2026-01-07
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் குறித்து ஆராயும்போது அதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் புதிதாக நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் ஊழியர்களுக்கான வருமான வரி விலக்களிப்புக்களை கட்டுப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு நிலைமாற்று காலமாக 3 வருடங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திருத்தம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் குறிப்பாக புதிய அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கான வருமான வரி விலக்களிப்பை நீக்கும் அதேவேளை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிலைமாற்று காலத்தை வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து குழு விளக்கம் கோரியது.
அத்துடன், முதலீட்டாளர்களின் முன்கூட்டிய செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பதிவுச்சான்றிதழொன்று வழங்கப்படும்வரை விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்களில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள், திருத்தப்பட்ட கட்டமைப்பு போட்டித்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்ற உத்தரவாதம் என்பன குறித்தும் குழு ஆராய்ந்தது.
அத்துடன், 1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்கும் வகையில் வெளிநாட்டுச் செலாவணி அமைவது குறித்துக் கேள்வியெழுப்பிய குழு, இலங்கை ரூபாயினால் ஈட்டப்படும் வருமானம், நாணய மாற்று மற்றும் தேசிய நாணய, நிதி ஒழுங்குவிதிகளுக்கு அமைய தொடர்ச்சியாக அவை பேணப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
துறைமுக நகரத்தில் கடல்கடந்த வங்கிச் செயல்பாடுகளுக்கும் உள்நாட்டு வங்கிச் செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் குழு கவனம் செலுத்தியது. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மூலதனம், பணப்புழக்கம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட மத்திய வங்கியின் மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை செய்யும் அதன் வகிபாகம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
துறைமுக நகரத்திற்குள் உள்ள அளவுகோல்களை பின்பற்றாதது, தொடர்புடைய அபராதங்கள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது, மேலும் துறைமுக நகரத்தின் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க கண்காணிப்பு மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்தத் திருத்தங்கள் துறைமுக நகர கட்டமைப்பை செயல்படுத்துதல், புதிய வணிக நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களை செயல்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச உறுதிப்பாடுகளுடன் சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு நன்கொடையாளர்களால் நன்கொடையாக வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் அல்லது ஏதேனும் அரச நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டு, சரியான நேரத்தில் மற்றும் வினைத்திறனான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஒழுங்கு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
போதிய சட்ட ஏற்பாடுகள் காணப்படும் நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிதியை உருவாக்கத் தவறியமை குறித்தும் குழு நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. மேலும் தாமதங்களினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, "“Rebuilding Sri Lanka Fund” நிதியத்தை சட்டப்பூர்வ நிதியமாக நிறுவுவதன் முக்கியத்துவத்தை குழு வலியுறுத்தியது. அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு குழு அங்கீகாரம் வழங்கியது.
இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சுனில் ராஜபக்ஷ, அஜித் அகலகட மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-09-24
சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களது கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களின் சிறந்த நலனுக்கு முன்னுரிமை வழங்குதல், உண்மைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையைப் பேணுதல், அத்துடன் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் தேவையற்ற வகையில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்தல் ஆகியவை இந்த் தேசிய வழிகாட்டியின் பிரதான நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன், இயலாமையுடைய சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின்போது அவர்களது கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, தமிழ் மொழி பேசும் பிரதேசங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக தமிழ் மொழியைப் பயன்படுத்தக்கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்து பயிற்றுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பெண்களும் சிறுவர்களும் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும்போது எதிர்கொள்ளும் மொழிசார் சிரமங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.நாடு முழுவதும் இயங்கும் சிறுவர் இல்லங்களின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதற்காக மத்தியப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்தின் பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.மேலும், ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வது தொடர்பில் காணப்படும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தொழில்நுட்பக் குழுவொன்றின் ஊடாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகளை மீளச் செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், 2027ஆம் ஆண்டளவில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் பொதுவான தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுவான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைமையொன்றை ஏற்படுத்துதல் மற்றும் முன்பள்ளிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளில் காணப்படும் தாமதங்களைக் குறைப்பதற்காக சட்ட வைத்திய அறிக்கைகள் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான விசேட பொறிமுறையொன்றை உருவாக்குதல் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.சிறுவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனையை சட்டரீதியாகத் தடை செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-23
பாராளுமன்றத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு நேற்று (செப். 22) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டன.சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க அவர்கள் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டவரைவு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.2026.09.22 அன்று கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் குறித்தும் சட்டமா அதிபர் குழுவிற்கு விளக்கமளித்தார். அத்துடன், இரு சட்டமூலங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் நீதித்துறையின் ஆற்றலை விரிவுபடுத்துதல், மேன்முறையீட்டு நீதிக்கான பிராந்திய மட்டத்திலான அணுகலை மேம்படுத்துதல், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்தல், நீதிபதிகளின் அனுபவத்தைத் தக்கவைத்தல் மற்றும் நீதிபதிகளை நியமிக்கும் நிறுவன ரீதியான செயன்முறையை மேம்படுத்துதல் ஆகியவை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையையும் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், மாகாண மட்டத்திலான மேல் நீதிமன்றங்களின் நீதித்துறை ஆற்றலை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதுடன், 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர் மாகாண சிவில் மேல் நீதிமன்றங்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன.இதன் விளைவாக வழக்குகள் குவிந்து காணப்படுவதும், அவற்றை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதங்களும் காரணமாக மேலதிக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதற்காக நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 4ஆவது பிரிவைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது.சட்டரீதியான ஓய்வுபெறும் வயதெல்லைகளைத் திருத்துவதன் மூலம் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதும் இந்தத் திருத்தங்களின் மற்றுமொரு நோக்கமாகும்.இதற்கமைய, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், தர்மப்பிரிய விஜேசிங்க, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.டி. சூரியபண்டார மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோரும், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம மற்றும் கயான் ஜனக ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-23
இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போது இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட குழு அண்மையில் பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த.த சில்வா, தினேஷ் ஹேமந்த மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போதும், அவர்களது இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைத்து பயன்படுத்தும் போதும் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இங்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள், இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்ப வழங்கப்படும் மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் அதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வது, பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கான பார்வைப் பரப்பளவு உள்ளிட்ட மருத்துவத் தகைமைகளை கருத்திற்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கக்கூடிய வாகன வகைகளை விரிவுபடுத்துவது, வாகனங்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவது மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.செவித்திறன் குறைபாடுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போதுள்ள சட்ட நிலைமை, விசேட அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சைகை மொழி பெயர்ப்பாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஊனமுற்ற நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைக்கும் செயன்முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஒரு நபருக்கு பல வாகனங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், மருத்துவப் பரிசோதனை செயன்முறையை எளிமைப்படுத்துதல் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான இணையவழி முறைமையை மேம்படுத்துதல் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள், பிரதேச மட்டத்தில் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு, இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்து உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-23
ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையிலான குறித்த குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அவர்களின் தலைமையில் கூடியபோது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாக இது அமைந்துள்ளது.ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் புதிய பதவிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள பதவிகளைத் தரமுயர்த்துதல் மேற்கொள்ளப்பட்டபோது, “பணிப்பாளர்” என்ற பதவிப் பெயர் “பணிப்பாளர் நாயகம்” என மாற்றப்பட்டிருந்த போதிலும், 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தில் அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் திருத்தப்படவில்லை.அத்துடன், தொடர்புடைய ஏனைய திருத்தப்பட வேண்டிய பதவிப் பெயர்களும் திருத்தப்படாமல் இருந்தன. இந்தச் சட்டமூலத்தின் மூலம் அவ்வாறான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், குறித்த சட்டத்தில் “அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் வரைவிலக்கணங்கள், தற்போதைய உற்பத்தி மற்றும் சந்தை நிலைமைகளை கருத்திற்கொள்ளும்போது நடைமுறைக்கு ஒவ்வாத தன்மைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய மற்றும் எதிர்கால ஏற்றுமதி விவசாயத் துறைக்கு பொருத்தமான வகையில் குறித்த வரைவிலக்கணத்தை மீள வரையறுத்து திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அதற்கமைய, சட்டத்தின் 19 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “ஏற்றுமதி விவசாயப் பயிர்” என்ற பதத்தின் வரைவிலக்கணத்திற்குப் பதிலாக, உணவுப் பயிர் வகையைச் சேர்ந்த நெல், மரக்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் மேலதிக உணவுப் பயிர்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, உள்நாட்டு நுகர்வுக்கு மேலதிகமாக ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட பயிராக அடையாளம் காணப்பட்டு, இந்தச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் “அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிராக” பொறுப்பான அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு பயிரைக் குறிக்கும் வகையில் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், பெருந்தோட்டப் பயிராக அடையாளம் காணப்படும் எந்தவொரு பயிரும் இதற்குள் உள்ளடக்கப்படக் கூடாது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இலங்கையிலிருந்து மிளகு உள்ளிட்ட பயிர்களை ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் குழு விசாரணைகளை மேற்கொண்டது. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து 12,910 மெட்ரிக் தொன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய கொள்வனவாளராக இந்தியா விளங்குவதாகவும் இதன்போது தெரியவந்தது.குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் சிலரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.