பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-09-21
இலங்கையில் குறிப்பிட்ட நிரந்தர வரிக் கொள்கை இல்லாமை முதலீட்டாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துவதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் (கலாநிதி) கௌரவ ஹர்ஷத சில்வா தெரிவித்தார்.
19.09.2023 அன்று நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட மூன்று கட்டளைகள் ஆராயப்பட்டபோதே குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2336/72 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சவர்க்கார உற்பத்திக்காக இந்நாட்டுக்கு ‘சோப் நூடில்ஸ்’ இறக்குமதி செய்யப்படுவதாகவும், மேலும் ஒரு சில நிறுவனங்களே பாம் எண்ணெயின் கொழும்பு அமிலங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சோப் நூடில்ஸ் உற்பத்தி செய்து வருவதும் இங்கு தெரியவந்தது.
இருந்தபோதும் இந்நாட்டுக்கு பாம் ஒயில் அமில இறக்குமதியின்போது 24% புதிய சுங்க வரி அறவிடப்படுவதால் ஒரு சில சவர்க்கார உற்பத்தி நிறுவனங்கள் மாத்திரம் பாம் எண்ணெய் அமிலத்துக்குப் பதிலாக தற்பொழுது குறைந்த வரிப் பெறுமானத்தைக் கொண்ட பாமிடிக் அல்லது லொரிக் ஆகிய அமிலங்களை மாற்றாக இறக்குமதி செய்து சோப் நூடில்ஸ் உற்பத்தி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் கைத்தொழில் அமைச்சின் பரிந்துரைக்கு அமைய சந்தையில் விலை சமநிலையைப் பேணுவதற்கு, அரசாங்கத்தின் வரி வருமானம் இழக்கப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த மாற்று அமிலங்களுக்கு 29% புதிய வரி இந்தக் கட்டளையின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த அமில வகைகள் இரப்பர் தொழில்துறைக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், சவர்க்கார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அமிலங்களுக்கு தனியான HS குறியீடுகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரிரு நிறுவனங்களை இலக்கு வைத்து அவர்கள் தொழில்நுட்பத்தின் மீது முதலீடு செய்திருக்கும் சூழ்நிலையில் இவ்வாறு வரி அறிவீடு செய்வது எந்தளவுக்கு நியாயமானது என்றும் குழு சுட்டிக்காட்டியது. இந்தத் தொழில்துறையின் தொழில்நுட்ப வினைத்திறனுக்கு வரி அறவிடுவது தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இந்நாட்டில் குறிப்பிட்ட நிரந்தர வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது. எனவே, இந்தப் புதிய வரி விதிப்பின் அடிப்படை மற்றும் குறிப்பிட்ட நோக்கங்கள், அவற்றினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து எதிர்வரும் 22ம் திகதிக்குள் அறிக்கை அளிக்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தது.
1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/64 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. 2021ஆம் ஆண்டு இலங்கையில் அச்சுத் தொழிலுக்கான மை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு 15% சுங்க வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, இலங்கையில் மை இறக்குமதி செய்யும் செலவை விட உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நிலையில் போட்டிக்கு ஏற்ற விலையை தக்கவைக்க முடியாது என்ற உண்மையை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, உள்ளூரில் அச்சுக்கான மை தயாரிப்பாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த வரியை 5% ஆக குறைத்து இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இதனால் அரசு இழக்கும் வரி எவ்வளவு எனக் குழு கேள்வியெழுப்பியது. அதன்படி, 1.5% வருமானம் அதாவது ரூ. 4.5 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வரித் தொகையில் இவ்வளவு சிறிய மாற்றத்திற்காக வரிக் கொள்கையின் ஸ்திரத்தன்மையை மாற்றுவது எவ்வளவு நியாயம் என்று குழு கேள்வி எழுப்பியுள்ளது. எனினும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
உற்பத்தி மூலப்பொருட்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கடந்த வரவுசெலவுத்திட்ட தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். கைத்தொழில் அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைவாக உள்ளுர் கைத்தொழில்துறையினரை நல்லெண்ண அடிப்படையில் பாதுகாக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சில சமயங்களில் ஒரு சில வர்த்தகர்களே பெரும் இலாபம் ஈட்டுவதால் நுகர்வோருக்கு நன்மைகள் கிடைப்பதில்லை எனவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சுங்க கட்டளைச் சட்டத்தின் 107(அ) பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட 2329/46 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன. வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் சட்டரீதியான வழிகளின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக, அவர்கள் நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக வளாகத்தில் வாங்கப்பட்ட பொருட்களுக்கு அவர்கள் அனுப்பிய அந்நியச் செலாவணியின் தொகையின் அடிப்படையில் மேலதிக தீர்வையற்ற கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பரிந்துரையின் பெயரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், கைத்தொலைபேசி செயலியும் பயன்படுத்தப்படும் என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு, இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், குறைந்த வருமானம் உள்ள நபருடன் ஒப்பிடும்போது, அதிக வருமானம் உள்ள ஒருவருக்கு வரிச் சலுகையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, இவ்விடயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு குழு அறிவுறுத்தியது.
அரசாங்க நிதி பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து பின்தொடர்வதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, உரிய காலக்கெடுவில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் தரப்பினரைக் குழுவின் முன் அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ நாலக கொடஹேவா, கௌரவ நிமல் லான்சா, கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், நிதி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
2026-09-17
இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-17
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-15
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-09-14
மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



