2025-04-10
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரியில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் இயலாமை உடைய சிறுவர்களை சாதாரண சிறுவர்களுக்கு சமமாக நடத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் மனப்பான்மைகளை ஆசிரியர்களுக்கு வழங்க முடியும் என நம்புவதாகவும் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் நாமல் சுதர்ஷனவும் கலந்துகொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இலங்கையில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். இது தொடர்பான கணக்கெடுப்பிற்கு அமைய 9,000ற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். எனவே, சரியான அடையாளம் காணப்படல்கள் இல்லாமையாலேயே சிறுவர்கள் இயலாமையுடைய நபர்களாக மாறவேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
முன்பிள்ளைப் பருவத்தில் ஆட்டிசம் உடைய சிறுவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், அவ்வாறு அடையாளம் கண்டுகொண்டல் மாத்திரமே அவர்களை ஆரோக்கியம் மிக்க சிறுவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதாவது குழந்தை பிறந்தது முதல் முன்பிள்ளைப் பருவம் வரையான குடும்ப சுகாதார அதிகாரியின் மேற்பார்வைக் காலத்தில் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதற்கான பொறிமுறை உரிய மட்டத்தில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மூன்று மாதிரி பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தலைவர் கூறினார். இதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் முன்மொழியப்பட்டது. இதன் மூலம், அந்தக் குழந்தைகள் பொருத்தமான வளர்ச்சி நிலைகளுக்கு வழிநடத்தப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
மேலும், ஆபத்து மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் நிறைந்த நிலையில் காணப்படும் சிறுவர் இல்லங்கள் மற்றும் சிறுவர் நிலையங்களில் உள்ள சிறுவர்களை உயிரியல் ரீதியான குடும்பங்களிலிருந்து பிரிப்பதற்குப் பதிலாக, குடும்பத்திற்குள் பராமரிப்பை வழங்குவதன் அவசியத்தையும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. நீதிமன்ற செயற்பாடுகளுக்குப் பின்னர் சிறுவர் நன்னடத்தை நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுப்பப்படுவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இவ்வாறு சிறுவர்கள் நிறுவனமயமாக்கப்படுவதை விட குடும்பத்திற்குள் பராமரிக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து நீதிபதிகளைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருந்தோட்டத் துறையில் உள்ள சிறுவர்கள் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் போக்குக் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறுவர்கள், குழந்தைகள் பாபுல் மற்றும் பான் பராக் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை நாடுவது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பாவனையாளர் அதிகாரசபையின் தடைசெய்யப்பட்ட இறக்குமதி பொருட்களின் பட்டியலில் பாபுல் மற்றும் பான் பராக் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளடக்கப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இதற்கு அமைய இந்தப் பொருட்களை தடைசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாவனையாளர் அதிகார சபைக்கு அனுப்பவும் குழு தீர்மானித்தது.
மகப்பேற்றுக்கு விடுமுறைகள் வழங்கப்படும்போது மூன்றாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக விடுமுறை வழங்கப்படாத சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மகப்பேற்றுக்கு விடுமுறை வழங்கும்போது முதல் மற்றும் இரண்டாவது பிரசவங்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே மூன்றாவது மற்றும் நான்காவது பிரசவங்களுக்கும் அதே சலுகைகளை வழங்க சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும், இது முறையாக சமூகமயமாக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழில் பணிபுரியக்கூடிய பெண் அதிகாரிகளை நியமிப்பது குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, யாழ்ப்பாணத்தில் தற்போது 56 பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாகக் கூறினார். அந்தப் பெண் அதிகாரிகளில் 21 பேர் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுகளில் பணிபுரிவதாகவும், அவர்களில் 8 பேர் மட்டுமே தமிழில் பணிபுரிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கு, சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் தொடர்பான விடயம் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் நிகழ்ச்சிநிரல்களில் உள்ளடக்கப்படாமை தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தி, குறித்த குழுக் கூட்டங்களில் இவ்விடயத்தை உள்ளடக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கேட்டறிந்தது. தற்போது அந்தக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் தொடர்பான விடயஙங்கள் கலந்துரையாடப்படுவதாக அதிகாரிகள் குழுவிற்குப் பதிலளித்தனர்.
பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் மேம்பாட்டுக் குழுவில் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பான அனைத்து அதிகாரிகளின் பங்கேற்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-13
பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாக அதிகரிப்பதற்குத் தேவையான கொள்கை மற்றும் சட்ட ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது தொடர்பாகவும், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுப் பட்டியல்களில் மட்டுமன்றி, தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களிடையேயும் குறைந்தபட்சம் 33 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.இந்த முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.மேலும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக வேட்புமனுப் பட்டியல் மட்டத்தில் அல்லது கட்டாய ஆசன ஒதுக்கீட்டின் மூலம் அல்லது கலப்பு தேர்தல் முறைமையின் கீழ் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் குழு உறுப்பினர்களின் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் போது காணப்படும் சமூக மனப்பாங்குகள், தேர்தல் செலவுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவு போன்ற சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாமிந்திராணி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினீ குமாரி விஜேரத்ன, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுத, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, சட்டத்தரணி ஹசாரா லியனகே, தீப்தி வாசலகே, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி கீதா ஹேரத் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-13
நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பல புதிய நடைமுறைகளை அமுல்படுத்துவது குறித்து, கௌரவ அமைச்சர் கே. டி. லால் காந்த அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 08) பாராளுமன்றத்தில் கூடிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஆராயப்பட்டது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலைக்கு அமைவாக நெல் கொள்வனவை திறம்பட மேற்கொள்வது, மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது, விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வது ஆகியவற்றிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.வியாபாரிகள் விவசாயிகள் போன்று காண்பித்து அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உர மானியப் பயனாளி விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை நெல் கொள்வனவு நிலையங்களுக்கு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், விவசாயி பயிரிட்டுள்ள ஏக்கர் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு அவர் விற்பனை செய்யக்கூடிய நெல் அளவை உறுதிப்படுத்துவதன் மூலம், மோசடியான முறையில் அதிகளவு நெல்லை விற்பனை செய்வதைத் தடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.நெல் கொள்வனவின்போது எடையை அடிப்படையாகக் கொண்ட தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில், கூட்டுறவு மற்றும் தனியார் களஞ்சியங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குழுவுக்குத் தெரிவித்தனர்.கூட்டுறவுச் சங்கங்களும் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இணைந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்வதன் மூலமும், சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலமும், போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளுக்கு மேலும் திறம்பட்ட மற்றும் நியாயமான சேவையை வழங்க முடியும் எனவும் குழு வலியுறுத்தியது.அத்துடன், களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பழமையான கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்தல், அவற்றை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள், மேலும் வனவிலங்கு மற்றும் தொல்பொருள் பாதுகாப்புப் பகுதிகளை அண்டியுள்ள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் போது நிலவும் சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த சேனரத் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-10
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக டி.பி.விக்ரமசிங்க அவர்களை நியமிப்பதற்கு அண்மையில் (ஜுலை 08) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய இந்தக் குழுவில் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, ரிஷாத் பதியுதீன், கே. காதர் மஸ்தான், குமார ஜயக்கொடி, கதிரவேலு சண்முகம் குகதாசன் மற்றும் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-08
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதுடன், அவற்றைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதிபற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கு அமைய, (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் வெளியிடப்பட்ட தீர்மானம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளைகளும் இங்கு ஆராயப்பட்டன.இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 0%, 15% மற்றும் 20% ஆகிய சுங்க இறக்குமதி வரி விகிதங்கள், 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 0%, 10%, 20% மற்றும் 30% என நான்கு அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டமைப்பின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளன.இந்தத் திருத்தங்கள் வெறுமனே வரி விகிதங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டுமல்லாது, அடுத்த பத்தாண்டுகளுக்கான நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை வடிவமைக்கும் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகும் எனக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.விஞ்ஞான அடிப்படையிலும் முன்னறிவிக்கக்கூடியதுமான வரிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம், இலங்கையை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் மேலும் திறனுள்ளதாக இணைப்பதே இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இந்தக் கொள்கையின் கீழ், ஐக்கிய நாடுகளின் பரந்துபட்ட பொருளாதார வகைப்பாடுத்தல்களை அடிப்படையாகக் கொண்ட புதிய நான்கு அடுக்கு வரிக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல HS குறியீடுகள் மறுசீரமைக்கப்படவுள்ளன.மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், உணர்திறன் மிக்க இடைநிலைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய நான்கு பிரதான வகைகளின் கீழ் புதிய வரி கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் அரச வருவாயை நிலைநிறுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், தரையோடுகளுக்கான தற்போதைய 85–90 சதவீத இறக்குமதி வரி விகிதத்தை 2029 ஆம் ஆண்டளவில் படிப்படியாக 20 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் குறைவதுடன், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு சாதகமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டு தொழில்துறைகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, பல்வேறு துறைகளுக்கான புதிய தேசிய துணைப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், 2029 ஆம் ஆண்டளவில் CESS மற்றும் PAL போன்ற வரிகளை படிப்படியாக நீக்கி, எளிமையான சுங்கவரி முறைக்குத் திரும்புவது அரசாங்கத்தின் இலக்காகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வரி தளர்வுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த வரி மறுசீரமைப்புகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 18 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 36 பில்லியன் அமெரிக்க டொலராக இரட்டிப்பாக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இலக்கை அடைவதற்கு ஆதரவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக மின்னணு உபகரணங்கள், ரப்பர் உற்பத்திப் பொருட்கள், மருந்துத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஆகியவற்றை உலகளாவிய வழங்கல் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்தக் கொள்கை முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.இதனுடன், வர்த்தகத் தரவுகளைப் புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் குழு தீவிர கவனம் செலுத்தியது. வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்திடம் உள்ள வர்த்தகத் தரவுகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்பது குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பதற்குத் தேவையான அனைத்து வர்த்தகத் தரவுகளையும் தொடர்புடைய தகவல்களையும் ஒரு வார காலத்திற்குள் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.