2023-10-03
சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொலிஸ் பிரிவு உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை உள்ளடக்கிய இந்த விசேட குழுவை ஒருங்கிணைப்பதற்கான பணி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்டது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
சிறுவர்களையும் பெண்களையும் வியாபார நோக்கத்திற்காக யாசகம் செய்வதற்குப் பயன்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், சிறுவர்கள் யாசகத்துக்குப் பயன்படுத்தப்படுவது முற்றாகத் தடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் வலியுறுத்தினார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 41 மாநகரசபைகள் மற்றும் 24 மாநகரசபைகைளை உள்ளடக்கிய நகரப் பகுதிகளில் யாசகர்கள் குறித்து கணக்கெடுப்பொன்றை நடத்தியிருப்பதாக சமூக சேவைகள் திணைக்களம் குழுவில் தெரிவித்தது. இந்தக் கணக்கெடுப்பின் தரவுகள் பதிவுசெய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை பதிவுசெய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் 3000 முதல் 4000 வரையிலான யாசகர்கள் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தரவுகள் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்ட பின்னர் யாசகத்துக்குப் பயன்படுத்தப்படும் பதினெட்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் பற்றிய தகவல்களை வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கணக்கெடுப்பின் முழுமையான தரவுகளையும் குறித்த விசேட குழுவுக்கு வழங்குமாறும் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்கள், நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் கணக்கெடுப்பொன்றை நடத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றை விரைவில் பரிந்துரைக்குமாறும், அதனை நடைமுறைப்படுத்துவதற்குச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டியிருந்தால் அதில் தலையிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுஜித் சஞ்சய பெரேரா, கௌரவ ராஜிகா விக்ரமசிங்ஹ, கௌரவ மஞ்சுலா திசாநாயக்க, கௌரவ ஜகத் குமார சுமித்திராரச்சி, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ திலக் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-10-14
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்துவது தொடர்பான பொதுமக்களின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்ற விசேட குழுவிடமர் சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்னவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அண்மையில் கூடியபோதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 31 முன்மொழிவுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பாக முன்னர் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்களின் அறிக்கைகளையும் ஆழமாக மீளாய்வு செய்து அறிக்கையிடுவதற்கான நிபுணர்கள் குழுவில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சாமிந்த அபேசிங்க, எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினர் கலாநிதி கே.தவலிங்கம், மற்றும் வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்ன குறிப்பிடுகையில், முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் மற்றும் கருப்பொருள்கள் தொடர்பில் தனித்தனியான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.தற்போது அரசியல் கட்சிகளினாலும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அத்துடன் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள அனைத்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் மீளாய்வு செய்து, இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், நாட்டின் பிரஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு தமது திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதேவேளை, தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட காலத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவும் குழு தீர்மானித்துள்ளது. அத்துடன், பொது மக்களின் கருத்துக்களை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்தவர்கள் விரும்பினால் அவர்களின் தனிப்பட்ட முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியும் என்றும் குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தின் பின்னர் குழுவின் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கௌரவ பிரதியமைச்சர்களான சட்டத்தரணி சுனில் வட்டகல, முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி.அலவத்துவல, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயக்கொடி, சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-10-08
NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறுதி தணிக்கை அறிக்கை தொடர்பில், அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த 06ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில், NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் கண்டறியப்பட்ட அசாதாரண நிலைமைகள், கணக்காய்வு செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் அது தொடர்பான தணிக்கை அறிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அலககட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், சம்பிக ஹெட்டிஆராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.இங்கு, இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் கணக்காய்வு தராதரங்கள் கண்காணிப்பு சபையானது (SLAAMB) மேற்கொண்ட விசாரணையின் கண்டறிதல்கள் மற்றும் Deloitte Touche Tohmatsu India LLP நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளை அடையாளம் காண்பதில் வெளியக கணக்காய்வாளர்கள் தவறியமை தொடர்பிலும் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நிறுவன நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பாக சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பொறுப்புக்கூறல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், NDB வங்கியின் கணிசமான பங்குகள் அரச மற்றும் பொதுமக்கள் நிதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதால், இவ்வாறான நிதி முறைகேடுகளினால் அரச நிதி மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.நிதி முறைமையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக LankaPay ஊடாக மத்தியப்படுத்தப்பட்ட மோசடி கண்காணிப்பு முறைமையொன்றை நிறுவுவதற்கான முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு வங்கியிலும் இடம்பெறும் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்காக வங்கி மட்டத்தில் மோசடி கண்காணிப்பு முறைமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதன்படி, NDB வங்கியில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான இறுதிக் கணக்காய்வு அறிக்கையில் பின்வரும் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:1) இந்தக் கணக்காய்வு 2016.04.01 முதல் 2026.03.31 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ரூ. 13,639,664,684/- (ரூ. 13.6 பில்லியன்) பெறுமதியான மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.2) 2026.09.29 அன்று மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தலின்படி, மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் பின்வருமாறு:2025.01.01க்கு முன்னைய காலப்பகுதிக்கு – ரூ. 1.5 பில்லியன்2025ஆம் ஆண்டில் – ரூ. 9.6 பில்லியன்2026.03.31இல் முடிவடைந்த காலாண்டுக்கு – ரூ. 2.5 பில்லியன்3) 2026.04.06 அன்று NDB வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப வெளிப்படுத்தலுடன் ஒப்பிடுகையில், அறிவிக்கப்பட்ட மோசடி தொகை ரூ. 13.2 பில்லியனிலிருந்து ரூ. 13.6 பில்லியனாக ரூ. 0.4 பில்லியனால் அதிகரித்துள்ளது. 2026.06.22 திகதியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் 2026.06.26 அன்று NDB வங்கியினால் வெளிப்படுத்தப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த மேலதிக மோசடி தொகை ரூ. 60 மில்லியனாகும்.4) இந்த மோசடி சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முன்னர் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்களில் குறிப்பிடப்பட்டிருந்தமை இறுதிக் கணக்காய்வு அறிக்கையினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.5) CEFT பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துதல், அடிப்படை வங்கியியல் முறைமையில் (Core Banking System) பயனர் மட்டத்திலான செயற்பாடுகள் (User Activities) மற்றும் பயனர் அணுகல் தகவல்களை (User Credentials) நிர்வகித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய NDB வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், பரிவர்த்தனை கண்காணிப்பு (Transaction Monitoring), நாளாந்த கணக்கிணக்கம் (Reconciliation), நிதி இணக்கப்பாடு (Compliance), உள்ளகக் கணக்காய்வு, கிளை வலையமைப்பு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு இடர் முகாமைத்துவம் (Operational Risk Management) உள்ளிட்ட பல செயற்பாட்டுத் துறைகளிலும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.6) வங்கியின் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் காணப்படும் நிர்வாகக் கட்டுப்பாட்டு முறைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளை வலுப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகள் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
2026-10-05
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதில், குறித்த ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்காக WFD நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆதரவு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், இளம் தலைமுறையினரை அரசியல் செயற்பாடுகள், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வருகை தந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தேர்தல்களுக்குப் பின்னரும் இளைஞர்களை தொடர்ச்சியாக அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களுடன் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், இளைஞர்கள் எதிர்கொள்ளும் தொழிலின்மை உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இளைஞர் தலைமைத்துவத்தையும் அவர்களின் அரசியல் பங்கேற்பையும் மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
2026-10-05
1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அங்கவீனமுற்ற ஆட்களின் உரிமைகள் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமொன்றை இயற்றுவது தொடர்பில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அர்களின் தலைமையில் அண்மைபில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், 1996 ஆம் ஆண்டு மேற்குறித்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 30 வருட காலப்பகுதியில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை இயற்றுவதன் அவசியம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தை (UN CRPD) இலங்கை 2016 ஆம் ஆண்டு அங்கீகரித்திருந்த போதிலும், அந்த சமவாயத்துக்கு அமைவான உள்நாட்டு சட்டமொன்றை இதுவரை உருவாக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சரவைத் தீர்மானங்களை மேற்கொண்டு இச்சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனைத் தயாரிக்கும் போது ஆரம்பகால நோக்கங்களுக்கும் தற்போதைய சட்டமூலத்திற்கும் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முக்கியமானது எனவும் மன்றத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய பேரவையின் உறுப்பினர்களைக் கொண்ட உபகுழுவினால் தமது அவதானிப்புகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட மாதிரி சட்டமூலம், சட்டவரைவு தயாரிப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அத்திணைக்களத்தினால் மீளத் தயாரிக்கப்பட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலம் தொடர்பில் தேசிய பேரவையின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.இதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளையும் கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அவதானிப்புகளின் அடிப்படையில் இந்தச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் அனைத்து தரப்பினரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்திற்கு (UN CRPD) அமைவாக சுயாதீன கண்காணிப்பு பொறிமுறையொன்றை நிறுவுவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.புதிய சட்டங்களை இயற்றும் போதும் கொள்கைகளை வகுக்கும் போதும் “எங்களைப் பற்றிய முடிவுகளை எங்களைத் தவிர்த்து எடுக்க வேண்டாம்” என்ற அடிப்படையில், ஆபத்தான நிலைமைகளில் உள்ள சமூகத்தின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்கான தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.அத்துடன், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்புகளை வழங்குதல், சமமான தொழில் நிபந்தனைகள் மற்றும் ஊதியத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துதல், பணியிடங்களில் நியாயமான வசதிகளை ஏற்படுத்துதல், அரச சேவையில் ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்பு ஒதுக்கீடு தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை முன்மொழிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கும் சர்வதேச தரநிலைகளுக்கும் ஏற்ப, ஆபத்தான நிலைமைகளில் உள்ள சமூகத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நிலையான சட்டக் கட்டமைப்பொன்றை துரிதமாக உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நிஹால் அபேசிங்க, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார ஆகியோர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.மேலும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், சட்டவரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசிய பேரவையின் சட்டமூலத் தயாரிப்பு உபகுழுவின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.