E   |   සි   |  

2025-09-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது. 

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் இக்குழுவின் கூட்டம் அண்மையில் (செப். 23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 

அதற்கமைய, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நீடிப்பதற்கு இந்த ஒழுங்குவிதிகளின் ஊடாக பாராளுமன்றத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதற்கு முன்னர் 2024 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் 1,000 புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாகனங்களை சுற்றுலா அமைச்சினால் வழங்கப்படும் விசேட அனுமதிபத்திரத்தின் கீழ் மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என்பதுடன், 2025 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் இந்த அனுமதி சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரின் முன்மொழிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2025 இல் இந்த வசதியை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது 2025 செப்டம்பர் 30 வரை நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது. 

அதற்கமைய, 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலான 2449/60 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட புதிய ஒழுங்குவிதிகள், 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் அனுமதிக்காக தற்பொழுது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் போக்குவரத்துத் திறனை அதிகரிக்குமாறு தொழில்துறையினரின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதைய கொள்கை கட்டமைப்பின் கீழ் அத்தகைய சலுகைகளை வழங்க முடியாது என அதிகாரிகள் விளக்கினர். மேலும், ஒரு துறையினருக்கு நிவாரணம் அளிப்பது ஏனைய தொழில்துறைகளிலும் சமநிலை மற்றும் நியாயம் பற்றிய கரிசனைகளை எழுப்பும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், சுற்றுலா அபிவிருத்தி வரியை (Tourism Development Levy - TDL) அறவிடுவதில் காணப்படும் சவால்களையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் முறையான நிறுவனங்கள் இந்த வரிக்கு பங்களித்தாலும், பல சுற்றுலா ஓய்வு விடுதிகள் மற்றும் எயார்பிஎன்பி (Airbnb) இயக்குநர்கள் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்பதால் அவர்கள் பணம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொழில்துறையில் சமநிலையற்ற போட்டிச் சூழலை உருவாக்கியுள்ளதுடன், சுற்றுலா அபிவிருத்திக்குக் காணப்படும் நிதியையும் குறைத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது. 

அதற்கமைய, விரிவான பரிசீலனையைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவுப் ஹகீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே. எம். அஸ்லம், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிரி பஸ்நாயக்க, திலிண சமரகோன், சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும், திறைசேரியின் பிரதி செயலாளர் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், சுங்கத் திணைக்களம், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.  ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக  நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-01

கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்படும் “Voice to Policy” நிகழ்ச்சி செப்டெம்பர் 05ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8   என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.


2026-08-21

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா  அவர்களும் இதில் கலந்துகொண்டார்.


2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks