பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-06-05
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கௌரவ இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கடந்த 2025.06.03 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கான கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன், பிரதி இணைத்தலைவர்களாக 6 பேர் தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கே. இளங்குமரன், அர்கம் இல்யாஸ், லசித் பாஷண கமகே, தனுர திசாநாயக்க, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே மற்றும் அம்பிகா சாமிவேல் ஆகியோர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், ஒன்றியத்தின் செயற்குழுவுக்கு கௌரவ கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஒஷானி உமங்கா, கந்தசாமி பிரபு, ஜகத் மனுவர்ன, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்க, (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஒன்றியத்தின் புதிய தலைவர் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் எதிர்காலத்தின் வினைத்திறனாக தலையிடுவற்கு இந்த ஒன்றியம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். நாட்டின் கொள்கைகள் மற்றும் சட்டமியற்றல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதை விருத்தி செய்வது தொடர்பில் ஒன்றியத்தினால் முறையான வேலைத்திட்டமொன்றை முன்மொழிவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒன்றியம் மூலம் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் கூட்டாக செயற்படுவதன் தேவையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-03
பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.
2026-06-03
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.பொலிஸ் நிலையங்களை வலுப்படுத்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கிளிநொச்சி மையமாகக் கொண்டு இடம்பெறும் மணல் வியாபாரத்தைத் தடுத்தல் உள்ளிட்ட பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகளைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-02
நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான இயந்திரங்கள் தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்தார்.வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் உலரவைக்கும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க ரூ.500 மில்லியன் பெறுமதியான நிகழ்ச்சித்திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி மற்றும் பொதியிடும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய ரூ.100 மில்லியன் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமும் இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் கிழங்கைக் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் தலையிட்டிருப்பதாகவும், ஒரு கிலோ கிழங்கை ரூ.220 இற்கு கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சம்பா மற்றும் கீரி போன்றவற்றுக்கு மாற்று அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சில கூட்டுறவு சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை எந்தவித தண்டனையுமின்றி அந்தச் சங்கங்களில் மீண்டும் பதவிகளில் நியமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மகாபொல புலமைப்பரிசிலைப் பெற்ற பழைய மாணவர்களின் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சகல பழைய மாணவர்களும் இணைந்துகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சங்கம் எதிர்கால மாணவர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் தகவல் கட்டமைப்பை புதுப்பிப்பது மற்றும் அதன் செயல்திறனை அதிகரித்தல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன மற்றும் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-29
அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” ஒன்றை உருவாக்குவதற்காக, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் கடந்த மே 25 மற்றும் 27ஆம் திகதிகளில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமானது இயலாமையுடைய நபர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்முனை அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், இயலாமையுடைய சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள சமூகப் பங்கேற்பு மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைத் தொடர்வதற்கும், புதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதற்கும் இயலாமையுடைய நபர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பணியாற்றும் துறைசார் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமது சார்பிலான முன்மொழிவுகளை முன்வைத்தனர்.தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் குறித்த கலந்தாய்வுச் செயல்பாட்டில், இயலாமையுடைய நபர்கள் நேரடியாகவும் தேசிய அளவிலும் பங்களிப்பது இதுவே முதல் முறை என ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார். இந்த இரு நாட்களிலும் இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புள் வாய்மொழி விளக்கங்களை முன்வைத்ததுடன், ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட எழுத்துபூர்வமான முன்மொழிவுகள் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த முன்மொழிவுகள், நிதி மானிளங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, அணுகல்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உதவி தொழில்நுட்ப சாதனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள், சட்ட உதவி, தரவு முகாமைத்துவம், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிற முன்னுரிமைகள் உட்பட அவர்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் குறித்து உள்ளடக்கியுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் கோப்புக்களாக்கி ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒன்றியத்தினால் நேரடியாகக் கையளிக்கப்படும் என ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.இதில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) இக்கூட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கியது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks