E   |   සි   |  

2023-08-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சப்ரகமுவ மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் அவதானம்

சப்ரகமுவ மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இதன் சகல பிரிவுகளையும் ஆராயும் நோக்கில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

சப்ரகமுவ மாகாண சபையின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் (ஆக. 24) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இதில் பிஎஸ்/சிஎஸ்ஈ/00/1/4/2 ஆம் இலக்க மற்றும் 2018 ஒக்டோபர் 12ஆம் திகதி ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் ஊடாக ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் கொடுப்பனவு மற்றொருவருக்கு வழங்க எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்காத சூழலில், ஆளுநர் நாட்டில் இல்லாமல் வெளியில் இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட 725,000 ரூபா எரிபொருள் கொடுப்பனவை அவருடைய தனிப்பட்ட செயலாளர் பெற்றுக்கொண்டமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் செயலகத்திற்குச் சொந்தமான இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதையடுத்து, காப்புறுதி நிறுவனம் வழங்கிய இழப்பீட்டுத் தொகையைப் பெறாமல், பழுதுபார்ப்பதற்காக தனியார் திருத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இது தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை கோபா குழுவிடம் அளிக்குமாறு குழு பரிந்துரை செய்தது.

அத்துடன், மாகாண சபைக்குத் தேவையான வைத்தியர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்கள் வெளிநாடு செல்வதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதும் இங்கு தெரியவந்தது.

முதலமைச்சர் அமைச்சினால் புஸ்ஸல்ல பயிற்சி நிலையத்தில் ஐந்து மாடிகள் கொண்ட தங்குமிடத்தை நிர்மாணித்தமை குறித்தும், கட்டுமானப் பணிகளை பாதியில் நிறுத்தியமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட முற்பணத்தில் 24,702,328 ரூபா இதுவரை மீளப் பெறப்படவில்லை என்பது குறித்தும் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட சங்கங்களால் நடுவர் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டு பிணக்குகளைத் தீர்ப்பதில் ஈடுபடும் கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரிகளுக்காக நடுவர் கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தமக்கு அதிகாரம் இருப்பதாகவும், இந்தப் பணியை மேற்கொள்வது விடுமுறை தினங்களில் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும், இவ்வாறு பணிகளை மேற்கொள்வது அதிகாரிகளுக்கு லாபகரமானது என அங்கிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மாதாந்தம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் தொகை வழங்கப்பட்டுவரும் போது, மாகாண நிர்வாகத் திணைக்களமும் 5000 ரூபா வரம்பிற்கு உட்பட்டு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு வழங்குவது குறித்தும் குழு கேள்வி எழுப்பியது. உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கு அமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் அங்கீகாரத்துடன் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ விமலவீர திஸாநாயக்க, கௌரவ முதிதா பிரிஷாந்தி, கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கௌரவ (டாக்டர்) மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

6 7

 



தொடர்புடைய செய்திகள்

2026-09-17

பகிடிவதைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-15

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்களும் ஆசனப் பட்டி அணிவது செப்டெம்பர் 20 முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-09-14

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உபகுழுவில் கலந்துரையாடல்

மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-08

இளைஞர் யுவதிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் - திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம்

திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை ஊக்குவிக்கும் நோக்கில் இளைஞர் யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட முன்மொழிவுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெற “Voice to Policy” நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.“Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்டத்திலும், இரண்டாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்றாவது நிகழ்வு கண்டியிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், சட்டத்தரணிகளான சுசந்த தொடவத்த, சமிந்திரானி கிரிஎல்லே, துஷாரி ஜயசிங்ஹ மற்றும் லால் பிரேமநாத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, எம்.கே. எம். அஸ்லம் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள், பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்பு, அரசாங்க நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல், சமூக உள்ளடக்கம் மற்றும் நீதி, அரசியல் ஈடுபாடு மற்றும் பிரதிநிதித்துவம் மற்றும் வேறு விடயங்கள் ஆகிய ஐந்து தொனிப்பொருட்களில் கீழ் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டனர். இவ்வாறு அடையாளம் காண்ட பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளையும், அதற்குப் பொறுப்புக் கூறக்கூடிய அரசாங்க நிறுவனங்களையும் அடையாளம் கண்டு ஒன்றியத்தின் உறுப்பினர்களிடம் முன்வைத்தனர். இவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர் யுவதிகளின் கருத்துக்களைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வது தமது நோக்கம் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட “Voice to Policy” நிகழ்ச்சிகளில் முன்மொழியப்பட்ட கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, இளைஞர் யுவதிகளைப் பாராளுமன்ற செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் இணைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks