E   |   සි   |  

2026-03-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்கவும் - சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த மார்ச் 17ஆம் திகதி கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மின்சார உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் தரம் குறித்த பிரச்சினை காணப்படுவதால், அதனைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும்போது வெளியேறும் சாம்பலின் அளவு கணிசமான அளவு அதிகரித்திருப்பதும் இங்கு தெரியவந்தது. இவை சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சுற்றுக்காட்டிய குழு, இதற்குத் தேவையான திட்டத்தை மாவட்ட செயலாளர் தலைமையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தியது. 

அகற்றப்படும் சாம்பலை மீள் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறும், அதனால் ஈட்டப்படும் வருமானத்தை குறித்த மின்னுற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்படும் அப்பிரதேச மக்களின் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது. 

அத்துடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தினால் நீர் மாசு மற்றும் வளிமாசு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது. அதேநேரம், நுரைச்சோலை மின்நிலையம் தொடர்பில் குழு அனுப்பும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்குமாறு வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரைத்தது. 
இந்த மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு அதிகரித்திருந்தாலும், பறக்கும் சாம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு போதுமானதாக இருப்பதை அவதானிக்க முடிந்ததாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மின்னிலையத்திற்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், ரோஷன் அக்மீமன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், உபுல் கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-21

SLIATE நிறுவனங்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உபகுழு கூடியது

நாடு முழுவதிலும் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் (ATI) நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உபகுழு அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (SLIATE) தற்போதைய தொழிற்பாடுகள், வளப் பயன்பாடு, மாணவர் தக்கவைப்பு மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பாடநெறிகளை அமைத்தல் ஆகியவை குறித்து ஆராய்வதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப் - COPE) இந்த உபகுழு நியமிக்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாப்பலகம அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ATI நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான பரிந்துரைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது, SLIATE அமைப்பிடம் உள்ள வளங்கள் போதியளவில் பயன்படுத்தப்படாமை, காலாவதியான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்கள், அத்துடன் சம்பள மற்றும் கொடுப்பனவு முரண்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், சில ATI நிறுவனங்களின் நிர்வாகப் பிரச்சினைகள், அதிகளவிலான மாணவர்-விரிவுரையாளர் விகிதம், விடுதி வசதிக் குறைபாடு, வாழ்க்கைச் செலவு மற்றும் மாணவர் நலன்புரிப் பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் பாடநெறிகளை பாதியிலேயே கைவிட்டுச் செல்லுதல் போன்ற பிரச்சினைகள் குறித்தும் அந்நிறுவனங்களின் மாணவர்களும் அதிகாரிகளும் குழுவிடம் தெளிவுபடுத்தினர். வேலைவாய்ப்புச் சந்தையில் HND தகைமைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் அந்நிறுவனங்கள் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், HND பாடநெறிகளை பட்டப்படிப்பு மட்டம் வரை தரம் உயர்த்துதல், பாடத்திட்டங்களைப் புதுப்பித்தல், கைத்தொழில் துறையுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


2026-09-18

பொதுநலவாய 2026 புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருது திரு. சுகத் வசந்த த சில்வாவுக்கு

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மற்றும் சனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றிற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பைப் பாராட்டி, இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுகத் வசந்த த சில்வா அவர்களுக்கு பொதுநலவாய 2026 புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருது (CPA New Parliamentarian Award 2026) கிடைத்துள்ளது.தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நேற்று (செப். 17) நடைபெற்ற 69 ஆவது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இவ்விருது அவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.2024 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது விழிப்புலனற்ற பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தவிசாளராகச் செயற்பட்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்குப் பங்காற்றியுள்ளார்.பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறை ரீதியான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் இவர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளைப் பங்கேற்கச் செய்து இலங்கையின் முதலாவது தேசிய பங்கேற்பு வரவுசெலவுத் திட்ட ஆலோசனையை நெறிப்படுத்தியமை அவற்றுள் பிரதானமாகும்.


2026-09-17

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருவது தொடர்பான ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும்  வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-17

பகிடிவதைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks