2024-02-06
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நாளை (பெப். 07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (06) நடைபெற்றதுடன், தேவி பாளிகா கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை (07) மு.ப 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.
விருந்தினர்கள் நாளையதினம் மு.ப 09.45 மணிக்குள் தங்கள் இருக்கைகளில் அமருமாறு கோரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பார்கள்.
அதனைத் தொடர்ந்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.
பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவி பாளிகா கல்லூரியின் மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.
இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி அவர்கள் மு.ப 10.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் பிரதிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர். சபைக்குள் நுழையும்போது பிரதிப் படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.
சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை 08ஆம் திகதி மு.ப 9.30 மணிவரை ஒத்திவைக்கப்படும். சபை ஒத்திவைக்கப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார். விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E - Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026-11-14
ரயில்களில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நிலைபேறான தீர்வுகளை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில்வே ஊழியர்களைத் தெளிவூட்டுதல், காட்டு யானைகளின் வாழ்விடங்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் நவீன கண்காணிப்பு மற்றும் அடையாளம் காணும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக ரயில்களில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைக் குறைப்பதே இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹவினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குச் சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி சமர்ப்பித்த எழுத்துமூலப் பதிலில் மேற்கண்ட விடயங்கள் தெரியவந்தன.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலுக்கு அமைய, ரயில்வே திணைக்களத்தின் கிழக்கு ரயில் பாதையின் இருபுறங்களிலும் தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையிலும், சிறந்த முறையில் வேகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையிலும் மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், கல்ஓயா சந்தியிலிருந்து ஹிங்குராங்கொட வரையிலும், கல்ஓயா சந்தியிலிருந்து கந்தளாய் வரையிலும் காட்டு யானைகள் ரயில் பாதையைக் கடக்கும் 27 கிலோமீற்றர் நீளமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் காட்டு யானைகள் இலகுவாகப் பயணிப்பதற்கு ஏதுவாக, ரயில் பாதையின் தண்டவாளத் தூண்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்பும் வகையில் 800 கொங்கிறீட் கற்துண்டுகள் பதிக்கும் பணி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.ரயில் பாதையின் சில பகுதிகளிலும் வளைவுகளிலும் நடமாடும் காட்டு யானைகளை ரயில் சாரதிகளால் அவதானிக்க முடியாத நிலை காணப்படுவதால், அத்தகைய இடங்களில் 10 முதல் 20 மீற்றர் வரையான தூரத்திற்கு அடர்ந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 20 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.ரயில்வே திணைக்களத்தின் சாரதிகள், ரயில் நிலைய அதிபர்கள், ரயில் பாதைகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் ரயில் சாரதிகளின் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 2025.05.16 மற்றும் 17ஆம் திகதிகளில் நடத்தப்பட்டுள்ளன.ஹபரணை ரயில் நிலையத்தைக் கடந்து கந்தளாய் நோக்கிப் பயணிக்கும்போது அமைந்துள்ள வனப் பாதுகாப்பு ஒதுக்குப் பகுதிக்குள், ரயில் பாதையிலிருந்து கணிசமான தூரத்தில் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இரண்டு குளங்களை அமைத்தல் மற்றும் அவற்றைப் போஷிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக 25.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.கல்ஓயா மற்றும் மின்னேரியவுக்கு இடையிலான 141ஆம் இடத்தில், காசிக்கோட்டை ரயில் பாதையைக் கடந்து யானைகள் பயணிக்கும் பகுதியைக் கண்காணிப்பதற்காக CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை அனுராதபுரம் கட்டுப்பாட்டு அறையினூடாகக் கண்காணிக்கப்படுகின்றன.மேலும், காட்டு யானைகளை அடையாளம் காண்பதற்காக ரயில்களில் வெப்ப உணர்திறன் கமராக்களை (Thermal Detector Cameras) பொருத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றினால் தொடர்ச்சியான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ரயில்களில் மோதுண்டு 2020ஆம் ஆண்டு முதல் 2026.10.12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 81 யானைகள் உயிரிழந்துள்ளதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026-11-12
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 12) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 6.30 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) நவம்பர் 13 ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் இடம்பெறும்.2026 ஒக்டோபர் 7ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 04 சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2026-11-12
இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (நவ. 12) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.சபாநாயகரின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டமூலத்தின் 29 ஆம் வாசகம் அரசியலமைப்பின் 14(1)(இ) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின் போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம், மேற்படி முரண்பாடு நீங்குவதுடன், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.மேலும், சட்டமூலத்தின் 7(1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின்போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மேற்படி முரண்பாடு நீங்குவதுடன், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு உட்பட்டு, சட்டமூலத்தின் ஏனைய ஏற்பாடுகள் எவையும் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் மேலும் தீர்மானித்திருப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும் சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.பின்வரும் திருத்தங்களை (அவற்றில் மூன்று மேலதிக மன்றாடியார் அதிபதி அவர்களினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன) குழுநிலையில் மேற்கொண்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது:-குழுநிலைப் பரிசீலனையின் போது, 26(2) ஆம் உட்பிரிவில் “அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில்” என்னும் சொற்றொடரை உட்புகுத்துவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மேற்படி உட்புகுத்தலுடன், 26(2) ஆம் உட்பிரிவு பின்வருமாறு அமைய வேண்டும்:-“(1) ஆம் உட்பிரிவின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நீதவான் முன்னிலைக்கு கொண்டு வரப்படுவதன் போது, புலனாய்வை மேற்கொள்கின்ற பொலிசு அலுவலர், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக சந்தேகநபரை மேலும் நீடிக்கப்பட்ட காலத்திற்கு தடுத்து வைத்திருப்பது அவசியமானது என நியாயமான ஏதுக்களைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நீதவான், எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களின் அடிப்படையில், அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில், அத்தகைய சந்தேகநபரை மேலும் இருபத்துநான்கு மணித்தியாலங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு பொலிஸ் காவலில் வைத்திருக்கப்படுவதற்கு அதிகாரமளிக்கப்படலாம்;நீதித்துறை மேற்பார்வையை வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு, 59(5)(ஆ) ஆம் பந்தியில் “மேன்முறையீட்டு நீதிமன்றம்” என்னும் சொற்றொடருக்குப் பதிலாக “உயர் நீதிமன்றம்” என்னும் சொற்றொடரை இடுவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.தேவையற்றதாகக் கருதப்படுவதன் அடிப்படையில், சட்டமூலத்திலிருந்து 60(7) ஆம் உட்பிரிவை நீக்குதல்; மற்றும்66(1) ஆம் உட்பிரிவை பின்வருமாறு மீளமைத்தல் வேண்டும்”:-“இச்சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட அல்லது ஆக்கப்பட்ட ஒரு பணிப்புரை, பணிப்பு அல்லது கட்டளை அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு பணிப்பு, அரசியலமைப்பின் 126 ஆம், 140 ஆம் அல்லது 141 ஆம் உறுப்புரைகளின் கீழான நடவடிக்கைளில் கேள்விக்குட்படுத்தலாம்.”“குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருமாறு, தற்போதைய வடிவிலுள்ள சட்டமூலத்தின் வாசகம் 43(3) அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(ஐ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுகிறது. எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான நிபந்தனைகளின் அடிப்படையில், 43(3) ஆம் வாசகத்திற்குப் பதிலாகப் புதிய வாசகமொன்றை இடுவதன் மூலமும், புதிய 43(4) ஆம் வாசகமொன்றை உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடு நீங்கும்.தற்போதைய வடிவிலுள்ள 169 ஆம் வாசகம், அரசியலமைப்பின் 76 ஆம் உறுப்புரையையும் கருத்திற்கொண்டு நோக்கும்போது, அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் 169(1) மற்றும் 169(3) ஆம் வாசகங்களில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மேற்படி முரண்பாடு நீங்கும்.தற்போதைய வடிவிலுள்ள 45 மற்றும் 65 ஆம் வாசகங்கள், அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றன. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 45(1) ஆம் வாசகத்தைத் திருத்துவதன் மூலமும், குடிவரவு வசதிகளுக்கான செலவுகள் தொடர்பான முன்மொழியப்பட்ட ஏற்பாட்டை உரிய இலக்கமிடலுடன் உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடுகள் நீங்கும்.பரிசீலிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அரசியலமைப்புடன் வேறு எத்தகைய முரண்பாடும் இல்லை. எனினும், 174 ஆம் வாசகத்திலிருந்து “எழுத்திலான” என்னும் சொல்லை நீக்குவதன் மூலம் அதனைத் திருத்துவதற்கான உறுதிமொழியையும் உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.அடையாளங்காணப்பட்ட முரண்பாடுகளை நீக்குவதற்குத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், தொடர்புடைய ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட பெரும்பான்மை தேவைப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்தார்.
2026-11-11
இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் டேவிஸ் மயர்ஸ் அண்மையில் கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கௌரவ பிரதிச் சபாநாயகர் டேவிஸ் மயர்ஸை அன்புடன் வரவேற்றதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, சவால்மிக்க காலப்பகுதிகளில் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர், பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றல்களை வலுப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) ஊடாக வழங்கப்பட்ட ஆதரவையும் பாராட்டினார்.இந்தச் சந்திப்பின்போது, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் அண்மைய அமெரிக்க காங்கிரஸ் விஜயம் தொடர்பில் குறிப்பிட்டார். அத்துடன், USAID ஊடாக பாராளுமன்றத்தின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான ஆதரவுகள் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.இலங்கைக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பை டேவிஸ் மயர்ஸ் இதன்போது உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்றக் கட்டடத்தின் அழகியல் மற்றும் அதன் கட்டடக்கலை முக்கியத்துவம் குறித்தும், இலங்கையின் இயற்கை அழகு குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டேவிஸ் மயர்ஸ் பாராளுமன்றக் கட்டடத்தையும் பார்வையிட்டார்.இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் மற்றும் அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.