2025-01-23
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் அண்மையில் (ஜன. 21) பாராளுமன்றத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் செயற்திட்டம் மற்றும் பத்தாவது பாராளுமன்றத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ள 7 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டத்தை தயாரிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
பெண்களின் மேம்பாடு மற்றும் வலுப்படுத்தல் தொடர்பில் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன முன்வைத்த திருத்தப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய சட்டமூலத்தை மீண்டும் முன்வைக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துரபுள்ளே முன்வைத்த தனிநபர் சட்டமூலத்துக்கான திருத்தங்களை மேலும் ஆராய்ந்து, அதற்குப் புதிய முன்மொழிவுகளை உள்வாங்கி மீண்டும் பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் திருத்தங்களுக்கு ஒன்றியத்தின் உறுப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள பத்தாவது பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், 2025 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தீப்தி வாசலகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, ஒஷானி உமங்கா, (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவெல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-09-07
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 13ஆவது கூட்டம், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரையிலான காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் வரைவு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டம் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாராளுமன்ற ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை, வரவு-செலவுத் திட்டத்திற்காக குரல் கொடுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல், சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள், அத்துடன் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய அரச சேவைகள் ஆகிய துறைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.IFES நிறுவனத்தின் இலங்கைப் பிரதிப் பணிப்பாளர் இந்திரக உபேசேகர, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அனோஜிதா சிவாஸ்கரன் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய சபையின் உறுப்பினர் டிக்கிரி குமார ஜயவர்தன ஆகியோர் இதுவரை ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் முன்னிலையில் விளக்கமளித்தனர்.இயலாமையுடைய நபர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளைப் பிராந்திய மட்டத்திலான திட்டமிடலில் உள்ளடக்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட மாவட்ட ரீதியான ஆலோசனை நிகழ்ச்சிகளின் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், மாவட்ட மட்டத்தில் செயற்படும் அணுகல் தொடர்பான கணக்காய்வுக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஊடாக பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் போது, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தினரின் செயற்பூர்வமான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கட்டிடங்கள் மற்றும் நகரத் திட்டமிடலின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே அணுகல் வசதிகளை உள்ளடக்குவதன் மூலம், பின்னர் மேற்கொள்ள வேண்டிய அதிக செலவிலான மாற்றங்களை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு-செலவுத் திட்டத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 அமைப்புகளின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட 234 கொள்கை மற்றும் நடைமுறை முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்த முன்மொழிவுகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும், அதன் மூலம் ஆதரவுத் தேவையுடையோருக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கின்றனவா என்பதையும் நெருக்கமாகக் கண்காணிக்க ஒன்றியம் தீர்மானித்தது.இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தற்போதுள்ள சட்ட மற்றும் கொள்கை ரீதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் “இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம்” மற்றும் “சைகை மொழி சட்டமூலம்” ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போது காணப்படும் சட்ட ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தனியார் துறை நிறுவனங்களுக்காக அணுகல் தொடர்பான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை படிப்படியாக சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதுடன், தெரிவுசெய்யப்பட்ட சில தனியார் நிறுவனங்களுடன் முன்மாதிரித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.அரச சேவைகளை மேலும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய சேவைகளாக மாற்றுவது தொடர்பிலும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. தொழில் அமைச்சின் “மெஹெவர பியச” கட்டடம் மற்றும் செத்சிறிபாய I மற்றும் II கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகல் தொடர்பான கணக்காய்வு முடிவுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. செத்சிறிபாய III கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், இயலாமையுடைய நபர்கள் அணுகக்கூடிய வகையில் அதனை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.மேலும், தாழ்தளப் பேருந்து சேவைகள், ஆதரவுத் தேவையுடையோர் அணுகக்கூடிய வகையிலான சுற்றுலாத்துறை மற்றும் “மிதுரு நகர” வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் அரச சேவைகளில் அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கான முன்மாதிரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சுகாதார சேவைகளைப் பெறும்போது ஆதரவுத் தேவையுடையோர் எதிர்கொள்ளும் அணுகல் தடைகளை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகத்தினர் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் கண்ணியமான சமூக வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை உருவாக்குவது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவர்களின் குரலுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் இந்தப் பொறுப்பை தொடர்ந்தும் நிறைவேற்றும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், IFES நிறுவனம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, வைத்தியர் இளைதம்பி ஸ்ரீநாத், சட்டத்தரணி பாக்கியஸ்ரீ ஹேரத் மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-04
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், கணக்காய்வு செயன்முறையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், திறமையான மனித வளத்தைத் தக்கவைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்கள் கலந்துகொள்ள முடியாதமை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அச்சந்தர்ப்பத்தில் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், இணையவழி முறையின் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க கலந்துகொண்டார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும் தரமானதாகவும் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை பரவலாகப் பயன்படுத்துவதன் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.கணக்காய்வு செயன்முறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் கணக்காய்வு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன், அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் மேலும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும் என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், கணக்காய்வுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பின்னர் வேறு துறைகளுக்குச் செல்வதன் காரணமாக ஏற்படும் மனித வளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.திறமையான கணக்காய்வு அதிகாரிகளை சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்காக பொருத்தமான கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், அரச நிறுவனங்களின் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைத் திருத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வின்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்கும்போது தெளிவான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றைத் தயாரித்து, பணியாளர் தேவைகள் மற்றும் வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அதன் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல், அத்துடன் சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆணைக்குழுவின் பொறுப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஆணைக்குழுவை முழுமையான செயற்பாட்டு மட்டத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்திற்கு அமைவாக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பதால், அந்த உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முழுநேர உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குழுவினால் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.
2026-09-04
2026 ஆண்டு சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 7.5 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல் கொள்வனவை துரிதப்படுத்துவது இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.இதன்போது, நெல் கொள்வனவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை இணைத்துக்கொள்ளுதல், நெல் விலை மற்றும் சந்தை முகாமைத்துவம், போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதுடன், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்காக நீண்டகால தேசியக் கொள்கையொன்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, இலங்கை சுங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. ASYCUDA முறைமையை மேலும் நவீனமயப்படுத்தி, தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கான காகிதமற்ற சுங்கச் செயன்முறையை 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரம் (Trade National Single Window) ஊடாக சுங்கத் திணைக்களத்திற்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.ASYCUDA முறைமையில் தேவையான வசதிகள் காணப்பட்டாலும், ஏனைய அரச நிறுவனங்களில் இதற்கு ஒத்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறைமைகள் இல்லாத காரணத்தினால், அனைத்து நிறுவனங்களையும் தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.அத்துடன், பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் முன்பணக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெறும் நிதி முறைகேடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இத்தகைய முறைகேடுகளைத் தடுப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
2026-09-03
பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்தது. குறித்த குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், 2026 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,060,559 மில்லியன் ரூபாய் எனவும், அந்தக் காலப்பகுதிக்குள் 1,379,084 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது சதவீத அடிப்படையில் 130% முன்னேற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.இதற்கமைய, இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகளவான முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தரவுகளுடன் தெரிவித்தனர்.2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது. அத்துடன், அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை 1,000cc இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளதுடன், அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96% ஆகும்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விதம், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.