பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-10-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இலக்கம் 2446/34 மற்றும் 2025.07.21 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஒழுங்குவிதிகள் எதிர்வரும் ஒக். 21 ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதிக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக கெளரவ அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அந்தக் குழு அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்து பரிசீலனை செய்த பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அவர்கள், 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின்படி மருந்துகளின் விலையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அந்த அதிகாரசபையிடமே உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இந்த ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் 2017 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டாலும், 2023 ஆம் ஆண்டில் மருந்து இறக்குமதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தாக்கல் செய்த வழக்கு ஒன்றிற்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவு காரணமாக 2023 டிசம்பர் 22 ஆம் திகதி முதல் விலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த ஒழுங்குபடுத்தும் முறைமை பிரசுரிக்கப்படாததே இந்த எதிர்ப்பிற்குக் காரணம் என்றும், அதற்கமைய, 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒழுங்குபடுத்தும் முறைமையை வெளியிட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டாலும், அதுவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியர் விஜேவிக்ரம குறிப்பிட்டார். அதற்கமைய, மீண்டும் 2025 ஜூலை 21 ஆம் திகதி 2446/34 ஆம் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
விலை நிர்ணயக் குழுவொன்றின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதாகவும் இந்தக் குழு ஒவ்வொரு துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டது என்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இது தாமதமான வர்த்தமானி என்றும், மருந்து இறக்குமதியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள், குறைபாடுகள் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறைகளில் உள்ள பல்வேறு விடயங்கள் இங்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கெளரவ சுகாதாரப் பிரதி அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கெளரவ வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் (விசேட வைத்தியர்) அனில் ஜாசிங்க உட்பட அந்த அமைச்சுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks