02

E   |   සි   |  

2025-02-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலை சரியான நடைமுறைகள் இன்றி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்தினம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டிருப்பதாக கோப் குழுவில் தெரியவந்தது

  • தலைவர் அழுத்தம் கொடுத்தமையால் செலவுகளுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டது. அப்படிச் செய்யாவிட்டால் எம்மை மாற்றிவிடுவார்கள் – அதிகாரிகள்
  • ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்தினமே 100 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து பெறப்பட்டது
  • முன்னாள் ஜனாதிபதியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு இந்தப் பணம் செலவிடப்பட்டமை தெளிவாகின்றது – குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டு
  • முன்னைய நிதிப் பணிப்பாளர் வருகை தந்திருந்தபோதும் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கும்போது அவர் அமைதியாக இருப்பதற்கு முயற்சித்தமை குழுவை பிழையாக வழிநடத்துகின்றமை – கோப் குழு
  • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்

‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலைக்கான கையொப்பத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையதினமே இட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது.

செலவீனங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக பணிப்பாளர் சபை அனுமதியை வழங்கியிராத சந்தர்ப்பத்திலேயே இந்தக் காசோலையில் முன்னாள் தலைவர் கையொப்பமிட்டிருந்ததாகவும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாளே இவ்வாறு கைச்சாத்திட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு, முன்னாள் தலைவரின் அழுத்தத்திற்கு அமைய செலவுகளுக்கான ஒப்புதலை வழங்கி கைசோலையைக் கையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்கு அதிகாரி என்ற ரீதியில் முன்னாள் தலைவர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய அவ்வாறு செயற்பட்டதாகவும், தாம் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் இடமாற்றங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர். இதற்கு அமைய ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் 188 மில்லியன் ரூபாவுக்கான காசோாலையை வெளியிடவேண்டி ஏற்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இது மிகவும் உணர்திறன் மிக்க விடயம் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கௌரவ தலைவர் (வைத்தியர்) நிசாந்த சமரவீர தெரிவித்தார். அரசாங்க அதிகாரிகளைப் பலிக்கடாவாக்கி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன், இதுபோன்ற சம்பவங்களின் போது அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான ஆளுமை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய தலைவர், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகாரிகள் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் நிதிப் பணிப்பாளர் குழுவிற்கு வருகை தந்திருந்தபோதும், குழுக் கூட்டம் முடிவடையும் வரை அவர் எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் இருப்பதற்கு முயற்சித்தமை தொடர்பிலும் கோப் குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கும்போது அமைதியாக இருக்க முயற்சிப்பது குழுவைப் பிழையாக வழிநடத்துவதாக அமைவதுடன், இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரைக் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இது பற்றி மேலும் கலந்துரையாடுவதற்கு நாளையதினம் (20) கோப் குழுவைக் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் கோப் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் நேற்றையதினம் (பெப். 18) கூடியபோதே இந்தத் தகவல்கள் யாவும் வெளிப்பட்டன.

2024 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டுமாத காலப்பகுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் புத்தாண்டுக் கொண்டாட்டம், தேசிய இளைஞர் வெசாக் விழா, தேசிய இளைஞர் பொசன் வலயம், யாழ்ப்பாண இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி, 31 Night Youth Celebration மற்றும் ஸ்மார்ட் யூத்  கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட 538,080,000 ரூபா தொகை  ஒதுக்கீடு மற்றும் அதன் செலவினம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதற்காக ஏறத்தாழ  398 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தாலும், பற்றுச்சீட்டுக்களில் குறைபாடுகள் காணப்பட்டமையால் அந்தத் தொகை விடுவிக்கப்படவில்லையென்றும் தெரியவந்தது.

மேலும், வருட ஆரம்பத்தில் விநியோகஸ்தர்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும், கடந்த காலங்களில் அவ்வாறு இல்லாமல் இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் விருப்பத்திற்கு அமைய அவர் குறிப்பிடும் நபர்களிடமிருந்து ஏலங்கள் பெறப்பட்டு விநியோகங்கள் பெறப்பட்டதாகவும் தெரியவந்தது. காசோலைகள் வழங்கப்பட்டபோது சம்பந்தப்பட்ட நபர் அங்கு இல்லை என்பதும், மற்றவர்களுக்கு அவற்றைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், ஸ்ரீலங்கா யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தில் நிதி ஒழுக்கத்தைப் பேணத் தவறியது மற்றும் உள்ளகக் கணக்காய்வு நடத்தத் தவறியமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நிரந்தரப் பதவிகளை வகிக்கும் 25 அதிகாரிகளை தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில் நியமிப்பது, முன்னைய கோப் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பல சிக்கல் நிறைந்த சூழ்நிலைகள் தெளிவாகத் தெரிவதால், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீலங்கா யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தில் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் ஆகியவை குறித்துக் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழு பரிந்துரைத்தது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மாலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ன, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷ எகொட விதான, திலின சமரக்கோன், சந்திமா ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-10-05

இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதில், குறித்த ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்காக WFD நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆதரவு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், இளம் தலைமுறையினரை அரசியல் செயற்பாடுகள், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வருகை தந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தேர்தல்களுக்குப் பின்னரும் இளைஞர்களை தொடர்ச்சியாக அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களுடன் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், இளைஞர்கள் எதிர்கொள்ளும் தொழிலின்மை உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இளைஞர் தலைமைத்துவத்தையும் அவர்களின் அரசியல் பங்கேற்பையும் மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.


2026-10-05

இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் விரிவாகக் கலந்துரையாடல்

1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அங்கவீனமுற்ற ஆட்களின் உரிமைகள் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமொன்றை இயற்றுவது தொடர்பில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அர்களின் தலைமையில் அண்மைபில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், 1996 ஆம் ஆண்டு மேற்குறித்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 30 வருட காலப்பகுதியில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை இயற்றுவதன் அவசியம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தை (UN CRPD) இலங்கை 2016 ஆம் ஆண்டு அங்கீகரித்திருந்த போதிலும், அந்த சமவாயத்துக்கு அமைவான உள்நாட்டு சட்டமொன்றை இதுவரை உருவாக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சரவைத் தீர்மானங்களை மேற்கொண்டு இச்சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனைத் தயாரிக்கும் போது ஆரம்பகால நோக்கங்களுக்கும் தற்போதைய சட்டமூலத்திற்கும் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முக்கியமானது எனவும் மன்றத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய பேரவையின் உறுப்பினர்களைக் கொண்ட உபகுழுவினால் தமது அவதானிப்புகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட மாதிரி சட்டமூலம், சட்டவரைவு தயாரிப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அத்திணைக்களத்தினால் மீளத் தயாரிக்கப்பட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலம் தொடர்பில் தேசிய பேரவையின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.இதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளையும் கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அவதானிப்புகளின் அடிப்படையில் இந்தச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் அனைத்து தரப்பினரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்திற்கு (UN CRPD) அமைவாக சுயாதீன கண்காணிப்பு பொறிமுறையொன்றை நிறுவுவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.புதிய சட்டங்களை இயற்றும் போதும் கொள்கைகளை வகுக்கும் போதும் “எங்களைப் பற்றிய முடிவுகளை எங்களைத் தவிர்த்து எடுக்க வேண்டாம்” என்ற அடிப்படையில், ஆபத்தான நிலைமைகளில் உள்ள சமூகத்தின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்கான தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.அத்துடன், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்புகளை வழங்குதல், சமமான தொழில் நிபந்தனைகள் மற்றும் ஊதியத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துதல், பணியிடங்களில் நியாயமான வசதிகளை ஏற்படுத்துதல், அரச சேவையில் ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்பு ஒதுக்கீடு தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை முன்மொழிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கும் சர்வதேச தரநிலைகளுக்கும் ஏற்ப, ஆபத்தான நிலைமைகளில் உள்ள சமூகத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நிலையான சட்டக் கட்டமைப்பொன்றை துரிதமாக உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார ஆகியோர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.மேலும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய பேரவையின் சட்டமூலத் தயாரிப்பு உபகுழுவின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-10-02

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 29) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.குறிந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும், நிதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.ஆணைக்குழுவின் வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை அங்கீகரித்தல், நிதி மற்றும் செயற்பாட்டு சுயாதீனம், நிதியக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31ஆம் பிரிவின்படி, ஆணைக்குழுவின் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் நிதி அமைச்சின் ஊடாக அல்லாமல் நேரடியாக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளைப் பெற்றுக்கொண்டு சபாநாயகர், 10 நாட்களுக்குள் அதனைப் பாராளுமன்றத்திற்கு (அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், பாராளுமன்றத்தினால் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும் திருத்தங்களுடன், தேசிய வரவு செலவுத் திட்ட ஆவணத்தில்/ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்காக நிதி அமைச்சரிடம் அது அனுப்பி வைக்கப்படும்.2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் நிதி அமைச்சரின் அவதானிப்புகளுடன் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு செப்டெம்பர் மாதம் வரை காலதாமதம் ஏற்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதனால் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் கால அட்டவணைக்கு பாதிப்பு ஏற்படுவதால், எதிர்வரும் ஆண்டுகளில் வரவு செலவுத் திட்டச் செயன்முறையை உரிய காலத்திற்குள் முன்னெடுப்பதற்காக, ஆணைக்குழுவின் மதிப்பீடுகளை மே 30ஆம் திகதிக்குள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டின் திறைசேரி சுற்றறிக்கையொன்றினால் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வாகனங்களை கொள்வனவு செய்தல்/குத்தகைக்கு எடுத்தல், பிராந்திய அலுவலகங்களுக்காக கட்டடங்களை வாடகைக்கு எடுத்தல் மற்றும் கடமைத் தேவைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.குறித்த நடவடிக்கைகளுக்காக நிதி அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதன் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.ஆணைக்குழுவின் நிதியத்தின் தன்மை மற்றும் அதன் பயன்பாடு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கென தனியான நிதியம் நிறுவப்பட்டுள்ளமை மற்றும் ஒருங்கிணைந்த நிதியம் மற்றும் ஆணைக்குழுவின் பொதுநிதியத்தின் ஊடாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும் என குழுவின் தவிசாளர் இந்தக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் குழுவினால் விசாரிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடனான கடப்பாடுகள் மற்றும் நாட்டின் ஊழல் எதிர்ப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.இதற்கமைய, ஆணைக்குழுவிற்காக 971 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2026 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் 23 பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக தற்போது காணப்படும் அரசாங்கக் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அவற்றில் சில கட்டடங்களைப் புனரமைத்து பயன்படுத்துவதற்கும், ஏனைய கட்டடங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.மேலும், ஜப்பான் அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் கீழ், பிராந்திய அலுவலகங்களுக்குத் தேவையான கணினிகள் மற்றும் நிழற்படப் பிரதியெடுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 109 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திசாநாயக்க தெரிவித்தார்.அத்துடன், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்களில் சுமார் 34,000 பேர் தாமதக் கட்டணங்களை அறவிடுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தச் செயன்முறையின் மூலம் பெறப்படும் அபராதத் தொகைகள் ஆணைக்குழுவின் நிதியத்திற்கு வரவு வைக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.ஆணைக்குழுவின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. முன்னதாக குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, ஆணைக்குழுவின் தவிசாளரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தவிசாளரின் (President of the Court of Appeal) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு சமமானதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.குழு உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோர் இணையவழித் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கூட்டத்தில் இணைந்துகொண்டனர்.


2026-10-02

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்  நஜித் இந்திக அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 30) பாராளுமன்றத்தில் கூடியபோதே குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இலத்திரனியல் முறையில் சமர்ப்பித்தல் மற்றும் அதற்கான பொதுமக்களின் அணுகல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், சட்டத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக உள்ள தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்களைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks