பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-07-28
இந்நாட்டுக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற முத்துராஜா யானையை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு சென்றமை காரணமாக இலங்கை தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட அதிருப்தி சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த யானை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டது நிபந்தனைகளுடனா என்பது மற்றும் அதற்கான கரணங்கள் என்ன என்பது குறித்தும் அந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும அமைச்சின் செயலாளரிடம் வினவினார்.
வனசீவரசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் மற்றும் அரசாங்க மாரக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் வருடாந்த அறிக்கைகளை குழுவில் கருத்திற்கொள்வதற்கு வனப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நிறுவனங்களின் பணிப்பாளர்களின் பங்கேற்புடன் இந்தக் குழுக் கூட்டம் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
2001 ஆம் ஆண்டில் தாய்லாந்து அரசின் நன்கொடையாக இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற முத்துராஜா யானை அரச பட்டயம் ஒன்றின் மூலம் அளுத்கம கந்தே விகாரைக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது என இதன்போது புலப்பட்டது. இந்த யானை தாவர, விலங்கினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பழக்கப்பட்ட யானையொன்றாக வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் இலக்கம் 178 கோப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதனையடுத்து தனியார் சொத்தாகக் கருத்தப்பட்டுள்ளதால், அதன்பின்னர் இந்த விடயம் மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் மற்றும் வனசீவரசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியுள்ளது.
இந்த யானையை பராமரிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளினால் யானையின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு தாய்லாந்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் அந்த யானையை தாய்லாந்துக்கு கொண்டு வருமாறு அந்நாட்டு அரசாங்கத்திடமும், இந்நாட்டிலுள்ள தாய்லாந்து தூதுவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைய, வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்து தூதுவர் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தலையிட்டு யானை தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட முன்னர் ஆரம்ப சிகிச்சையாக அதன் கால்களின் பின்பகுதியில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளித்து 90% க்கும் அதிகமாகக் குணமடைந்துள்ளது. ஆனால் யானையின் முன் கால்களில் உள்ள காயங்கள் குணமடைவதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், தாய்லாந்தில் யானைக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் இந்நாட்டை விட அதிகம் என்பதால், யானை குணமடைந்த பின்னர் மீண்டும் கந்தே விகாரைக்கு ஒப்படைக்கப்படும் என விகாரையின் தலைமை தேரருக்கு உறுதியளித்து, தாய்லாந்து அரசினால் சுமார் 220 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டு பிரத்தியேக விமானம் மூலம் யானை தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
ஆனால் முத்துராஜா யானையை இலங்கைக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என தாய்லாந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியதால், இது இலங்கைக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியது. இதற்கு உண்மையிலேயே பொறுப்பான அரச நிறுவனம் எது என்பது குறித்து குழு வினவியது. யானையை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு விகாரைக்கு வழங்கியுள்ளதால் யானையின் பொறுப்பு மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் மற்றும் வனசீவரசிகள் திணைக்களத்திற்கு இல்லை என வனசீவரசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சினால் கிடைக்கப்பெற்ற அறிவித்தலின் பிரகாரம், யானையை மீள அழைத்துச் செல்வதற்கு தேவையான வசதிகளை மாத்திரம் அமைச்சு வழங்கியது எனவும் அவர் தெரிவித்தார். எனினும், வெளிநாடுகளில் இருந்தும் யானைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதும், யானைகளுக்குப் பெயர் போன நாட்டிற்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட யானையைப் பராமரிக்க முடியாமல் போனமை சிக்கலானது எனக் குழுவின் தலைவர் தெரிவித்தார். கால்நடை மருத்துவர்களின் உதவியை முறையாகப் பெற்று யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தங்களுக்கு இருந்தபோதிலும், தாய்லாந்து அரசு மற்றும் மக்களின் பலத்த செல்வாக்கு காரணமாக யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பலாங்கொடை பிரதேசத்தில் யானை வேலிகள் அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அதிக விலையில் குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட நுகர்வுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் ஏதேனும் ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதன் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா பல வருடங்களாக மூடப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அகில எல்லாவல மற்றும் கௌரவ வருண லியனகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-09-15
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-09-14
மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-08
திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை ஊக்குவிக்கும் நோக்கில் இளைஞர் யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட முன்மொழிவுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெற “Voice to Policy” நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.“Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்டத்திலும், இரண்டாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்றாவது நிகழ்வு கண்டியிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், சட்டத்தரணிகளான சுசந்த தொடவத்த, சமிந்திரானி கிரிஎல்லே, துஷாரி ஜயசிங்ஹ மற்றும் லால் பிரேமநாத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, எம்.கே. எம். அஸ்லம் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள், பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்பு, அரசாங்க நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல், சமூக உள்ளடக்கம் மற்றும் நீதி, அரசியல் ஈடுபாடு மற்றும் பிரதிநிதித்துவம் மற்றும் வேறு விடயங்கள் ஆகிய ஐந்து தொனிப்பொருட்களில் கீழ் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டனர். இவ்வாறு அடையாளம் காண்ட பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளையும், அதற்குப் பொறுப்புக் கூறக்கூடிய அரசாங்க நிறுவனங்களையும் அடையாளம் கண்டு ஒன்றியத்தின் உறுப்பினர்களிடம் முன்வைத்தனர். இவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர் யுவதிகளின் கருத்துக்களைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வது தமது நோக்கம் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட “Voice to Policy” நிகழ்ச்சிகளில் முன்மொழியப்பட்ட கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, இளைஞர் யுவதிகளைப் பாராளுமன்ற செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் இணைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.
2026-09-07
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை பொலிஸின் உயர் அதிகாரிகளிடம் அண்மையில் விடயங்கள் கேட்டறிந்தது.குறித்த குழு கௌரவ அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இதற்கு அமைய தித்வா சூறாவளியின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியத்திஸ்ஸ அவர்களும் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். தித்வா சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

