பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-12-05
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சட்டமூலம் மற்றும் 06 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 12.02.2025ஆம் திகதி கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2459/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்பபட்ட ஒழுங்குவிதி, 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் 6ஆம் பிரிவின் கீழ் 2461/43 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பவற்றுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், 1962ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க வருமான பாதுகாப்புச் சட்டத்தின் கீழான 2457/06 ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 2461/40ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட கட்டளைகள் என்பனவும் இங்கு அனுமதிக்கப்பட்டன.
மேலும், 2011ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் 2461/44 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 மற்றும் 3 பிரிவுகளின் கீழ் 2457/05 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைகளுக்கும் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-25
குழுவிற்குப் பொதுமக்களின் முன்மொழிவுகளைப் பெறவும் தீர்மானம்தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.தேர்தல் முறைமை தொடர்பான சட்டம், அத்துடன் வாக்காளர்களைப் பதிவுசெய்யும் சட்டம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டம், கடந்த காலங்களில் குறித்த சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இக்குழுவினால் மீளாய்வு செய்யப்படவுள்ளன.அத்துடன், மேற்கூறிய சட்டங்களைத் திருத்தியமைத்தல், சீரமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் தேவையை மதிப்பிடுவதும், தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களையும் திருத்தங்களையும் பரிந்துரைப்பதும் இந்தக் குழுவின் பணியாகும்.மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை நடத்துவது அவசியம் எனக் குழு தீர்மானிக்கும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் குழு முன்னிலையில் அழைப்பதற்கும், எந்தவொரு ஆவணம் அல்லது அறிக்கையை சமர்ப்பிக்கக் கோருவதற்கும், குழு அவசியமெனக் கருதும் எழுத்துபூர்வமான அல்லது வாய்மொழியான அனைத்துச் சான்றுகளைப் பெறுவதற்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அதேநேரம், குழுவின் பணிகளுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்கள் மற்றும் வல்லுநர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவும், இந்த மதிப்பாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக இணங்கினர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜே.சீ.அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks