logo

பார்க்க

02

E   |   සි   |  

2025-11-22

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய உத்தேச சட்டமூல வரைபு ஆவணம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்களின் கவனத்திற்கு

எதிர்வரும் காலத்தில் அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடின. 

அந்தக் குழுக்களின் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (நவ. 20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் நீதி அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். 

இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான முதலாவது சட்டமூலம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தனர். அதன்போது, சட்டமூலம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்ட திருத்தங்கள், சட்டமூலத்தின் குழு நிலையின் போது மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவேண்டிய ஏனைய திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டு வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை பத்தாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவுதல், பணக் கடன் வழங்கும் தொழில் மற்றும் நுண்நிதித் தொழில் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் சபையின் அமைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பணிப்பாளர்கள் சபையின் அமைப்பில் நுண்நிதித் தொழில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்குரியது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். விசேடமாக நுண்நிதித் தொழிற்துறைக்கு ஒழுங்குபடுத்தல் இல்லாததால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அல்லது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஒருவர் அல்லது அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்தப் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக இருப்பது பொருத்தமாகும் என கௌரவ உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. 

அத்துடன், இந்த வரைபு ஆவணத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி நுண்நிதித் தொழிற்துறை கீழ் மட்டத்தில் செயற்படுவதால் பாரியதொரு சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, அந்த சமூக நெருக்கடியையும் பாதிப்பையும் தவிர்ப்பதே இதன் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலத்துக்குத் தேவையான திருத்தங்களை உள்வாங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட திருத்தங்களை சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-05

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது அதிகாரிகளின் மரியாதையற்ற நடத்தை தொடர்பில் விளக்கம்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதைய செயலாற்றுகை ஆகியவற்றை ஆராய்வதற்காக 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது, குறித்த அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் இரண்டு உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் கரிசனைகள் எழுந்தன என்பதை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.  பாராளுமன்றக் குழுக்களின் முன் சமூகமளிக்கும் போது பின்பற்ற வேண்டியதாக நிர்ணயிக்கப்பட்ட ஆடை நடைமுறைக்கு இணங்காத வகையிலேயே அதிகாரிகளில் ஒருவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பதைக் குழு அவதானித்தது. மேலும், தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நடைமுறை மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முரணான வகையில், தவிசாளரின் முன் அனுமதியைப் பெறாமலேயே இரு அதிகாரிகளும் குழுவின் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறினர்.  இச்சம்பவங்களைத் தொடர்ந்து, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கௌரவ தவிசாளரினால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையினையடுத்து, பாராளுமன்றத்தை அவமதித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் இரு அதிகாரிகளும் 2026 பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன்னிலையில் ஆஜராகினர். இந்த நடவடிக்கைகளின் போது, அவர்கள் தமது நடத்தைக்காக மனப்பூர்வமான மன்னிப்பைக் கோரினர்.  உரிய பரிசீலனையின் பின்னர், அதிகாரிகள் தமது செயல்களின் தீவிரத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையும், பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கௌரவம் மற்றும் தாபிக்கப்பட்ட நடைமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துள்ளமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையும் கவனத்திற்கொண்டு, ஒழுக்கநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளருடன் இணைந்து அவர்களது மன்னிப்பை ஏற்றுக்கொண்டது.பாராளுமன்றக் குழுக்களின் முன்னிலையில் ஆஜராகும் அனைத்து தனிநபர்களும் மிக உயர்ந்த நடத்தை தரநிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் எல்லா நேரங்களிலும் நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று இந்தக் குழு வலியுறுத்த விரும்புகிறது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுஇலங்கை பாராளுமன்றம்


2026-08-04

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக நிறைவடைந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் சீன விஜயம்

இலங்கைப் பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தூதுக் குழுவினர், சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் அவர்களின் அழைப்பையேற்று 2026 ஜூலை 25ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை சீன மக்கள் குடியரசுக்கு மேற்கொண்ட  உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது.பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் இந்த விஜயத்தின் நோக்கங்களாக அமைந்தன.சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட தூதுக் குழுவிற்கு கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தலைமைதாங்கியதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஓஷானி உமங்கா, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, சட்டத்தரணி கீதா ஹேரத், சட்டத்தரணி ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.இத்தூதுக் குழுவில் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் ஒழுங்குமரபு அலுவலகத்தின் பாராளுமன்ற உத்தியோகத்தர் லஹிரு பத்திரணகே ஆகியோரும் இணைந்திருந்தனர். குவாங்டொங் மாகாணத்தின் ஷென்சென் மற்றும் குவாங்சோ நகரங்களுக்கு இக்குழுவினர் விஜயம் மேற்கொண்டதுடன், உத்தியோகபூர்வ சந்திப்புகள், கல்விசார் அமர்வுகள், நிறுவன ரீதியான விஜயங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் உள்ளடங்கிய விரிவான நிகழ்ச்சித்திட்டங்களிலும் இவர்கள் பங்கேற்றனர். சீனாவின் அபிவிருத்தி அனுபவம், புத்தாக்கச் சூழல் மற்றும் ஆட்சி முறைகள் தொடர்பில் நேரடி அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான பெறுமதிமிக்க வாய்ப்பையும் இந்நிகழ்ச்சித்திட்டம் வழங்கியது.ஷென்சென் விசேட பொருளாதார வலயத்தின் குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கை தொடர்பில் இடம்பெற்ற விரிவுரையிலும் இலங்கைத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இங்கு, சீனாவின் பொருளாதார அபிவிருத்தி மூலோபாயம் தொடர்பான முக்கியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.அத்துடன், Huawei Technologies, Tencent, Mindray, BYD உள்ளிட்ட சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிலையங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர். இதன்போது செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், நவீன சுகாதாரப் பராமரிப்பு, நவீன விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் கைத்தொழில் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நேரடியாக அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவ்விஜயத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஷென்சென் மாநகர அரசாங்கம், குவாங்டொங் மாகாண அரசாங்கம் மற்றும் குவாங்சோ மாநகர அரசாங்கம் ஆகியவற்றின் தலைவர்களுடனான சந்திப்புகளும் இடம்பெற்றன. இதன்போது பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மக்கள் மட்டத்திலான தொடர்புகளை மேம்படுத்துதல், பெண்களின் வலுவூட்டலை ஊக்குவித்தல் மற்றும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் எதிர்காலத்தில் ஒத்துழைக்கக்கூடிய துறைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இவ்விஜயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ஷென்சென் பெண்கள் சம்மேளனத்துடனான சந்திப்பு அமைந்தது. இதன்போது பெண்களின் வலுவூட்டல், சிறுவர் பராமரிப்பு சேவைகள், குடும்ப நலன் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் சீனா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் அறிந்துகொண்டனர். பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பொது வாழ்வில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது தொடர்பில் இருதரப்பினரும் தமது அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொள்வதற்கும் இக்கலந்துரையாடல் வாய்ப்பளித்தது.மேலும், இத்தூதுக் குழுவினர் லியான்ஹுவா மலைப் பூங்கா, ‘Great Tides Surge Along the Pearl River’ கண்காட்சி மண்டபம், குவாங்டொங் அருங்காட்சியகம் மற்றும் குவாங்சோ மெட்ரோ அருங்காட்சியகம் உள்ளிட்ட கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்தனர். இதன்மூலம் சீனாவின் செழுமையான கலாசாரப் பாரம்பரியம், நகர அபிவிருத்தி மற்றும் வரலாற்றுப் பரிணாமம் தொடர்பில் மேலும் ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.இவ்வுத்தியோகபூர்வ விஜயம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், பாராளுமன்றங்களுக்கிடையிலான கலந்துரையாடல், நிறுவன ரீதியான ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.இவ்விஜயத்தின்போது வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் சிறப்பான ஏற்பாடுகளுக்காக சீன மக்கள் குடியரசின் அரசாங்கம், இலங்கைக்கான சீனத் தூதரகம், குவாங்டொங் மாகாண அதிகாரிகள் மற்றும் அனைத்து விருந்தோம்பல் நிறுவனங்களுக்கும் இத்தூதுக் குழுவினர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.


2026-08-03

2026ஆம் ஆண்டுக்கான 03ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மத்திய கிழக்கு யுத்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்ட 71.7 பில்லியன் ரூபா நிவாரணப் பொதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 71.7 பில்லியன் ரூபா நிவாரணப் பொதியின் கீழ் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் அந்த நிதியைப் பயன்படுத்தும் விதம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோரும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, திலின சமரக்கோன் மற்றும் வீரசிறி பஸ்நாயக்க ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக இக்குழுக் கூட்டத்தில் இணைந்துகொண்டனர்.71.7 பில்லியன் ரூபா நிவாரணப் பொதியின் கீழ் அதிகூடிய நிதியான 52.8 பில்லியன் ரூபா எரிபொருள் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது. எரிபொருள் நிறுவனங்களின் இறக்குமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களை இறக்கி வைப்பதற்கான செலவுகள் அதிகரித்ததன் காரணமாக எரிபொருள் விற்பனையில் ஏற்படக்கூடிய நட்டத்தை ஈடுசெய்து, அதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர்.71.7 பில்லியன் ரூபா நிதியானது பிரதானமாக இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அதில், 2026 மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட எரிபொருள் மானியங்கள் உள்ளிட்ட நிவாரணங்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்காக மீளொதுக்கப்பட்ட 52.8 பில்லியன் ரூபாவும், ஏப்ரல் மாத எரிபொருள் மானியம் (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய எரிபொருள் வழங்குநர்களுக்காக), சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான உர மானியம் மற்றும் மீன்பிடித் துறைக்கான மானியம் ஆகியவற்றை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகக் குறைந்துள்ள வருடாந்த வரவு செலவுத் திட்ட கையிருப்பை மீள்நிரப்புவதற்காக மீளொதுக்கப்பட்ட 18.9 பில்லியன் ரூபாவும் அடங்குகின்றன.2026 ஜூன் 11ஆம் திகதி இக்குழுவினால் மீளாய்வு செய்யப்பட்ட 20 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டைப் போலவே, தற்போதைய கோரிக்கையின் ஊடாகவும் 2026ஆம் ஆண்டுக்கான செலவின வரம்போ அல்லது கடன் பெறும் வரம்போ அதிகரிக்கப்படாது எனவும் இதன்போது தெரியவந்தது. இது ஏற்கனவே உள்ள ஒதுக்கீடுகளை மீள்பகிர்ந்தளிக்கும் (reallocation) நடவடிக்கை மாத்திரமே எனவும் தெரிவிக்கப்பட்டது.மொத்தமாக 71.7 பில்லியன் ரூபா நிதியும் ‘தித்வா’ சூறாவளித் தாக்கத்தின் பின்னரான புனரமைப்புப் பணிகளுக்கு  ஒதுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான 01ஆம் இலக்க 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டில் பயன்படுத்தப்படாத மீதித் தொகையிலிருந்து பெறப்படவுள்ளது. (2026 ஜூன் 30ஆம் திகதி வரை அதிலிருந்து 243.9 பில்லியன் ரூபா மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தது.)இதன்படி, இந்த நிவாரணமானது எரிபொருள் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை விடவும், நுகர்வோருக்கான மானியமாகவே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், நிலவிய சூழ்நிலையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தற்காலிக நிவாரணம் மாத்திரமே எனவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.2026 ஏப்ரல் மாதத்திற்கு மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட எரிபொருள் வழங்குநர்களுக்கு சுமார் 20,507 மில்லியன் ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. இதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 15,000 மில்லியன் ரூபாவும், லங்கா IOC நிறுவனத்திற்கு 2,340 மில்லியன் ரூபாவும், சினோபெக் நிறுவனத்திற்கு 1,501 மில்லியன் ரூபாவும், RM Parks நிறுவனத்திற்கு 1,666 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், 71.7 பில்லியன் ரூபா மொத்த நிவாரணப் பொதியின் கீழ் இலங்கை மின்சார சபைக்கு 15 பில்லியன் ரூபாவும், அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு 8.2 பில்லியன் ரூபாவும், யாழ் பருவகால விவசாய நடவடிக்கைகளுக்காக 3 பில்லியன் ரூபாவும், சிறு தோட்ட உரிமையாளர்களுக்காக 2.2 பில்லியன் ரூபாவும், மீன்பிடித் துறைக்காக 1.2 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.மேலும், ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர். சேதமடைந்த பாலங்களைப் புனரமைப்பதற்காக இந்திய மற்றும் சீன அரசாங்கங்கள் உதவிகளை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர மற்றும் ரம்புக்கனை நுழைவாயில்களின் நிர்மாணப் பணிகளை 2028ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான மின்சார விநியோகத்தை ஏற்படுத்துவதற்கான கேள்விப்பத்திரங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அந்தப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.மேலும், ‘எல் நினோ’ நிலைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்திலும் இவ்வாறான காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக ‘அனர்த்த முகாமைத்துவ சட்டபூர்வ நிதியத்தை’ வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அத்துடன், கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளத்தை நிர்ணயிப்பது தொடர்பிலும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அரச சேவையின் சம்பளக் கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்தும் இதன்போது கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன், இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக எதிர்வரும் தினமொன்றில் மீண்டும் கலந்துரையாடுவதற்கு குழு தீர்மானித்தது.


2026-08-03

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் இளைஞர்களுக்காக மூன்று செயலமர்வுகள்

இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பிராந்திய மட்டங்களில் மூன்று செயலமர்வுகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் இணைத்தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.இதற்கமைய, முதலாவது செயலமர்வு 2026 ஓகஸ்ட் 08ஆம் திகதி கம்பஹா மாவட்டத்திலும், இரண்டாவது செயலமர்வு ஓகஸ்ட் 29ஆம் திகதி கிழக்கு மாகாணத்திலும், மூன்றாவது செயலமர்வு செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டியிலும் நடத்துவதற்கு இக்கூட்டத்தில் இணக்கம் தெரிவித்தது.இந்தச் செயலமர்வுகளின் ஊடாக குறிப்பாக இளைஞர் சமூகத்தினருக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்ற எண்ணக்கரு ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பிரஜைகளுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், இந்தியாவில் நடைமுறையில் உள்ள திறந்த பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு தொடர்பான அனுபவங்களை ஆய்வு செய்யும் நோக்கில் மன்றத்தின் உறுப்பினர்களுக்காக கற்றல் விஜயமொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களும், செயலமர்வுகளுக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளரான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks