பார்க்க

E   |   සි   |  

2026-05-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு முதற் தடவையாகக் கூடியது

  • குழுவிற்குப் பொதுமக்களின் முன்மொழிவுகளைப் பெறவும் தீர்மானம்


தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.

தேர்தல் முறைமை தொடர்பான சட்டம், அத்துடன் வாக்காளர்களைப் பதிவுசெய்யும் சட்டம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டம், கடந்த காலங்களில் குறித்த சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இக்குழுவினால் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

அத்துடன், மேற்கூறிய சட்டங்களைத் திருத்தியமைத்தல், சீரமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் தேவையை மதிப்பிடுவதும், தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களையும் திருத்தங்களையும் பரிந்துரைப்பதும் இந்தக் குழுவின் பணியாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை நடத்துவது அவசியம் எனக் குழு தீர்மானிக்கும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் குழு முன்னிலையில் அழைப்பதற்கும், எந்தவொரு ஆவணம் அல்லது அறிக்கையை சமர்ப்பிக்கக் கோருவதற்கும், குழு அவசியமெனக் கருதும் எழுத்துபூர்வமான அல்லது வாய்மொழியான அனைத்துச் சான்றுகளைப் பெறுவதற்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அதேநேரம், குழுவின் பணிகளுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்கள் மற்றும் வல்லுநர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவும், இந்த மதிப்பாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின்  உறுப்பினர்கள் ஏகமனதாக இணங்கினர்.

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜே.சீ.அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-23

“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

பாராளுமன்றத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு நேற்று (செப். 22) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டன.சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க அவர்கள் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டவரைவு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.2026.09.22 அன்று கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் குறித்தும் சட்டமா அதிபர் குழுவிற்கு விளக்கமளித்தார். அத்துடன், இரு சட்டமூலங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் நீதித்துறையின் ஆற்றலை விரிவுபடுத்துதல், மேன்முறையீட்டு நீதிக்கான பிராந்திய மட்டத்திலான அணுகலை மேம்படுத்துதல், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்தல், நீதிபதிகளின் அனுபவத்தைத் தக்கவைத்தல் மற்றும் நீதிபதிகளை நியமிக்கும் நிறுவன ரீதியான செயன்முறையை மேம்படுத்துதல் ஆகியவை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையையும் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், மாகாண மட்டத்திலான மேல் நீதிமன்றங்களின் நீதித்துறை ஆற்றலை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதுடன், 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர் மாகாண சிவில் மேல் நீதிமன்றங்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன.இதன் விளைவாக வழக்குகள் குவிந்து காணப்படுவதும், அவற்றை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதங்களும் காரணமாக மேலதிக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதற்காக நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 4ஆவது பிரிவைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது.சட்டரீதியான ஓய்வுபெறும் வயதெல்லைகளைத் திருத்துவதன் மூலம் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதும் இந்தத் திருத்தங்களின் மற்றுமொரு நோக்கமாகும்.இதற்கமைய, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க,  வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், தர்மப்பிரிய விஜேசிங்க, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.டி. சூரியபண்டார மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோரும், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர்  ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம மற்றும் கயான் ஜனக ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-23

இயலாமையுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விசேட குழுவின் கவனம்

இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போது இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட குழு அண்மையில்  பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த.த சில்வா, தினேஷ் ஹேமந்த மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போதும், அவர்களது இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைத்து பயன்படுத்தும் போதும் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இங்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள், இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்ப வழங்கப்படும் மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் அதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வது, பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கான பார்வைப் பரப்பளவு உள்ளிட்ட மருத்துவத் தகைமைகளை கருத்திற்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கக்கூடிய வாகன வகைகளை விரிவுபடுத்துவது, வாகனங்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவது மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.செவித்திறன் குறைபாடுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போதுள்ள சட்ட நிலைமை, விசேட அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சைகை மொழி பெயர்ப்பாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஊனமுற்ற நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைக்கும் செயன்முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஒரு நபருக்கு பல வாகனங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், மருத்துவப் பரிசோதனை செயன்முறையை எளிமைப்படுத்துதல் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான இணையவழி முறைமையை மேம்படுத்துதல் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள், பிரதேச மட்டத்தில் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு, இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்து உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-23

ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  பரிசீலிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையிலான குறித்த குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அவர்களின் தலைமையில் கூடியபோது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாக இது அமைந்துள்ளது.ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் புதிய பதவிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள பதவிகளைத் தரமுயர்த்துதல் மேற்கொள்ளப்பட்டபோது, “பணிப்பாளர்” என்ற பதவிப் பெயர் “பணிப்பாளர் நாயகம்” என மாற்றப்பட்டிருந்த போதிலும், 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தில் அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் திருத்தப்படவில்லை.அத்துடன், தொடர்புடைய ஏனைய திருத்தப்பட வேண்டிய பதவிப் பெயர்களும் திருத்தப்படாமல் இருந்தன. இந்தச் சட்டமூலத்தின் மூலம் அவ்வாறான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், குறித்த சட்டத்தில் “அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் வரைவிலக்கணங்கள், தற்போதைய உற்பத்தி மற்றும் சந்தை நிலைமைகளை கருத்திற்கொள்ளும்போது நடைமுறைக்கு ஒவ்வாத தன்மைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய மற்றும் எதிர்கால ஏற்றுமதி விவசாயத் துறைக்கு பொருத்தமான வகையில் குறித்த வரைவிலக்கணத்தை மீள வரையறுத்து திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அதற்கமைய, சட்டத்தின் 19 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “ஏற்றுமதி விவசாயப் பயிர்” என்ற பதத்தின் வரைவிலக்கணத்திற்குப் பதிலாக, உணவுப் பயிர் வகையைச் சேர்ந்த நெல், மரக்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் மேலதிக உணவுப் பயிர்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, உள்நாட்டு நுகர்வுக்கு மேலதிகமாக ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட பயிராக அடையாளம் காணப்பட்டு, இந்தச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் “அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிராக” பொறுப்பான அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு பயிரைக் குறிக்கும் வகையில் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், பெருந்தோட்டப் பயிராக அடையாளம் காணப்படும் எந்தவொரு பயிரும் இதற்குள் உள்ளடக்கப்படக் கூடாது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இலங்கையிலிருந்து மிளகு உள்ளிட்ட பயிர்களை ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் குழு விசாரணைகளை மேற்கொண்டது. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து 12,910 மெட்ரிக் தொன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய கொள்வனவாளராக இந்தியா விளங்குவதாகவும் இதன்போது தெரியவந்தது.குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் சிலரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-23

அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான உபகுழு

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் மற்றும் அதன் காரணமாக சிரேஷ்ட ஆசிரியர்கள் அதிபர் சேவையில் இணைவதற்கு தயக்கம் காட்டுவது தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற உபகுழுவொன்றை நியமிக்க கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்தது.கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில்  பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.2014 ஒக்டோபர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம், ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவது பதவி உயர்வாகக் கருதப்படாமல் “புதிய நியமனம்” எனக் கருதப்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடு தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் IIIஆம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது, சம்பள அதிகரிப்புகளுக்கு இடையிலான பாரிய வேறுபாடு காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், 03/2014 சுற்றறிக்கையின் மூலம் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக சரிசெய்தல் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், சேவைக்காலம் அதிகரிக்கும்போது ஆசிரியர் சேவையில் தொடர்ந்திருந்தால் கிடைக்கக்கூடிய உயர்ந்த சம்பள அதிகரிப்புகள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சம்பள இடைவெளி ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.இதன் காரணமாக ஆசிரியர் சேவையின் முதலாம் மற்றும் 2-Iஆம் தரங்களில் உள்ள சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அதிபர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அதிபர் சேவையில் இணைவதற்கும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவதை “புதிய நியமனம்” என்பதற்குப் பதிலாக “பதவி உயர்வு” எனக் கருதும் வகையில் சேவைப் பிரமாணக் குறிப்பைத் திருத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஆசிரியர் சேவையில் பதவி உயர்வுகளை வழங்கும் முறைமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பல்கலைக்கழகமொன்றிலிருந்து நியமனம் பெற்று வரும் புதிய ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்தை அடைவதற்கு சுமார் 19 வருட சேவைக்காலம் தேவைப்படுவதாக குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.அத்துடன், கல்விமாணி (B.Ed) பட்டதாரிகளை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆசிரியர் சேவையின் 2ஆம் தரத்திற்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, 2030ஆம் ஆண்டு வரை கல்விமாணி பட்டதாரிகளுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த முறையின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவது தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவுடன் வாய்மொழி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. அதன்படி, இந்த வருடத்திற்குள் B.Ed பட்டதாரிகளை ஆசிரியர் சேவையின் 2ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.இந்த ஆட்சேர்ப்பை தற்போது முன்னெடுக்கப்படும் 23,000 ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் உள்ளடக்காமல், மாகாண மட்டத்தில் நிலவும் பாடசார் வெற்றிடங்களின் அடிப்படையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடப்பட்டது.பாடசாலை முறைமையில் நிலவும் உண்மையான பாடத் தேவைகளுக்கு ஏற்ப B.Ed பட்டப்படிப்புகளைப் புதுப்பிப்பதற்காக பல்கலைக்கழகங்களுக்கு 2030ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆரம்பக் கல்வி போன்ற துறைகளுக்காக விசேட B.Ed பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.இதேவேளை, தென் மாகாணத்தில் 261 ஆய்வுகூடப் பணியாளர்கள் மற்றும் காவலாளிகளுக்கு அதிகமாக வழங்கப்பட்ட சம்பளத்தை மீள அறவிடுவது தொடர்பான பிரச்சினை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. 2008-2009ஆம் ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்ப சம்பளப் படிக்குப் பதிலாக 12ஆம் சம்பளப் படியில் அவர்களை நிலைநிறுத்தியதன் காரணமாக சுமார் 50.8 மில்லியன் ரூபா மேலதிக சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.இந்த விடயம் 2016ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டில் இது தொடர்பில் கணக்காய்வு விசாரணையொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது சம்பள அதிகரிப்புகளை இடைநிறுத்துதல் மற்றும் சம்பளத்திலிருந்து தொகையை அறவிடுதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் 15.1 மில்லியன் ரூபா மீள அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிர்வாகத் தவறுக்கு ஊழியர்கள் நேரடியாகப் பொறுப்பல்ல எனவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களில் குறிப்பிட்ட சம்பள அளவுத்திட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.அதன்படி, ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தென் மாகாண ஆளுநரின் சாதகமான தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, இது தொடர்பில் அவரது கவனத்திற்குக் கடிதமொன்றை அனுப்பவும் குழு தீர்மானித்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks