logo

E   |   සි   |  

2025-03-08

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை - கௌரவ அமைச்சர் குமார ஜயகொடி

  • இலங்கை மின்சார சபையில் பொறியாளர்கள் உள்ளிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழுவின் கவனத்திற்கு
  • சூரிய சக்தி போன்ற ஏனைய மாற்று எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்தி கட்டமைப்பை நிலையாகப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன - அதிகாரிகள்
  • வீதி விளக்குகள் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களும் இலங்கை மின்சார சபையும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்து

 

அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை என வலுசக்தி கௌரவ அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (மார்ச் 06) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவில் பங்கேற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து வினவியதற்குப் பதிலளித்த கௌரவ அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவிக்கையில், அதானி நிறுவனத்தின் மின் திட்டத்தின் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால், அதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில், இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு சபைக்கு இந்திய அதானி தாய் நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய முதலீட்டு சபை இது குறித்து அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். எனினும், காற்றாலை மின் திட்டம் தொடர்பாக இலங்கையில் உள்ள அதானி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், எனவே இந்த விடயத்தைப் பரிசீலிக்குமாறு அந்த  நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, கடிதத்தை அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பதில் எதிர்பார்க்கப்படுவதாக கௌரவ அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.   

அதனால், இந்த இரண்டு வாரங்களில் எதிர்மறையான பதில் கிடைக்கப்பெற்றால் மாத்திரம் ஏனைய மாற்றீடொன்றுக்கு செல்லவேண்டிவரும் என அவர் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களை அரசாங்கங்களுக்கிடையில் (G2G) ஒப்பந்தங்கள் மற்றும் போட்டியான கொள்முதல் என்பன மூலம் மாத்திரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை மின்சார சபையில் பொறியாளர்கள் உள்ளிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பொருளாதார நெருக்கடியின் போது பல பொறியாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதால் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும், இந்த வெற்றிடங்களை மூன்று தொகுதிகளாக நிரப்புவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இதில் முதல் தொகுதி விரைவில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், திடீர் மின்வெட்டு குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், கட்டமைப்பில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட கட்டமைப்பை நிலையற்றதாக மாற்றக்கூடும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனால், சூரிய சக்தி போன்ற ஏனைய மாற்று மூலங்களைப் பயன்படுத்தி அமைப்பை நிலையாகப் பராமரிக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வீதி விளக்குகள் போதுமானளவு பராமரிப்பு செய்யப்படாமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், வீதி விளக்குகள் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களும் இலங்கை மின்சார சபையும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. விசேடமாக, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால், உள்ளூராட்சி நிறுவனங்களும் மின்சார சபையும் இணைந்து இந்தப் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவது பொருத்தமானது என்று குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பான கொள்கை இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக இந்த அமைச்சுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks