01

E   |   සි   |  

2025-03-12

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க அதனை வழிமொழிந்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (மார்ச் 11) பாராளுமன்றத்தின் இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவராக  எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார முன்மொழிந்ததுடன், சட்டத்தரணி சுசந்த தொடாவத்த வழிமொழிந்தார். அத்துடன், மற்றுமொரு பிரதி இணைத் தலைவராக (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் முன்மொழிந்ததுடன், அஜித் பி.பெரேரா வழிமொழிந்தார்.

இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்த ஒன்றியம் ஸ்தாபிப்பது சமத்துவம், நீதி மற்றும் உள்ளடக்கிய தன்மை என்பன தொடர்பில் நாம் அனைவரும் இணைந்து எடுக்கும் ஒரு முக்கியமான படியாகும் என்று சுட்டிக்காட்டினார். இயலாமையுடைய நபர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திருப்தி அடைந்து சமமாக நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தூரநோக்காக இருக்க வேண்டும் என்றும், அதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஏனைய சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் புதிய தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, தன்னை ஒன்றியத்தின் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்றம் என்ற ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் முழு நாடும் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உணர்திறன் மிக்கதாகவும், நேர்மையானதாகவும்  மாற்றுவதே ஒன்றியத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இயலாமைய உடைய நபர்களுக்காகத் தற்பொழுது நடைமுறையில் உள்ள 28 வருடங்கள் பழமையான சட்டத்தை மறுசீரமைத்து தற்காாலத்திற்குப் பொருத்தமான சட்டமாக மாற்றுவது, தற்பொழுது காணப்படும் தேசிய  கொள்கையை எதிர்காலத்திற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒன்றியம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார். பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகள் இயலாமையுடைய நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 14 வருடங்கள் கடந்துள்ளபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஒன்றியத்தின் ஊடாகத் தேவையான தலையீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-01-28

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு குறித்து சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு போன்ற விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடியபோதே இவ்விடயங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.இதற்கு அமைய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தொடர்பில்  இங்கு முதலில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுப்பாவனை காரணமாக வருடமொன்றுக்கு 22,000 பேர் உயிரிழப்பதாகவும், வருடமொன்றிற்கு ரூ.225 பில்லியன் முதல் ரூ.240 பில்லியன் வரையிலான தொகை இழக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.இந்த சூழ்நிலையை அடிப்படையாக சமாளிக்க தேவையான சட்ட விதிகள் உட்பட, புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.சிகரெட்டுக்கள் தனித்தனியாக விற்பனை செய்வதை உலகில் 104 நாடுகள் தடைசெய்துள்ளதாகவும், இந்த நாட்டிலும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தினர். தனிப்பட்ட சிகரெட்டுகள் விற்கப்படும்போது, சிகரெட் பெட்டிகளில் உள்ள எச்சரிக்கைச் செய்திகள் நுகர்வோரைச் சென்றடைவதில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். சிகரெட்டுகளின் விலைகளை நிர்ணயித்த பின்னர் அவற்றின் மீது வரி விதிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையினர் தமது சட்டத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் திருத்தங்கள் மற்றும் குறித்த அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான ஆதரவைக் குழு வழங்கும் என்றார்.இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், மருத்துவமனையின் அதிகாரிகள் அதன் தற்போதைய நிலை குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை உட்பட, மருத்துவமனையில் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஊழியர்களுக்கான தேவை இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் குழுவிடம் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், இலங்கையில் தற்போது 3 தேசிய வைத்தியசாலைகள் இருப்பதாகவும், தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன் விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும் என நம்புவதாகவும் கூறினார். ஊழியர்களை மீண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உள்ளகக் கணக்காய்வாளரை நியமித்து வைத்தியசாலையின் நிர்வாகம் உள்ளிட்ட அதன் செயல்திறனை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க வேண்டியதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.இக்கூட்டத்தில் கௌரவ குழுவின் பிரதித் தவிசாளர் ஹேமலி வீரசேகர, கௌரவ பிரதியமைச்சர் முனீர் முலாபர், குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, சமன்மலீ குணசிங்க, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும், குழுவின் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான  (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும்,  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் ஏனைய நிர்வாக உத்தியோகத்தர்கள், புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-01-27

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் கூட்டுவதற்கு முடிவு

மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யவும் தீர்மானம்கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 மணிக்குக் கூட்டி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் 2026.01.21ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய இக்குழு 2026.01.28ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்  கௌரவ அமைச்சர் அநுர கருணாதிலக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-01-27

மின் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி இருப்புக்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கேள்வியெழுப்பியது

இறக்குமதி செய்யப்பட்ட  மூன்று நிலக்கரி கப்பல்களினதும் நிலக்கரிகளின் தரம் பற்றிய அறிக்கையை வழங்கவும் – குழு அறிவுறுத்தல்மின் உற்பத்திக்காக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கேள்வியெழுப்பப்பட்டது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்திற்கு வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் நடைமுறை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய குழு, இறுதியாக நிலக்கரி இறக்குமதி செய்யும்போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.அத்துடன், இறுதியாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா எனக் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார்.நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கப்பல்களில் காணப்பட்ட நிலக்கரிகளின் மாதிரிகளின் தரங்கள் பரிசோதனைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், இவற்றின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை தொடர்பில் சரியான தகவல்களை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்விடயம் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிலக்கரி இருப்புக்களை இறக்குமதி செய்யும் செயற்பாட்டுடன் தொடர்புபட்ட வரையறுக்கப்பட்ட லங்கா நிரக்கரி (தனியார்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரை அடுத்த குழுக் கூட்டத்திற்கு அழைக்கவிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.அதேநேரம், குறித்த குழுக் கூட்டத்தின் போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிலக்கரி கப்பல்களில் காணப்பட்ட நிலக்கரிகளின் தரம் குறித்த அறிக்கைகளையும், கடைசியாக வந்த கப்பலில் உள்ள நிலக்கரியின் தரம் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக அறிக்கைகளையும் குழுவிற்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா மற்றும் சத்துர கலப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-01-26

கொழும்பு துறைமுக நகரில் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரை (AP) நியமிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியது

45 நாட்களுக்குள் சேர் பெறுமதி வரியை மீளப்பெறுவதை விரைவில் நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராட்டு கொழும்பு துறைமுக நகரில் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரை (Authorized person) நியமிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. கடந்த ஜன. 20ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, எம்.கே.எம்.அஸ்லம், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன் மற்றும் சம்பிக்க ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய நிறுவனமொன்று வணிகத்தில் ஈடுபட விரும்பும் போது, குறித்த விண்ணப்பதாரர் கொாழும்பு துறைமுக நகரப் பகுதியில் வணிகத்தில் ஈடுபட அதிகாரமளிக்கப்பட்ட  ஆளொருவராகத் தகுதி பெறவும், அனுமதியைப் பெறுவதற்கும் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்று பதிவுக்காக தற்போது 72 விண்ணப்பங்கள் இருப்பதாக குழு சுட்டிக்காட்டியது.இதற்கு அமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திடடத்தின் கீழ் நான்காவது மறுஆய்வுக்காக கைச்சாத்திடப்பட்ட விருப்பக் கடிதத்திற்கு அமைய 2025.07.04ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர். எனவே,  இந்த விண்ணப்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர். 2025 ஜூலை மாதமாகும் போது 54 விண்ணப்பங்கள் இருந்ததாகவும், அவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது. குறித்த சட்டம் திருத்தப்படவிருப்பதால் இதுவிடயத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும் செயற்பாடு மாறுபடலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இதனால் அவை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்று பதிலளித்த அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், திருத்தச் சட்டமூலம் 2026.01.20ஆம் திகதி நடைமுறைக்கு வருவதால் இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது நாட்டிலுள்ள அனைவரின் குறிக்கோள் என்றும், எனவே விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.மேலும், இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் (SVAT System) தற்போதைய முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.சேர் பெறுமதி வரி முறையின் கீழ் மீளப்பெறும் வாய்ப்புக்களுடன் கூடிய கொடுப்பனவுகளை (Refund payments delays) மீளப்பெறும்போது 100% கணக்காய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் காலதாமதம் இருப்பதாகவும் இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் ஊடாக அந்தக் காலதாமதங்களை குறைத்து 45 நாட்களுக்குள் அவற்றை விரைவில் மீளப்பெறுதலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். 2026 ஜனவரி 15ஆம் திகதி வரையில் பணத்தைத் திரும்பப்பெறும் கொடுப்பனவுகளில் சுமார் 96% செலுத்தப்பட்டுவிட்டதாகவும், பெரும்பாலான பழைய கொடுப்பனவுகள் மேற்கொள்ளளப்பட்டிருப்பதாகவும் அதிகரிகள் தெரிவித்தனர்.குழுவில் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் ஊடாக சிறந்த பலனைப் பெறமுடியும் என்பது தெரியவருவதாகவும், இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் குழு குறிப்பிட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks