பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்றுக் (நவ. 14ம் திகதி) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அழைக்கப்பட்டிருந்தது.
இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு ரி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை (ஆண்கள்) கிரிக்கெட் போட்டிகள் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகியிருந்தனர்.
அரசியலமைப்பின் 154 வது பிரிவு உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் கிரிக்கெட் நிறுவனத்தை கணக்காய்வுக்கு உட்படுத்தும் அதிகாரம் தமக்கு எவ்வாறு கிடைக்கின்றது என்பதை கணக்காய்வாளர் நாயகம் குழுவின் ஆரம்பத்தில் விளக்கினார்.
கிரிக்கெட் நிறுவனம் உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு தேவையான வழிகாட்டல்களும் உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்த போதிலும் அமைச்சின் தலையீடு மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் குழு வலியுறுத்தியது.
சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நிறைவேற்றுக் குழுவினால் அமைச்சரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டியபோதும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு அமைச்சரின் கவர் அனுமதியின் கீழ் 2022.10.07ஆம் திகதி செயலாளர் அனுமதி வழங்கியுள்ளபோதும், அமைச்சரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு அமைய அப்போதிருந்து முன்னாள் செயலாளரை எதிர்காலத்தில் அழைப்பதற்கும், அது தொடர்பான ஆவணங்களை ஆராய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா சுற்றுலாவுக்காக நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்களுக்காகக் கொடுக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ள 8 மில்லியன் ரூபா தொகை கணக்காய்வு விசாரணைகள் நடந்துகொண்டிருந்தபோது கணக்கிலிருந்து அகற்றப்பட்டமை மற்றும் இவை தொடர்பான பற்றுச்சீட்டுக்கள் கணக்காய்வுக்கு வழங்கப்படாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடைமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு வலியுறுத்தியது.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், 2020ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் அதிகாரங்களை நீக்குவதன் மூலம் விளையாட்டுக் கழகங்கள் விரும்பியவாறு செயற்படுவதற்கு அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்நிலைமையால் விளையாட்டு கழகங்களுக்கு அவர்கள் விரும்பியவாறு பணம் செலவழிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே 2016 ஆம் ஆண்டுக்கான சட்ட நிலைமையை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய பயணத்திற்கான விசா கடிதங்கள், விமான டிக்கெட்டுகள் வாங்குவது தொடர்பான கணக்காய்வு விசாரணைகள், வெளிநாட்டு பயணங்களுக்கு ஊடக நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் திறந்த முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இதற்கமைய, கிரிக்கெட் நிறுவனத்தின் முறையான நடைமுறைகளை உருவாக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு குழு உத்தரவிடப்பட்டதுடன், கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளக கணக்காய்வுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசாரணையை மூன்று நாட்களுக்கு தொடரவும், அந்த நாட்கள் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜனக வக்கம்புர, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர திஸாநாயக்க, கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ ஹேஷா விதானகே, கெளரவ சஞ்சீவ எதிரிமான்ன, கெளரவ ஜகத் குமார சுமித்ராராச்சி, கௌரவ மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல மஹேந்திர ராஜபக்ஷ, கௌர எம்.ராமேஸ்வரன், கௌரவ ராஜிகா விக்கிரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், கோப் குழுவில் அங்கம் வகிக்காத பல பாராளுமன்ற உறுப்பினர்களும் குழுத் தலைவரின் அனுமதியுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-08
திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை ஊக்குவிக்கும் நோக்கில் இளைஞர் யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட முன்மொழிவுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெற “Voice to Policy” நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.“Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்டத்திலும், இரண்டாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்றாவது நிகழ்வு கண்டியிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், சட்டத்தரணிகளான சுசந்த தொடவத்த, சமிந்திரானி கிரிஎல்லே, துஷாரி ஜயசிங்ஹ மற்றும் லால் பிரேமநாத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, எம்.கே. எம். அஸ்லம் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள், பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்பு, அரசாங்க நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல், சமூக உள்ளடக்கம் மற்றும் நீதி, அரசியல் ஈடுபாடு மற்றும் பிரதிநிதித்துவம் மற்றும் வேறு விடயங்கள் ஆகிய ஐந்து தொனிப்பொருட்களில் கீழ் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டனர். இவ்வாறு அடையாளம் காண்ட பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளையும், அதற்குப் பொறுப்புக் கூறக்கூடிய அரசாங்க நிறுவனங்களையும் அடையாளம் கண்டு ஒன்றியத்தின் உறுப்பினர்களிடம் முன்வைத்தனர். இவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர் யுவதிகளின் கருத்துக்களைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வது தமது நோக்கம் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட “Voice to Policy” நிகழ்ச்சிகளில் முன்மொழியப்பட்ட கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, இளைஞர் யுவதிகளைப் பாராளுமன்ற செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் இணைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.
2026-09-07
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை பொலிஸின் உயர் அதிகாரிகளிடம் அண்மையில் விடயங்கள் கேட்டறிந்தது.குறித்த குழு கௌரவ அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இதற்கு அமைய தித்வா சூறாவளியின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியத்திஸ்ஸ அவர்களும் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். தித்வா சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-07
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 13ஆவது கூட்டம், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.2026 ஜூலை முதல் 2027 ஜூன் வரையிலான காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் வரைவு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டம் நான்கு பிரதான துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாராளுமன்ற ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை, வரவு-செலவுத் திட்டத்திற்காக குரல் கொடுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல், சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள், அத்துடன் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய அரச சேவைகள் ஆகிய துறைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.IFES நிறுவனத்தின் இலங்கைப் பிரதிப் பணிப்பாளர் இந்திரக உபேசேகர, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அனோஜிதா சிவாஸ்கரன் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய சபையின் உறுப்பினர் டிக்கிரி குமார ஜயவர்தன ஆகியோர் இதுவரை ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் முன்னிலையில் விளக்கமளித்தனர்.இயலாமையுடைய நபர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளைப் பிராந்திய மட்டத்திலான திட்டமிடலில் உள்ளடக்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட மாவட்ட ரீதியான ஆலோசனை நிகழ்ச்சிகளின் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், மாவட்ட மட்டத்தில் செயற்படும் அணுகல் தொடர்பான கணக்காய்வுக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஊடாக பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் போது, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தினரின் செயற்பூர்வமான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கட்டிடங்கள் மற்றும் நகரத் திட்டமிடலின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே அணுகல் வசதிகளை உள்ளடக்குவதன் மூலம், பின்னர் மேற்கொள்ள வேண்டிய அதிக செலவிலான மாற்றங்களை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு-செலவுத் திட்டத்திற்காக, இயலாமையுடைய நபர்களின் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 அமைப்புகளின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட 234 கொள்கை மற்றும் நடைமுறை முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்த முன்மொழிவுகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும், அதன் மூலம் ஆதரவுத் தேவையுடையோருக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கின்றனவா என்பதையும் நெருக்கமாகக் கண்காணிக்க ஒன்றியம் தீர்மானித்தது.இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தற்போதுள்ள சட்ட மற்றும் கொள்கை ரீதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் “இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான புதிய சட்டமூலம்” மற்றும் “சைகை மொழி சட்டமூலம்” ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போது காணப்படும் சட்ட ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தனியார் துறை நிறுவனங்களுக்காக அணுகல் தொடர்பான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை படிப்படியாக சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதுடன், தெரிவுசெய்யப்பட்ட சில தனியார் நிறுவனங்களுடன் முன்மாதிரித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.அரச சேவைகளை மேலும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய சேவைகளாக மாற்றுவது தொடர்பிலும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. தொழில் அமைச்சின் “மெஹெவர பியச” கட்டடம் மற்றும் செத்சிறிபாய I மற்றும் II கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகல் தொடர்பான கணக்காய்வு முடிவுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. செத்சிறிபாய III கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், இயலாமையுடைய நபர்கள் அணுகக்கூடிய வகையில் அதனை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.மேலும், தாழ்தளப் பேருந்து சேவைகள், ஆதரவுத் தேவையுடையோர் அணுகக்கூடிய வகையிலான சுற்றுலாத்துறை மற்றும் “மிதுரு நகர” வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் அரச சேவைகளில் அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கான முன்மாதிரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சுகாதார சேவைகளைப் பெறும்போது ஆதரவுத் தேவையுடையோர் எதிர்கொள்ளும் அணுகல் தடைகளை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகத்தினர் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் கண்ணியமான சமூக வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை உருவாக்குவது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவர்களின் குரலுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் இந்தப் பொறுப்பை தொடர்ந்தும் நிறைவேற்றும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், IFES நிறுவனம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, வைத்தியர் இளைதம்பி ஸ்ரீநாத், சட்டத்தரணி பாக்கியஸ்ரீ ஹேரத் மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-04
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், கணக்காய்வு செயன்முறையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், திறமையான மனித வளத்தைத் தக்கவைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்கள் கலந்துகொள்ள முடியாதமை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அச்சந்தர்ப்பத்தில் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், இணையவழி முறையின் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க கலந்துகொண்டார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும் தரமானதாகவும் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை பரவலாகப் பயன்படுத்துவதன் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.கணக்காய்வு செயன்முறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் கணக்காய்வு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன், அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் மேலும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும் என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், கணக்காய்வுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பின்னர் வேறு துறைகளுக்குச் செல்வதன் காரணமாக ஏற்படும் மனித வளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.திறமையான கணக்காய்வு அதிகாரிகளை சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்காக பொருத்தமான கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், அரச நிறுவனங்களின் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைத் திருத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வின்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்கும்போது தெளிவான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றைத் தயாரித்து, பணியாளர் தேவைகள் மற்றும் வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அதன் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல், அத்துடன் சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆணைக்குழுவின் பொறுப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஆணைக்குழுவை முழுமையான செயற்பாட்டு மட்டத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்திற்கு அமைவாக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பதால், அந்த உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முழுநேர உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குழுவினால் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.