2023-10-16
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41 ஆ என்னும் உறுப்புரையின் ஏற்பாடுகளின் கீழும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக மூவரை நியமிப்பதற்காகப் பொருத்தமான தனிநபர்களை விதந்துரைப்பதைப் பரிசீலிப்பதற்காக அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள துறையொன்றில் அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும், மேன்மையடைந்தவர்களாகவும் ஆகக்குறைந்தது இருபதாண்டுகள் அனுபவத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தால் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
i. சட்டம்;
ii. குற்றப்புலனாய்வு மற்றும் சட்ட வலுவுறுத்தல்;
iii. சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்பதற்கான நிதிப் பதிவுகளின் கணக்காய்வு;
iv. சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்பதற்கான நிதிப் பதிவுகளின் கணக்கியல்;
v. பொறியியல்;
vi. சர்வதேசத் தொடர்புகளும் இராஜதந்திரச் சேவைகளும்;
vii. பகிரங்க அலுவல்களின் முகாமை; அல்லது
viii. பொது நிருவாகம்.
அத்துடன் ஒவ்வொரு விண்ணப்பதாரியும்-
i. இலங்கையின் பிரசையொருவராக இருத்தல் வேண்டும்;
ii. ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட திகதியன்றுள்ளவாறாக அறுபத்திரெண்டு (62) வயதுக்கு மேற்பட்டவராக இருத்தலாகாது;
iii. உடல்ரீதியிலும் உளரீதியிலும் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்;
iv. தகுதிவாய்ந்தவராகவும், நேர்மையானவராகவும், உயர் ஒழுக்க நேர்மையுடையவராகவும், நன்மதிப்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும்;
v. ஆணைக்குழுவின் உறுப்பினரொருவராக நியமிக்கப்படுமுன்னர் ஊதியம்பெறும் வேறெல்லாப் பதவிகளையும் கைதுறந்தவராக இருத்தல் வேண்டும். ஆயின். எவ்வாறாயினும், ஏதேனும் ஊதியம்பெறும் பதவியை வகிக்கின்ற ஆளொருவர், அத்தகைய உறுப்பினராகப் பதவியேற்குமுன்னர் அத்தகைய ஆள் ஊதியம் பெறும் எல்லாப் பதவிகளையும் கைதுறந்தால், ஆணைக்குழுவின் உறுப்பினரொருவராக நியமிக்கப்படுவதற்காகக் கவனத்துட்கொள்ளப்படலாம்.
vi. ஆணைக்குழுவின் உறுப்பினரொருவராக இருக்கையில் ஏதேனும் தொழிலைக்கொண்டு நடாத்துதலாகாது அல்லது ஏதேனும் உயர்தொழிலைப் பின்தொடருதலாகாது, அத்துடன்;
vii. அத்தகைய உறுப்பினராகப் பதவியேற்குமுன்னர் நிலவுகின்ற எழுத்திலான சட்டங்களுக்கிணங்க அரசியலமைப்புப் பேரவைக்கு அவரது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்துதல் வேண்டும்; மற்றும்
viii. ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவியேற்குமுன்னர் நியமிக்கப்படும் திகதியன்றுள்ளவாறாக அவரின் அக்கறைகளின் பகிரங்க வெளிக்கூறலை அவர் அரசியலமைப்புப் பேரவைக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
அத்துடன் அத்தகைய ஆள் –
i. குற்றப்பணமொன்றினால் மட்டும் தண்டிக்கப்படற்பாலதானவொரு தவறல்லாத குற்றவியல் தவறொன்றுக்குக் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின்;
ii. தகுதிவாய்ந்த நியாயாதிக்கமுள்ளவொரு நீதிமன்றத்தினால் ஒரு கடனிறுக்க வகையற்றவராகத் தீர்ப்பளிக்கப்படின்;
iii. சித்தசுவாதீனமற்றவராகவிருப்பின் அல்லது சட்டத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற இயலாதவராகவிருப்பின்;
iv. அத்தகைய ஆளின் கடமைகள் தொடர்பாகப் பாரதூரமான துர்நடத்தைக்குக் குற்றவாளியாகவிருப்பின்;
v. இச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தனது கடப்பாடுகளுக்கு இணங்கியொழுகத் தவறின்;
vi. ஏதேனும் அரசியற் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியொருவராக இருப்பின் அல்லது இருந்திருப்பின்; அல்லது
vii. தேர்தல்களுக்கு ஏற்புடையப்பாலனவான முறையான சட்டங்களினது ஏற்பாடுகளின் கீழ் நடாத்தப்பட்ட சனாதிபதித் தேர்தல்களின், பாராளுமன்றத் தேர்தல்களின், மாகாண சபைத் தேர்தல்களின் அல்லது எவையேனும் உள்ளூராட்சித் தேர்தல்களின் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அரசியற் கட்சியில் ஏதேனும் பதவியை அல்லது உறுப்பாண்மையை வகிப்பின் அல்லது வகித்திருப்பின்
ஆணைக்குழுவின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுவதற்குத் தகைமையற்றவராக கருதப்படுவர்.
உரிய முறையில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 2023 நவம்பர் 06 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்,
அரசியலமைப்புப் பேரவைச் செயலாளர் நாயகம்
இலங்கைப் பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே
கடித உறையின் இடது மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘அரசியலமைப்புப் பேரவை – CIABOC இற்கான நியமனங்கள்’ எனச் சுட்டிக்காட்டவும்.
2026-09-18
இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜேர்மன் பாராளுமன்றத்தின் தெற்காசிய பாராளுமன்றக் குழுவின் தூதுக்குழுவொன்று செப்டெம்பர் 16ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிக்லஸ் காப்பே அவர்கள் தலைமையிலான இந்தக் குழுவில், கௌரவ கெரோல்ட் ஓட்டன், கௌரவ ஜோஹன் சாத்தோஃப் மற்றும் கௌரவ உல்லே ஷாவுஸ் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். அத்துடன், இலங்கைக்கான ஜேர்மன் பிரதித் தூதுவர் சாரா ஹாசல்பார்த், பாராளுமன்றச் செயலகப் பணியாளர் கதரீனா பீனெர்ட் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் தாரிணி தழுவத்தே ஆகியோரும் இத்தூதுக்குழுவில் இணைந்திருந்தனர்.கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள் இத்தூதுக் குழுவை வரவேற்றதுடன், இலங்கை - ஜெர்மனி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் மதிய போசனத்துடனான கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் இலங்கை ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இலங்கைப் பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.இச்சந்திப்பில், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் குழு முறைமை, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் தலைமையை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், மற்றும் அரசியல் செயற்பாடுகளில் இளம் தலைமுறையினரின் அதிகளவிலான பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நேர்மை மற்றும் சட்டத்தை மதித்தல் தொடர்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், இன மற்றும் மத ரீதிதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அனைத்துச் சமூகங்களிடையேயும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மதிய போசனக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஜேர்மன் தூதுக் குழுவினர், மூன்று அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் மற்றும் இரண்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடனான இணைந்த கலந்துரையாடலிலும் பங்கேற்றனர். வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எஸ். எம். மரிக்கார் ஆகியோருடன் மேற்படி குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் சிலரும் இணைந்துகொண்டனர்.தூதுக்குழுவினரால் அடையாளம் காணப்பட்ட ஆர்வமுள்ள துறைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்திய கருத்துப் பரிமாற்றத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் இக்குழுக்கள் வட்டமேஜைக் கலந்துரையாடலில் பங்கேற்க அழைக்கப்பட்டன. இக்கலந்துரையாடலானது அந்தந்தக் குழுக்களின் முக்கிய பங்களிப்புகள், தற்போதைய செயற்பாடுகள் மற்றும் மூலோபாய முன்னுரிமைகள் குறித்த பார்வைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது. இதில் கழிவு மேலாண்மை, நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு, மின்சாரம் மற்றும் சக்தி, அத்துடன் பொருளாதாரம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.இந்தக் கலந்துரையாடல்கள் இலங்கை மற்றும் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அனுபவங்களையும் பார்வைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்த உதவியது.
2026-09-14
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஹித் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததாகச் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.எம்.எஸ். அப்துல் வாஹித் அவர்களின் கடிதத்திற்கமைய, குறித்த பதவி விலகல் 2026 செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்தாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-09-11
சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மாண்புமிகு வெய் ஹுவாசியாங் அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (10) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.கௌரவ சபாநாயகர் அவர்கள் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்களை அன்புடன் வவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து சீனா வழங்கிய உதவிகளையும், பாடசாலைச் சீருடைத் துணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கௌரவ சபாநாயகர் அவர்கள், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறிப்பாக பாராளுமன்றப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில், இலங்கை–சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக மேலும் பல முயற்சிகளும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். பட்டுப்பாதை மற்றும் கடல்வழிப் பாதைத் திட்டங்களின் கீழ் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ சபாநாயகர் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள், இலங்கை மக்களின் நட்புணர்வும் புன்னகையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையை “புன்னகைகளின் அழகிய தீவு” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு வந்தது முதல் தமக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பையும் விருந்தோம்பலையும் பாராட்டினார்.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கடல்சார் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அண்மைய உயர்மட்ட சந்திப்புகள் தொடர்பில் குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு சீனாவிற்கு மேற்கொண்ட தனித்தனி விஜயங்களின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களையும் சந்தித்ததாக தூதுவர் வெய் தெரிவித்தார். இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் மேலும் வளர்ச்சிக்கான புதிய மூலோபாய திசையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த தூதுவர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.2027ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும், இரப்பர்–அரிசி உடன்படிக்கையின் 75ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடவுள்ள நிலையில், அந்த ஆண்டின் முக்கியத்துவத்தையும் இருதரப்பினரும் எடுத்துரைத்தனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
2026-09-11
அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும்செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2497/37 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான ட்ரெட்சோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை ஊடக உயர்தொழிலாளர்களின் பட்டயம் பெற்ற நிறுவகச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 121ஆவது உறுப்புரையின் பிரகாரம், இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வழங்கப்பட்டதன் பின்னர், அதனை கௌரவ சபாநாயகர் அவர்கள் சபையில் அறிவிப்பார் என்பதற்கு உட்பட்டதாக, குறித்த இரண்டு தினங்களிலும் விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.