பார்க்க

01

E   |   සි   |  

2025-11-15

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்படும் தாமதம் குறித்து கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

  • முழுத் திட்டமும் 548 நாட்கள் தாமதமானதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளமை தெரியவந்தது
  • துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் ஏற்றுக்கொள்வது மற்றும் அகற்றுவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது

 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஒட்டுமொத்த திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கடந்த நவ. 13ஆம் திகதி கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அன்றையதினம் கலந்துரையாட முடியாத விடயங்கள் குறித்து மீண்டும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 2021 நவம்பர் மாதம் நிறுவனமொன்றுக்கு ரூ.40,273 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்க ஆமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதுடன், 2025 ஜனவரி 03ஆம் திகதி இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவேண்டியிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தமையால் காலம் நீடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதனைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. இதனால் குறித்த அபிவிருத்தித் திட்டம் 548 நாட்கள் காலதாமதம் அடைந்திருப்பதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியதாகவும், இது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை கோப் குழுவில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவடையும் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதிகாரசபை ஊழியர்களின் உணவுச் செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டு கோப் குழுவால் இது தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலைகளைக் குறைக்க போட்டிமுறையிலான கேள்விப்பத்திரங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி அப்புறப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய குழுவின் தலைவர், நீதிமன்றத்தால் அப்புறப்படுத்துவதற்கும் கையகப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், சீதுவை ரந்தொலுவ விளையாட்டுக் கழகத்தின் பெயர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்வது, குறித்த கழகத்தில் இணைந்த வீர வீராங்கனைகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, எம்.கே.எம்.அஸ்லம், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, திலின சமரகோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-01-08

கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் அனுமதி

நாளை (ஜன. 09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. தொழில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் தலைமையில் மற்றும் தொழில் கௌரவ பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் 2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.தொழில் அமைச்சரினால் 2025.12.12 ஆம் திகதி ஆக்கப்பட்ட இந்த ஒழுங்குவிதி 2025.12.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. "ஏதேனும் வதிவிட வசதியுள்ள ஹோட்டலில் விருந்தினர்களை வரவேற்கும் பெண், பெண்கள் உடை அறை பணியாளர், பெண்கள் ஆடை விற்பனை நிலைய பணியாளர் அல்லது பெண்கள் தூய்மை பணிப்பெண் ஆகிய பதவிகளில், 18 வயது பூர்த்தியடைந்த எந்தப் பெண்ணையும் காலை 6.00 மணிக்கு முன்பும் மலை 6.00 மணிக்குப் பிறகும் பணியில் ஈடுபடுத்தலாம்", எனும் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் இந்த ஒழுங்குவிதி மூலம் திருத்தப்படுகின்றது. அதற்கமைய, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக, ‘வதிவிட வசதியுள்ள ஹோட்டல்களில் உணவு மற்றும் பான வரவேற்பாளர்’ (Food and Beverage Stewardess) பணிகளில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் மாலை 6.00 மணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்னரோ பணியில் ஈடுபடுத்தத் தேவையான சட்டத் திருத்தங்கள் இந்த ஒழுங்குவிதி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், இந்த ஒழுங்குவிதியின் கீழ் 'ஏதேனும் ஒரு பெண் பணியாளரின் பணி நேரம் மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 6.00 மணிக்குமிடையிலான ஒரு நேரத்தில் முடிவடையும் போது, அந்தப் பணி முடிந்த நேரத்திலிருந்து காலை 6.00 மணி வரை அவருக்குப் பொருத்தமான தங்குமிடத்தை வழங்குவது அல்லது அவரது வழக்கமான வசிப்பிடத்திற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது உள்ளிட்ட அந்தப் பெண்ணின் சுகாதாரக்கவனிப்பு மற்றும் நலன்புரிக்கு தொழில்தருனர் பொறுப்பேற்க வேண்டும்', என்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது குழுவில் தெரிவித்தனர்.இலங்கையின் தற்போதைய பெண்கள் சனத்தொகை விகிதம் 51% ஆக இருந்தாலும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 34% ஆகவே உள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக, பெண்களின் தொழில் பங்கேற்புக்கு அதிக வாய்ப்பை வழங்கும் நோக்கில், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அத்துடன் பெண் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பல முன்மொழிவுகளும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயங்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக கௌரவ தொழில் அமைச்சர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-01-08

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.கடந்த குழுக் கூட்டங்களில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, பாடசாலைகளை நடத்திச் செல்வது போன்ற பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை கௌரவ ஜனாதிபதி வழங்கினார். மேலும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காணப்படும் தடைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.அத்துடன், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு மேலதிகமானவர்களை அனுப்புவது போன்ற விடயங்கள் குறித்தும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2026-01-08

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2025.01.08 ஆம் திகதி அங்கீகரிக்கப்படவுள்ள (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த அனுமதி வழங்கப்பட்டது.அதற்கமைய, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2452/40 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம், ‘வீதியொன்றில் மோட்டார் வாகனமொன்றைச் செலுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் எவரேனும் ஒருவர் போதைப்பொருள் பாவித்துள்ளதாகப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நியாயமான சந்தேகம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அந்த நபரை மேலதிகப் பரிசோதனைக்காக அரசாங்க வைத்திய அதிகாரி ஒருவரிடமோ அல்லது வைத்தியசாலையினால் இதற்கென அதிகாரம் வழங்கப்பட்ட ஒரு அதிகாரியிடமோ முன்னிலைப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2455/29 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியின் மூலம், ‘அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஒவ்வொருவரும் பாதுகாப்பு ஆசனப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், நாட்டில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இந்தக்கூட்டத்தின் போது குழுவில் விளக்கமளித்தனர். அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சுமார் 1,481 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட 287 வீதிப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை மீண்டும் நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 86 பில்லியன் ரூபா என அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அதேபோன்று, புகையிரதத் திணைக்களத்திற்கு சுமார் 300 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் 63 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், இலங்கையின் வீதிக் கட்டமைப்பில் அந்தந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, https://road-lk.org/ என்ற இணையதளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட சேதங்கள் குறித்துத் தெரியப்படுத்தும் வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தில், குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் ஏனைய கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


2026-01-08

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கூடியது

டித்வா காரணமாகப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காக 25 மில்லியன் ரூபா தொழிற்படு மூலதனக் கடன், முதலீட்டுத் திட்டம் மற்றும் 5 வீத வட்டியில் 25 மில்லியன் ரூபா கடன் திட்டம் - நிதி அமைச்சின் செயலாளர்நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (ஜன. 07) கௌரவ ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு நிதி வழங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காகப் பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 25 மில்லியன் ரூபா தொழிற்படு மூலதனக் கடன், முதலீட்டுத் திட்டம் மற்றும் 5 வீத வட்டியில் 25 மில்லியன் ரூபா கடன் திட்டம் ஆகியவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.மேலும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு ஏற்கனவே ஒரு பில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் இன்னும் முறையாகப் பயன்படுத்தப்படாமை குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.மேலதிக நிதியை வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதற்கு முன்னதாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிதியை முறையாகப் பயன்படுத்துவதற்கான முறையான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் அமைச்சுக்கு அறிவுறுத்தினார்.அத்துடன், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு வணிகத்தையும் பதிவு செய்வதற்கான பொறிமுறையின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து வர்த்தகச் சமூகத்தினருக்குத் தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.அதற்கமைய, கடந்த அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.அதேபோன்று, அனர்த்தத்தினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks