பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-09-08
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் என்பன தயார்ப்படுத்தல் இன்றி குழுவுக்கு வருகை தந்தமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கடும் அதிருப்தி வெளியிட்டது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் 2020 மற்றுமு் 2021ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டது.
இங்கு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்துக் கேள்வியெழுப்பியபோது அவற்றுக்கு வருகைதந்திருந்த அதிகாரிகளால் பதிலளிக்க முடியவில்லை. தயார்ப்படுத்தல் இன்றி அதிகாரிகள் குழுவில் ஆஜராகியிருப்பது குறித்துக் கடும் அதிருப்தி அடைவதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். குறிப்பாக நாட்டின் விளையாட்டுத்துறை தொடர்பில் கேள்வியெழுப்புவதற்கு இந்த நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தபோதும், அதிகாரிகள் அதற்கான தயார் நிலையில் வரவில்லையெனக் குழு சுட்டிக்காட்டியது. இதனால் கோபா குழுவின் அமர்வு இடையில் நிறுத்தப்பட்டு இந்த நிறுவனங்கள் இரண்டையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. கோபா குழுவின் வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வு முன்னெப்பொழுதும் இடம்பெறவில்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது.
இந்த அதிகாரிகள் வழங்கிய பதிலுக்கு அமைய விளையாட்டுத் தொடர்பில் தேசிய கொள்கைத்திட்டமொன்று இல்லை என்பதும், அரசின் பணம் செலவழிக்கப்படுவது குறித்து தொடர்ந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இதன்காரணமாக நாட்டில் விளையாட்டுத்துறை தொடர்பில் கவலைக்குரிய நிலைமை ஏற்படக் கூடும் எனக் குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளிடம் ஒலிப்பிக் போட்டியில் இடம்பெறும் போட்டி நிகழ்வுகளின் எண்ணிக்கை குறித்து கேள்வியெழுப்பப்பட்டதுடன், இதற்கு சரியான பதிலை வழங்க அதிகாரிகள் தவறியிருந்தனர். இது குறித்தும் குழு தனது கவலையை வெளிப்படுத்தியது.
மேலும், ஒலிம்பிக், பொதுநலவாய விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகொண்ட நாடுகள், இவற்றில் இலங்கை பெற்றுக்கொண்ட நிலை போன்றவை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அதிகாரிகளால் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை.
அதேநேரம், இலங்கையில் தற்போது எத்தனை விளையாட்டுக்கள் காணப்படுகின்றன என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அதிகாரிகள், புதிவு செய்யப்பட்ட 4 ஏ தர விளையாட்டுகளும், 12 பி தர விளையாட்டுகளும், 73 சி தர விளையாட்டுகளும் உள்ளதாகத் தெரிவித்தனர். இந்த நாட்டில் எத்தனை விளையாட்டுகள் தேசிய சாதனைகளை நிலைநாட்டியுள்ளன என்று குழு வினவியதுடன், இது தொடர்பில் உறுதியான பதிலை வழங்க முடியாது என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் அந்த விளையாட்டுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட பதிவுகள் குறித்தும் குழு வினவியிருந்ததுடன், இதற்கும் அதிகாரிகளால் பதில் வழங்க முடியவில்லை.
இலங்கையின் தேசிய விளையாட்டாகக் காணப்பட்ட எல்லே தற்பொழுது கைப்பந்தாக மாற்றப்பட்டமைக்குப் பின்பற்றப்பட்ட அளவுகோள்கள் யாது என்பது பற்றியும் குழு கேள்வியெழுப்பது, இதற்கும் அதிகாரிகளிடமிருந்து தெளிவான பதில் வழங்கப்படவில்லை.
மேலும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, சுமார் 1500 மில்லியன் செலவழிக்கப்பட்ட திட்டங்கள் பலனளிக்காதது குறித்துக் கேள்யெழுப்பிய குழு, இது தொடர்பாக திருப்திகரமான பதில் கிடைக்காத நிலையில் ஒரு மாதகாலத்துக்குள் இதுபற்றிய அறிக்கையொன்றை அளிக்குமாறு வலியுறுத்தியது.
அத்துடன், கல்வி அமைச்சுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினால், பாடசாலை மட்டத்தில் உருவாகும் வீரர்களைத் தேசிய மட்டடத்திற்குக் கொண்டு செல்வதில் தெளிவான திட்டம் எதுவும் இல்லையென்பதும் இங்கு தெரியவந்தது.
மேலும், மாவட்ட விளையாட்டுக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும், அவை குறித்து பின்னர் ஆராய்வுகள் கொள்ளப்படாமை குறித்தும் குழு தனது அதிப்தியை வெளியிட்டது. டொரிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹொக்கி மைதானத்தை சர்வதேச மட்டத்துக்குத் தரம் உயர்த்தப்படாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய விளையாட்டு கவுன்சில் ஆற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு சரியான புரிதல் இல்லை என்பதும் இங்கு தெரியவந்தது.
இறுதியாக, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அதில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இடம் குறித்து குழுவிடம் அறிக்கை அளிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். விளையாட்டு அமைச்சுக்கும், கல்வி அமைச்சுக்கும் இடையிலான விளையாட்டு அமைச்சகத்திற்கும் கல்வி அமைச்சகத்துக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்துமாறும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான (கலாநிதி) கௌரவ சுரேன் ராகவன், கௌரவ டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் (கலாநிதி) மேஜர் கௌரவ பிரதீப் உந்துகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-09-17
இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-17
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-15
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-09-14
மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

