் நடைபெறும் செயலமர்வுக்காக கடந்த மே 25ஆம் திகதி புறப்பட்டனர். சீனாவின் பீஜிங் மற்றும் குவங்டாங் மாகாணங்களில் மே 25ஆம் திகதி முதல் ஜூன் 5ஆம் திகதி வரை சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தூதுக் குழுவினர் சீனா சென்றுள்ளனர்.

இலங்கைத் தூதுக் குழுவினர் மே 25ஆம் திகதி பீஜிங்கைச் சென்றடைந்ததுடன், மே 26ஆம் திகதி பீஜிங் ஃபெங்கூ நிலையத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் உத்தியோகபூர்வமாகப் பங்கேற்றனர்.

இலங்கைத் தூதுக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினார். அத்துடன், பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுரகத்தின் பிரதித் தூதுவர் பூர்னிமா குணசேகர மற்றும் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கியூ ஐஜூன் ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

இலங்கைத் தூதுக் குழுவினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தொடர்ச்சியான விரிவுரைகள், கலந்துரையாடல்கள், நிறுவனங்களுக்கான விஜயங்கள், ஆளுகை, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு நவீனமயமாக்கல், தொழில்நுட்ப புத்தாக்கம், பசுமை அபிவிருத்தி மற்றும் சீனாவின் நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகள் போன்றவற்றை இலக்காகக் கொண்டு பீஜிங், சென்ஜென் மற்றும் குவங்டாங் மாகாணங்களுக்கான கள விஜயங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன.

இந்தச் செயலமர்வில் இலங்கையின் பங்கேற்பானது இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால பரஸ்பர உறவுகள், பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஈடுபாடுகள், நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசுக்கு இடையிலான அறிவுப் பகிர்வு என்பவற்றை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

இலங்கைத் தூதுக் குழுவில் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் கௌரவ பிரதியமைச்சர் ரி.பி.சரத், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசாநாயக்க, ரோஹன பண்டார, டபிள்யூ.எச்.எம்.தர்மசேன, உபுல் கித்சிறி, தாஹிர் மரிக்கார், சந்தன தென்னக்கோன், தர்மப்பிரிய திசாநாயக்க, சுசந்த குமார நவரத்ன, நந்தன பத்மகுமார, ஸ்டீபனி பெர்னான்டோ, (வைத்தியர்) ஸ்ரீ பவானந்தராஜா, ஈ.எம்.பஸ்நாயக்க, மொஹமட் சரீப் பஸ்மின், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், தினேஷ் ஹேமந்த பெரேரா, சமந்த ரணசிங்க, அப்துல் வாசித் மற்றும் ரொஷான் அக்மீமன ஆகியோர் உள்ளடக்கியுள்ளனர்.

அத்துடன், பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, நிதி பணிப்பாளர் கமகே சரத் குமார, சிரேஷ்ட பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் லால் குமாரசிறி மற்றும் பிரதான பாராளுமன்ற ஒழுங்குமரபு அதிகாரி அமா விதானகே ஆகிய அதிகாரிகளும் இக்குழுவில் இணைந்துள்ளனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks