logo

E   |   සි   |  

2024-07-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பெருந்தோட்டக் கம்பனிகள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை மீட்பதற்கு உடனடியாக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு காணி மறுசீரமைப்பு அணைக்குழுவுக்குப் பரிந்துரை

  • காணி மறுசீரமைப்பு அணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் குடியிருப்பு மற்றும் உறுதியை வழங்கும் முறைமையை மீள்பரிசீலனை செய்து எளிமைப்படுத்தடுமாறும் குழுவினால் பரிந்துரை
  • காணி மறுசீரமைப்பு அணைக்குழுவினால் சுரங்கங்களுக்கு தற்பொழுது வழங்கும் 1 பெர்சஸ் காணியின் அளவை அதிகரிக்குமாறும் பரிந்துரை - ஒரு பெர்சஸுக்கு அறவிடும் வரியை திருத்துமாறும் குழுவினால் முன்மொழிவு   
  • 2010க்கு முன்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளில் அனுமதியின்றி  குடியமர்ந்தவர்களுக்கு பத்திரங்களை வழங்கும் போது, அதனை 2021 க்கு முன்னர் என நீடிக்கப் பரிந்துரை

 

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத ஏக்கர் கணக்கான காணிகள் பெருந்தோட்டக் கம்பனிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வெளிப்படுத்தியது. அதற்கமைய, பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படாத, கம்பனிகளால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்தார். அவரின் தலைமையில் இந்தக் குழு பாராளுமன்றத்தில் அண்மையில் (ஜூலை 11) கூடிய போதே இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது. இதன்போது, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் (LRC) அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் தற்போது 7000 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுக் காணப்படுவதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், சுமார் 56,000 ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பாளர்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, மாவட்ட ரீதியாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு (LRC) சொந்தமான காணியின் தொகை குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் குடியிருப்பு மற்றும் உறுதியை வழங்கும் முறைமையை மீள்பரிசீலனை செய்து, அந்த செயன்முறையை எளிமைப்படுத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது. அத்துடன், வணிக நடவடிக்கைகளுக்காக காணிகளை விடுவிக்கும் போது சம்பந்தப்பட்ட விடுவிப்பு நடவடிக்கைகளுக்கு அறவிடும் கட்டண முறைமை தொடர்பான அறிக்கை ஒன்றை குழுவுக்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்குக் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அத்துடன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சுரங்க அகழ்வுக்காக தற்பொழுது வழங்கப்படும் 1 பெர்சஸ் காணியின் அளவை அதிகரிக்குமாறும், ஒரு பெர்சஸுக்கு அறவிடும் 40,000 ரூபாய் வரியை திருத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது.

அத்துடன், 2010க்கு முன்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளில் அனுமதியின்றி  குடியமர்ந்தவர்களுக்கு பத்திரங்களை வழங்கும் போது, அதனை 2021 க்கு முன்னர் குடியமர்ந்தவர்களுக்குக் கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வருடத்தை திருத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவது தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர். அதற்கமைய, பொருளாதார வளர்ச்சிக்கு வினைத்திறனாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தெரிவு செய்யப்பட்ட காணிகளை இலங்கையிலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ டபிள்யு,எச்.எம். தர்மசேன, கௌரவ வசந்த யாப்பா பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ வருண பிரியந்த லியனகே, கௌரவ ரோஹன பண்டார, கௌரவ நிமல் பியதிஸ்ஸ மற்றும் கௌரவ ஜகத் பிரியங்கர ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

12



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks