2025-11-18
அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர்.
அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது.
முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது.
இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-12
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், நிலவும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆராச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுக் கூட்டத்தில், 2026ஆம் ஆண்டுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.இதன்போது, பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கல்விச் சீர்திருத்தங்கள், பாடநூல்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் ஆசிரியர் கல்வியின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், குறித்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைகளிலான தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்திறன், பரீட்சைகளை நடத்துதல், பாடநூல்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன. விசேட தேவையுடைய சிறுவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சீருடைகளை விநியோகித்தல் மற்றும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. புலமைப்பரிசில் கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துவதற்காக புதிய கணினி முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதன் ஊடாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை வைப்பிலிடுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளுடன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டன.இதன்போது, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தமது நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். குறித்த அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.மேலும், வருட இறுதியில் மாத்திரமன்றி, வருடத்தின் இடைப்பட்ட காலத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து, அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அத்துடன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-12
மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் மின்கலத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், அரச ஆராய்ச்சி நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை, 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர்கள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.இதன்போது, இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திடம் காணப்படும் மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலங்களைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மின்கலங்களின் கொள்ளளவு, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பரிசோதிக்கும் ஆற்றல் இந்நிறுவனத்திடம் காணப்படுவதாகத் தெரியவந்தது.எனினும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள், மின்கலங்கள், கட்டுப்படுத்திகள் (Controllers) மற்றும் மின்னேற்ற நிலையங்கள் ஆகியவற்றுக்கான கட்டாய ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகள் இல்லாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, உரிய தரநிலைகளைத் தயாரித்து, அவற்றைப் பரிசோதித்தல் மற்றும் சான்றளித்தல் ஆகியவற்றைக் கட்டாயமாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தினர்.பாரம்பரிய எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம், பயிற்சித் திட்டங்கள் மற்றும் அவ்வாறு மாற்றியமைக்கப்படும் வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பான தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் தகைமையுடைய பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பொருத்தமான சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையொன்றின் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அரச ஆராய்ச்சி நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துதல், நிலவும் குறைபாடுகளைக் குறைத்தல், ஆராய்ச்சி முடிவுகளைப் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒரேவிதமான பணிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை ஒன்றிணைத்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அதிகாரிகள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இலங்கை புத்தாக்குனர்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான மின்சார வேலித் திட்டங்கள், பல்கலைக்கழகங்களை மையமாகக் கொண்ட புத்தாக்க விருத்தி மையங்கள் (Incubation Centers) மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஊடாக புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.நடைமுறைப்படுத்தப்பட்ட நான்கு மின்சார வேலித் திட்டங்களில் மூன்று வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.மேலும், புத்தாக்குனர்களின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாத்தல் மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 'சிறிய காப்புரிமைகள்' (Petty Patents) முறையை அறிமுகப்படுத்துவதற்காக அறிவுசார் சொத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, சதுர கலப்பத்தி, தனுர திசாநாயக்க, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோருடன் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-11
இலங்கை மத்திய வங்கியின் வகிபாகம், பணவீக்க இலக்கீடு, தனியார் துறைக்கான கடன் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அண்மையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ மற்றும் திலின சமரகோன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80(2)(அ) பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநர், ஆளும் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதி ஆளுநர்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றம் அல்லது அதன் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். அத்துடன், 26(5) பிரிவின் பிரகாரம், தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்குகளை அடைவதற்கு மத்திய வங்கி தவறினால், அது தொடர்பான அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதன்போது, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியை அடிப்படையாகக் கொண்ட பிரதான பணவீக்க இலக்கான 5 சதவீதத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்கும் அந்த இலக்கைப் பேணுவதற்கும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர். பணவீக்கம் இலக்கிடப்பட்ட வரம்பின் கீழ் எல்லையான 3 சதவீதத்திற்கும் குறைவான மட்டத்தில் காணப்பட்ட சந்தர்ப்பங்கள் காரணமாக, ஏழு விசேட அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது.2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 2.1 ட்ரில்லியன் ரூபாவாகும். இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் காணப்பட்ட 1.9 ட்ரில்லியன் ரூபாவை விட அதிகமான தொகையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் சுமார் 74 சதவீதமான கடன்கள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்டுள்ளன.எவ்வாறாயினும், குறுகிய காலக் கடன்களின் விகிதம் 42 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக அதிகரித்துள்ளமை மற்றும் நீண்டகாலக் கடன்களின் விகிதம் 35 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாகக் குறைந்துள்ளமை தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. வங்கிகளினால் வழங்கப்படும் கடன்கள் மூலதனத் திரட்டல், புதிய முதலீடுகள் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குப் போதுமான அளவில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், அடமானக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன் வகைகளின் வளர்ச்சி தொடர்பிலும் ஆராயப்பட்டது.இலங்கையின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு நாணயக் கொள்கைக்கு மேலதிகமாக வர்த்தகம், தொழிலாளர் மற்றும் காணி ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, மனித மூலதனத்தை மேம்படுத்துவது, உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வது ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் விளக்கமளித்தபோது, வங்கித் துறையின் மூன்றாம் கட்ட செயலிழந்த கடன்களின் விகிதம் 9.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், வங்கிக் கட்டமைப்பின் மூலதன மற்றும் திரவத்தன்மை மட்டங்கள் ஒழுங்குமுறைத் தேவைகளை விட உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.NDB வங்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு மற்றும் இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் அறிக்கை ஆகியன 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், குறித்த வங்கி தொடர்பில் இலாபப் பங்கீடு, கிளைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பணிப்பாளர் சபை கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.சட்டவிரோதமான முறையில் பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய வங்கியின் ஆளுநர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவங்கள் மற்றும் குரல்களைப் போலியாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான மோசடிகளைத் தடுப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் (CERT), பொலிஸ் மற்றும் Meta நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.இதற்கு மேலதிகமாக, மெய்நிகர் சொத்துக்கள் மற்றும் கிரிப்டோ நாணயங்கள் தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள், கொழும்பு துறைமுக நகரில் செயற்படும் வங்கிகளின் மேற்பார்வை மற்றும் அரச வங்கிகளை ஒன்றிணைத்தல் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
2026-11-10
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவியும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது சிறுவர் உரிமைகளை மேம்படுத்துதல், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத் திறன்களை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நவம்பர் 20ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள “விசேட சிறுவர் பாராளுமன்றப் பங்கேற்பு நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் 1,200க்கும் அதிகமான சிறுவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று தயாரிக்கப்பட்ட சிறுவர் அறிக்கையை (Children’s Statement), 50 சிறுவர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சிறுவர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமொன்றை மீண்டும் ஸ்தாபிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளைத் துரிதப்படுத்துதல், அதற்குத் தடையாக உள்ள சட்டரீதியான இடையூறுகளை நீக்குதல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் கீழ், “This is my right” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணியொன்றை ஏற்பாடு செய்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.இப்பேரணியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கச் செய்ய எதிர்பார்ப்பதாக வருகை தந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர். அத்துடன், வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் சேவை வழிகாட்டியொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்றை நடத்துதல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.இதேவுளை, மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பில் இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின்போது, பாராளுமன்ற ஆய்வு உதவி மற்றும் அறிவுப் பரிமாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமூலங்களைத் தயாரித்தல், ஒப்பீட்டுச் சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் சட்டமூலங்கள் பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்தல் போன்ற துறைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொழில்நுட்ப மற்றும் ஆய்வு உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், சிறுவர் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்கலந்துரையாடல்களில் பாராளுமன்றத்தின் கௌரவ பிரதிக் குழுத் தலைவி ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கௌரவ பிரதித் இணைத் தலைவிகளான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்ல மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.