பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-02-25
செய்தி வகைகள் : குழு செய்திகள்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் “போக்குவரத்துத் துறை சம்பந்தமான சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்தி நேர்மறையான திசையில் வழிநடத்துதல் தொடர்பில்” ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் (பெப். 22) கூடியது.
இந்த உபகுழுவின் ஊடாக பிரதானமாகப் போக்குவரத்துத் துறை தொடர்பான நீண்டகால, மத்திய கால மற்றும் குறுகியகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் குறித்து ஆராயப்படவிருப்பதுடன், இதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையும் தயாரிக்கப்படவுள்ளது.
அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிகாரிகள் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் குழு முன்னிலையில் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த உபகுழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, இந்தத் துறை தொடர்பில் ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட பி.தயாரத்ன அறிக்கை கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இந்த அறிக்கை 2014ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். எனினும், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு 11 வருடங்கள் கழிந்திருப்பதால் போக்குவரத்துத் துறையில் தற்பொழுது காணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையில் புதிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்பதே குழுவின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
இருந்தபோதும், புதிதாகத் தயாரிக்கப்படும் அறிக்கைக்கு பி.தயாரத்ன அறிக்கையை அடிப்படையாகக் கொள்ள முடியும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, போக்குவரத்துத் துறையில் மாற்றங்களைச் செய்யும்போது இயலாமை உடைய நபர்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்றார். குறிப்பாக பேரூந்து மற்றும் ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் போது இயலாமை உடைய நபர்கள் பற்றிக் கவனம் செலுத்துவது அவசியம் என்றும், நவீன பேரூந்துகளை இறக்குமதி செய்யும் போது இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பேரூந்துகள் மற்றும் ரயில்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கையாள்வதற்கான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. மேலும், பேரூந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பராமரிக்கப்பட வேண்டிய தரநிலைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த.த சில்வா, தநுர திசாநாயக்க மற்றும் சுஜீவ திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-03-11
வடமத்திய மாகாணசபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற பரிந்துரை2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகளைப் புனரமைப்பதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வடமத்திய மாகாண சபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வடமத்திய மாகாணசபையின் அதிகாரிகளுக்கு அண்மையில் பரிந்துரைத்தது. 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகளைப் புனரமைப்பதில் வடமத்திய மாகாண சபையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வு தலைமையதிபதியினால் முன்வைக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் 2025 ஜூன் 18ஆம் திகதி நடைபெற்ற கோபா குழு கூட்டத்தில் ஆராயப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்தது.இந்த நிலையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (03) பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்குறிந்த பரிந்துரை வழங்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் திகதி நடைபெற்ற கோபா குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.குறித்த முறைகேட்டுடன் சம்பந்தப்பட்ட 10 அதிகாரிகளிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பணம் இதுவரை அறவிடப்படவில்லையென்றும், இதில் சிலர் தற்பொழுது உயிருடன் இல்லையென்றும், ஏனையவர்களிடம் அறவிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் பதிலளித்தனர். இவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதன் அவசியம் குறித்து குழுவில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கான அரங்கமொன்றை அமைப்பதற்கான திட்டம் பூர்த்தியாக்கப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமையும் இங்கு தெரியவந்தது. இத்திட்டத்திற்காக செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தை முன்னெடுத்த ஒப்பந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அதனை ஒரு மாத காலத்திற்குள் குழுவுக்கு அறிவிக்குமாறு கோபா குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். மேலும், வடமத்திய மாகாண சுற்றுலாத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான தரமான ஆவணப்படமொன்றைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத் தொகையான ரூ.15,797,500 இல் ரூ.12,144,500 செலுத்தப்பட்டுள்ளபோதும் எவ்வித வீடியோவும் ஒப்பந்த நிறுவனத்தினால் கையளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. குறித்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் குறிப்பிட்டனர். இது விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆற்றுப்படுத்துமாறு குழு அறிவுறுத்தியது. பொலன்னறுவை பொது வர்த்தகக் கட்டடத்தொகுதியின் கட்டுமானப் பணிகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தொகை பணத்தைச் செலவு செய்து ஒப்பந்த நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாமை நாட்டுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கான அரங்கக் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட ஒப்பந்த நிறுவனமே இக்கட்டடத் தொகுதியின் ஒப்பந்தத்தையும் முன்னெடுத்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க வேண்டியது பற்றி இங்கு வலியுறுத்தப்பட்டது. இது பற்றி விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாத காலத்திற்குள் குழுவுக்கு அறிக்கையிடுமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், வடமத்திய மாகாணத்திற்கு ரயில் மூலம் அனுப்பப்பட்ட திரிபோஷா பக்கற் தொகுதிகள் உரிய நேரத்தில் பெறப்படாது ரயில் திணைக்களத்தின் களஞ்சியத்தில் இருந்தமையால் காலவதியாகியமை, அதிலுள்ள சில பக்கற்றுக்கள் காணாமல் போனமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்த சமபோஷ பொதிகளின் பெறுமதி ரூ.1,094,657 என்பதும் இங்கு தெரியவந்தது. இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிரான மாகாண சபையினால் விசாரணை நடத்தப்பட்டபோதும் இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொள்ள முடியாமல் போயிருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இந்த விடயம் தொடர்பில் உள்ளக கணக்காய்வு விசாரணை நடத்துவதுடன், அமைச்சு மட்டத்திலான விசாரணைகளையும் முன்னெடுத்து அதனைக் குழுவுக்கு அறிவிக்குமாறும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, நளின் ஹேவகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, சுசந்த குமார நவரத்ன, டி.கே. ஜயசுந்தர, ஜே.சி அலவத்துவல, சுனில் ரத்னசிறி மற்றும் சானக மதுகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-03-10
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், பங்கெடுப்பு மற்றும் சகலருக்கும் வாய்ப்பளித்தல் போன்றவற்றின் ஊடாக பாராளுமன்றத்தின் பணிகளைப் பொதுமக்களுக்கு நெருக்கமாக்க ஒன்றியம் முழுமையான தலையீட்டை மேற்கொள்ளும் – ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள் வலியுறுத்தல்ஒன்றியத்தின் எதிர்கால செயற்றிட்டம் மற்றும் மூலோபாயத் திட்டங்களைத் தயாரிக்க நடவடிக்கைதிறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்காக கடந்த மார்ச் மாதம் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் வதிவிட செயலமர்வு வெற்றிகமாக நிறைவுபெற்றது.ஜனநாயகத்திற்கான வெஸ்மினிஸ்டர் மன்றம் ( Westminster Foundation for Democracy) – (WFD) மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கூட்டணி (Coalition for Inclusive Impact) – (CII) ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான விஞ்ஞான தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) கிரிசாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். இச்செயலமர்வில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவிருக்கும் எதிர்காலத் திட்டங்களும் வகுக்கப்பட்டன.இதற்கு அமைய திறந்த அரசாங்கம் மற்றும் திறந்த பாராளுமன்றம் போன்ற கொள்கைகள் என்பன விரிவாக இங்கு ஆராயப்பட்டன. திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பின் ஊடாக வெளிப்படைத்தன்மை (Transparency), பொறுப்புக் கூறல் (Accountability), பங்கெடுப்பு (Participation) மற்றும் சகலருக்கும் வாய்ப்பளித்தல் (Inclusivity) போன்ற பிரதான கொள்கைகளின் மூலம் பாராளுமன்றத்தை மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ‘திறந்த பாராளுமன்ற செயற்பாட்டுக்கான தேசிய ஆலோசகர்’ அஞ்சலீனா ஹேர்மன் இங்கு கருத்துக்களை முன்வைத்தார். அத்துடன், திறந்த பாராளுமன்றக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் ஏனைய உலக நாடுகள் மற்றும் அவை பின்பற்றும் நடைமுறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அத்துடன், 2015ஆம் ஆண்டு இந்த ஒன்றியம் முதல் தடவையாக உருவாக்கப்பட்ட பின்னர் இலங்கை பாராளுமன்றத்தை மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் விளக்கமளித்தார். மேலும், உள்ளூராட்சி மன்றங்களில் குழு முறைமைகள் மற்றும் அவற்றில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதான சட்ட அதிகாரி கயனி பிரேமதிலக அவர்கள் விளக்கமளித்தார்.இங்கு வளவாளர்கள் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கிடையில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன், இவற்றின் ஊடாக ஒன்றியத்தின் எதிர்கால செயற்றிட்டம் மற்றும் மூலோபாயத் திட்டங்களைத் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான விஞ்ஞான தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) கிரிசாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர், பாராளுமன்றத்தை மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக மாற்றுவதற்குத் தேவையான தலையீட்டை திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் முன்னெடுக்கும் என வலியுறுத்தினர்.இச்செயலமர்வில், ஜனநாயகத்திற்கான வெஸ்மினிஸ்டர் மன்றத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்ஜய் விக்னராஜா மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூலோபாயம் மற்றும் ஆளுமை குறித்த நிபுணர் டிலாஷினி அங்குனவெல ஆகியோரும் பங்கேற்றனர்.
2026-03-06
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (பெப். 27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் குறித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம், (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன், கந்தசாமி பிரபு உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்றனர். உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரவீன், மாவட்ட சமூக சேவை அதிகாரி சந்திரகலா ஞானேஸ்வரன் உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், சமூக அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர். புள்ளிவிபரங்களுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,000ற்கும் அதிகமான இயலாமையுடைய நபர்கள் வாழ்ந்து வருவதுடன், இவர்களுக்கு 14 அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் நிலையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியமானதாக அமைந்தது. இம்மாவட்டத்தில் உள்ள 183 இயலாமையுடைய மாணவர்களுக்கு 23 கல்வி அலகுகளில் சேவையாற்றுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட 21 ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் எடுத்துக் கூறினார். இயலாமையுடைய நபர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்குதல், சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் பொதுக் கட்டடங்களில் நுழைவதற்குக் காணப்படும் மட்டுப்பாடுகள் குறித்தும் அவர் இங்கு தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா, அனைவரையும் உள்ளடக்கிய சமூகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம். அரசாங்க வேலைவாய்ப்புக்களுக்கான போட்டிப் பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் தடைகள் குறித்து கல்வி அமைச்சுடன் இம்மாதத்தில் கலந்துரையாடல் நடத்தவிருப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். இதனால் இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளும், அரசியல் அதிகாரிகளும் இணைந்து இதனை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள், மட்டக்களப்பில் இதுவரை எவ்வித உதவிகளையும் பெற்றுக்கொள்ளாத இயலாமையுடைய நபர்களைக் கண்டறிந்து அவர்களையும் உள்வாங்குவது முக்கியமானது என வலியுறுத்தினார். யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்டவர்களுக்கான வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாகப் பெற்றக் கொடுப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயலாமை உடைய நபர்களுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் பற்றியும், அவ்வாறான நபர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் பற்றியும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அத்துடன், பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சேவை வழங்கலில் தொடர்ந்து நிலவி வரும் குறைபாடுகளையும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்களையும் குறித்து கவனம் செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயலாமைய உடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் தாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குழுவிற்கு எடுத்துரைத்தனர். கல்விக்கான மானியங்களை நீடிப்பது, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பரீட்சைகளில் தோன்றும்போது காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் பிரையில் போன்ற மாற்று ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது, வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறச் செய்யும்போது நேர விரயத்தைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குதல், அரசாங்க அலுவலகங்களை நாடும் இயலாமை உடையும் நபர்கள் படிகளில் ஏறவேண்டிய தேவை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அதற்கான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தமக்குக் காணப்படும் பிரச்சினைகளை இங்கு முன்வைத்தனர்.இவ்வாறு முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், ஏனையவை மாவட்ட அதிகாரிகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. அத்துடன், சில விடயங்களுக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால கொள்கை மறுசீரமைப்புக்கான தேவையை ஒன்றியம் வலியுறுத்தியது. மாவட்ட ரீதியாகச் சென்று நாடு முழுவதிலும் உள்ள இயலாமை உடைய நபர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்குத் தேவையான தீர்வுகளை முன்வைப்பதில் ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வானது, அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2026-02-24
இரண்டு தூதுவர் பதவிகளுக்கும் ஒரு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்ட நியமனங்களுக்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இவ்வாறு ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.இதற்கமைய, எத்தியோப்பியா கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் நிர்மலா இந்துமதி டயஸ் பரணவிதான அவர்களை நியமிப்பதற்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பேராசிரியர் மொஹமட் இப்ராஹிம் பஸீஹா அஸ்மி அவர்களை நியமிப்பதற்கும் இக்குழு அங்கீகாரம் அளித்தது.இதற்கு மேலதிகமாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கே.ஏ. விமலேந்திரராஜா அவர்களின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks