logo

02

E   |   සි   |  

2023-12-18

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

குழந்தைகள் உடைய தாய்மார் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதால் ஏற்படுகின்ற சமூகத்தாக்கம் அதிகம் - சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

  • பகல்நேர பராமரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான கட்டமைப்பு இல்லாமை மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்கள் முறையாகப் பதிவுசெய்யப்படாமை என்பன சிக்கலுக்குரியவை


இலங்கையில் தொழில்புரியும் பெண்களுடைய 0-5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தொடர்பில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்துப் பாராளுமன்றத்தில் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை பற்றி துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 0-5 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் தாயின் பாதுகாப்பு இன்றி வளர்ந்துவரும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற சமூகத்தாக்கம் எதிர்வரும் 20-25 வருடங்களில் சமூகம் என்ற ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல தலைமையில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி கூடியது.

02/2023 ஆம் இலக்க அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய 02 வயது மற்றும் அதற்கு மேலான வயதையுடைய குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், இதனால் குழந்தைகள் தாய்ப்பால் பெறும் திறனை இழப்பதுடன், தாய்க்கும் சேய்க்கும் இடையிலான இணைப்பு இழக்கப்படுவதாகக் குழு சுட்டிக்காட்டியது.

மேலும், சிறுவயதிலேயே தாயைப் பிரிந்திருப்பதால் எதிர்காலத்தில் மிகவும் சண்டை சச்சரவுகள் நிறைந்த தலைமுறை உருவாகும் என்றும், தாய் வெளிநாடு செல்வதால் குழந்தைப் பருவம் முதலே பிள்ளைகளுக்கு அரவணைப்புக் கிடைக்காமையால் அவ்வாறான பிள்ளைகள் எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுக்கு அடிமையாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், ஏனையவர்களின் பராமரிப்பில் கீழ் இருக்கும்போது அயல்வீட்டார்கள் மாத்திரமன்றி, தந்தை, பேரன் போன்ற நெருங்கிய உறவினர்களாலேயே அவ்வாறான குழந்தைகள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சிறுவயதிலேயே குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் முறையான பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படும் பகல்நேர பராமரிப்பு மையங்களின் வலுவான தேவை உள்ளது என்றும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் பகல்நேர பராமரிப்பு மையங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் குறிப்பிட்ட நிறுவனம் இல்லை எனவும், பகல்நேர பராமரிப்பு மையங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், இவற்றின் தரங்களில் குறைபாடுகள் இருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இலங்கையில் உள்ள பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்களின் விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என குழு கருத்து தெரிவித்தது.

இதன்படி, இலங்கையில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் தரத்தை ஒழுங்குபடுத்தவும், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தவும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்தது.

இந்த அமர்வில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ டளஸ் அழகப்பெரும, கௌரவ டி.வீரசிங்ஹ, கௌரவ மஞ்சுளா திசாநாயக மற்றும் குழுவின் உறுப்பினர் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே.சி.அலவத்துவல ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தைத் திணைக்களம், முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஆகியோரும் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

 

11 7

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-30

பாதியில் கட்டப்பட்ட மற்றும் முடங்கியுள்ள வீட்டுத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ளது

கடந்த காலங்களிலும், முந்தைய அரசாங்கங்களின் கீழும் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் கட்டப்பட்ட மற்றும் முடங்கியுள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கௌரவ வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.கௌரவ அமைச்சர் தலைமையில் நடைபெற்ற வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த வீட்டுத் திட்டங்களைப் பூர்த்திசெய்வதற்கான ஒரு புதிய திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்வது குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுவசதித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன்களும் மானியங்களும் முழுமையாக வழங்கப்படாததால், அந்த வீட்டுவசதித் திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அவ்வாறு முடிங்கிய 5,000 வீட்டுத் திட்டங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவற்றில் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வது குறித்து அடையாளம் கண்டு பரிந்துரைகளை மேற்கொள்ள அமைச்சுக்களின் இரண்டு முன்னாள் செயலாளர்கள்   இணைத் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.இந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளுக்கு அமைய பாதியில் கட்டப்பட்டு கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பாதியில் கட்டப்பட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய குடும்பங்களுக்கு அடுத்த ஆண்டு உதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக ஏறத்தாழ 2,000 குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.குறித்த அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் நீர்வழங்கல் குறித்த பல்வேறு பிரச்சினைகளை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட வீட்டுப் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாக விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.


2026-07-30

பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் அலுவலகத்தின் முதலாவது வருடாந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் கீழ் நிறுவப்பட்ட பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது வருடாந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியதுடன் இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2025 ஆம் ஆண்டில் அரசாங்கக் கடன் அளவு அதிகரித்தமை, வட்டி வீதங்களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை ஆகியவற்றால் அரசாங்கக் கடன் சேவையாற்றலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பொதுக் கடன் முகாமைத்துவத்தில் இலங்கை மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் ஊடாக பொதுக் கடன் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கடன் முகாமைத்துவம், கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல், நடுத்தர காலக் கடன் முகாமைத்துவ உத்திகளைத் தயாரித்தல் மற்றும் வருடாந்த அரசாங்கக் கடன் முகாமைத்துவ அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் போன்ற பிரதான பொறுப்புக்கள் முன்னெடுக்கப்படுவதும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளுக்கு சர்வதேச நிதிச் சந்தைகள் மற்றும் நவீன கடன் முகாமைத்துவ முறைகள் தொடர்பில் விசேட பயிற்சிகளை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குழுவில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.அத்துடன், பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்காக தயாரிக்கப்படும் பயிற்சித் தேவைகள் மதிப்பீட்டு அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இந்த அறிக்கையின் மூலம் நிறுவனத்தின் அதிகாரிகளிடையே காணப்படும் அறிவு மற்றும் திறன் இடைவெளிகளை அடையாளம் காணுதல், முறையான வருடாந்த பயிற்சித் திட்டத்தைத் தயாரித்தல், சர்வதேச நிதிச் சந்தை நடவடிக்கைகள், கடன் முகாமைத்துவம் மற்றும் இடர் கட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவையான பயிற்சித் தேவைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட எதிர்கால பயிற்சித் திட்டங்களுக்குத் தேவையான வரவு செலவுத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கான அடிப்படையை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், அரச தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்க உத்தரவாதங்கள், கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் அரசாங்கக் கடன் முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.


2026-07-23

சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணய முறைகேடு தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.


2026-07-22

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிக்குறிப்பு வரைவுக்கு அங்கீகாரம்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு,  பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks