பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-10-22
செய்தி வகைகள் : செய்திகள்
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசான், கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ, கௌரவ எதிரிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கு சின்னங்களும், கைப்பட்டிகளும் அணிவிக்கப்பட்டன.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் நுழைவாயில் பகுதியில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டும் வகையிலான சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், ஒன்றியத்தினால் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன.
இன்றையதினம் இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பாராளுமன்ற பணியாளர்களும் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடையணிந்து வருகை தந்திருந்தனர்.
அத்துடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வூட்டல் தொடர்பில் பி.ப 4.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையும் விவாதிக்கப்படவுள்ளது.
உலகம் முழுவதிலும் பெண்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதற்கு அமைய இலங்கையில் நாளாந்தம் 15 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இதில் மூவர் உயிரிழப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்
அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் மட்டுமல்ல, இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இந்த சமூகப் பேரழிவை ஒழிக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உள்ளது என்பதும் வலியுறுத்தப்பட்டது. பாடசாலை மட்டத்தில் இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இளஞ்சிவப்பு புதன்கிழமை (Pink Wednesday) என்ற பெயரில் பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் நாட்டில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக, அனைத்துப் பாடசாலைகளினதும் காலைக் கூட்டங்களில் இவ்விடயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட பாடசாலை அதிபர்களின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒன்றியத்தினால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஏனைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் ஸ்ரீனி அழகப்பெரும, விசேட வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாந்து, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் லங்கா ஜயசூர்ய திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
2026-06-02
புத்த பெருமானின் முப்புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை பாராளுமன்ற வளாகம் வாரஇறுதி நாட்களில் வெசாக் விளக்குகளினால் ஒளிமயமாகக் காட்சியளித்தது.வெவ்வேறு வர்ணங்களைக் கொண்ட வெசாக் கூடுகள், ஒளிமயமான விளக்குகள், பௌத்த கொடிகள் உள்ளிட்டவற்றால் பாராளுமன்ற வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அவை பார்ப்பவர்களுக்கு ஆன்மீகரீதியான புத்துணர்ச்சியையும், ஆறுதலையும் அளித்தன.இந்த அலங்காரங்கள் ஊடாக பௌத்த மதத்தில் போதிக்கப்படும் அன்பு, கருணை, ஒற்றுமை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் என்பன குறித்து சமூகத்திற்கு நினைவூட்டப்பட்டதுடன், வெசாக் பண்டிகையின் உண்மையான நோக்கமும் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இரவு நேரத்தில் மின்விளக்குகள் மற்றும் வெசாக் கூடுகளினால் ஜொலித்த அலங்காரங்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு தனி அழகையளித்தன.இனம், மதம் மற்றும் கலாசாரம் கடந்த பௌத்த மதத்தின் உலகளாவிய செய்தியும், அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதின் முக்கியத்துவமும் இந்த வெசாக் அலங்காரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா போதி மரத்தைச் சுற்றியும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இந்த மதச் சடங்குகளின் போது, புத்த பகவானின் ஸ்ரீ தர்மம் நினைவுகூரப்பட்டதுடன், நாட்டிற்கும் மக்களுக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நன்மை உண்டாக வேண்டிய பிரார்த்தனைகளும் முன்வைக்கப்பட்டன.வெசாக் பண்டிகையின் ஒளிமயமான பிரகாசத்துடன் மிளிர்ந்த இலங்கை பாராளுமன்றம், பௌத்த கலாச்சாரத்தின் பெருமிதத்தையும் அதன் ஆன்மீக பாரம்பரியத்தின் மதிப்பையும் தனித்துவமான முறையில் வெளிப்படுத்தியது.
2026-05-30
ஸ்ரீ புத்த ஆண்டு 2570 ஆவது சம்புத்த மும்மங்களங்களை நினைவுபடுத்தும் உன்னதமான வைகாசி விசாக புண்ணிய தினம் இன்றைய தினமாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு மாத்திரமன்றி, இலங்கை மக்களாகிய நமக்கும் இன்றைய தினம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நமது நாட்டின் சமூக, கலாசார விழுமியங்களின் பாரம்பரியமும் அடித்தளமும் பௌத்த தர்மத்தின் மீதே தங்கியுள்ளது. இம்முறை வைகாசி விசாக தினத்தின் கருப்பொருள் "அபித்தரதே கல்யாணே" (Abhittharetha Kalyane) என்பதாகும். அதாவது "பொது நலனுக்காக விரைவாக அணிதிரள்வோம்" என்பதாகும். பொது மக்களின் நல்வாழ்விற்காக அனைத்தையும் துறந்து, தனது வாழ்நாளை அர்ப்பணித்த நமது உன்னத சாஸ்தாவான கௌதம புத்த பெருமானின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த முன்மாதிரியும் இதுவேயாகும். இலங்கை ஒரு நாடு என்ற ரீதியில் கடந்த காலங்களில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தங்களின் போது, எமது இலங்கை தேசம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து நின்ற விதம், எமது சமூகத்தில் உறைந்துள்ள இந்த பௌத்த மத விழுமியங்களை மிகச்சிறப்பாகப் பிரதிபலித்தது என்றும் நான் நம்புகிறேன்.எனவே, புத்த பெருமான் போதித்த உன்னதமான ஆன்மீகச் செய்திக்கு இணங்க நமது வாழ்க்கையைக் கொண்டுசெல்லும் போது, எப்போதும் பொது மக்களின் நல்வாழ்விற்காக நாம் செயலாற்ற வேண்டும். பாதிக்கப்படும் சக மனிதர்களுக்காகவும், பொதுச் சமூகத்தின் நன்மைக்காகவும் செயலாற்றக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தின் ஒரு தூணாக சமயம் திகழ்கிறது. அதற்காகச் சமயத்திற்குள்ளும் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு சமய விழிப்புணர்வின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும், அதன் வழியே மிகவும் ஆரோக்கியமானதொரு சமூகத்தை நாம் சுவீகரித்துக்கொள்ள முடியும் என்றும் நான் நம்புகிறேன்.அதற்கிணங்க, இந்த உன்னதமான மும்மங்கள தினத்தில், முழுச் சமூகமாகப் பொது நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியோடு அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதுடன், இன்றைய வைகாசி விசாகப் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி உரித்தாகட்டும்...!வைத்தியர் ஜகத் விக்ரமரத்னசபாநாயகர்இலங்கைப் பாராளுமன்றம்
2026-05-27
கௌரவ வெகுஜன ஊடக பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்கள் தலைமையிலான இருபது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு பாராளுமன்ற அதிகாரிகளைக் கொண்ட இலங்கைத் தூதுக் குழுவினர் சீனாவில் நடைபெறும் செயலமர்வுக்காக கடந்த மே 25ஆம் திகதி புறப்பட்டனர். சீனாவின் பீஜிங் மற்றும் குவங்டாங் மாகாணங்களில் மே 25ஆம் திகதி முதல் ஜூன் 5ஆம் திகதி வரை சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தூதுக் குழுவினர் சீனா சென்றுள்ளனர்.இலங்கைத் தூதுக் குழுவினர் மே 25ஆம் திகதி பீஜிங்கைச் சென்றடைந்ததுடன், மே 26ஆம் திகதி பீஜிங் ஃபெங்கூ நிலையத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் உத்தியோகபூர்வமாகப் பங்கேற்றனர்.இலங்கைத் தூதுக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினார். அத்துடன், பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுரகத்தின் பிரதித் தூதுவர் பூர்னிமா குணசேகர மற்றும் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கியூ ஐஜூன் ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.இலங்கைத் தூதுக் குழுவினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தொடர்ச்சியான விரிவுரைகள், கலந்துரையாடல்கள், நிறுவனங்களுக்கான விஜயங்கள், ஆளுகை, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு நவீனமயமாக்கல், தொழில்நுட்ப புத்தாக்கம், பசுமை அபிவிருத்தி மற்றும் சீனாவின் நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகள் போன்றவற்றை இலக்காகக் கொண்டு பீஜிங், சென்ஜென் மற்றும் குவங்டாங் மாகாணங்களுக்கான கள விஜயங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன.இந்தச் செயலமர்வில் இலங்கையின் பங்கேற்பானது இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால பரஸ்பர உறவுகள், பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஈடுபாடுகள், நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசுக்கு இடையிலான அறிவுப் பகிர்வு என்பவற்றை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.இலங்கைத் தூதுக் குழுவில் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் கௌரவ பிரதியமைச்சர் ரி.பி.சரத், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசாநாயக்க, ரோஹன பண்டார, டபிள்யூ.எச்.எம்.தர்மசேன, உபுல் கித்சிறி, தாஹிர் மரிக்கார், சந்தன தென்னக்கோன், தர்மப்பிரிய திசாநாயக்க, சுசந்த குமார நவரத்ன, நந்தன பத்மகுமார, ஸ்டீபனி பெர்னான்டோ, (வைத்தியர்) ஸ்ரீ பவானந்தராஜா, ஈ.எம்.பஸ்நாயக்க, மொஹமட் சரீப் பஸ்மின், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், தினேஷ் ஹேமந்த பெரேரா, சமந்த ரணசிங்க, அப்துல் வாசித் மற்றும் ரொஷான் அக்மீமன ஆகியோர் உள்ளடக்கியுள்ளனர்.அத்துடன், பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, நிதி பணிப்பாளர் கமகே சரத் குமார, சிரேஷ்ட பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் லால் குமாரசிறி மற்றும் பிரதான பாராளுமன்ற ஒழுங்குமரபு அதிகாரி அமா விதானகே ஆகிய அதிகாரிகளும் இக்குழுவில் இணைந்துள்ளனர்.
2026-05-22
கௌரவ இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் தலைமையிலான இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், கியூபா குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேரா ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று அண்மையில் (மே 20) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்வது இக்கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்தது.இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த கௌரவ அமைச்சர், இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கு இடையே பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேம்படுத்துவது மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான கியூப தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேரா, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதில் கியூப – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார். இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்கங்களின் உறுப்பினர்களிடையே நெருங்கிய தொடர்பை மேம்படுத்தும் நோக்கில், ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார். கியூபாவின் தலைவரான ஃபிடெல் கஸ்ட்ரோவின் பிறந்த தினத்தின் நூற்றாண்டையொட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் கலந்துகொள்ளுமாறும் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தூதுவர் அழைப்பு விடுத்தார். சர்வதேச மட்டத்தில் இலங்கை கியூபாவுக்கு வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் குறித்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டறிந்துகொண்டனர். அத்துடன், கியூபா தற்பொழுது எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்தும் அந்நாட்டுத் தூதுவர் இங்கு விரிவாக விளக்கமளித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks