பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-07-21
வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (ஜூலை 21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இநந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 4.45 மணி வரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
2026-11-25
2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொனிப்பொருள் – “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றிணைவோம்: நீதியை நிலைநாட்டுவோம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம், தண்டனையிலிருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவோம்”பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான உலகளாவிய இயக்கத்திற்கு பாராளுமன்றத்தின் ஆதரவு – சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பு16 நாட்கள் செயற்பாட்டு இயக்கத்தைக் குறிக்கும் வகையில் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்றத்தில் உரையாற்றினர்பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று (நவ. 25) நடைபெற்றன.இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கௌரவ பிரதமர் கலாநிதிஹரிணி அமரசூரிய, கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடையாளச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.இதற்கு இணையாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றப் பணியாளர்களும் செம்மஞ்சள் அல்லது செம்மஞ்சள் கலந்த ஆடைகளை அணிந்து இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு இணையாக, பாராளுமன்றத்திற்குள் 16 நாட்களுக்கான நிகழ்ச்சித் தொடரொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.இம்முறை உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தின் தொனிப்பொருளாக “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றிணைவோம்: நீதியை நிலைநாட்டுவோம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம், தண்டனையிலிருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என்பது அமைந்துள்ளது. இலங்கையில் இம்முறை இச்செயற்பாட்டு இயக்கம் “இது எனது உரிமை” என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் விடுத்தார். இதன்போது, நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன் இணைந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிக்கு இலங்கைப் பாராளுமன்றத்தின் ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் சபைக்கு அறிவித்தார்.அத்துடன், பாராளுமன்றத்தில் உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைத் தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் கூட்டுப் பங்களிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.16 நாட்கள் செயற்பாட்டு இயக்கமானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று ஆரம்பமாகி, டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று நிறைவடையும் உலகளாவிய இயக்கமாகும்.பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைகள் தொடர்பிலும் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டுதல், இத்தகைய வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் வன்முறைகளற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட ஊக்குவித்தல் ஆகியன இச்செயற்பாட்டு இயக்கத்தின் நோக்கங்களாகும்.அதற்கமைய, பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்குச் சட்ட மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதையும் இம்முறை செயற்பாட்டு இயக்கம் வலியுறுத்துகிறது.
2026-11-23
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று (நவ. 23) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத் தலைப்புக்கள் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டன.இதனைத் தொடர்ந்து, பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெற்றதுடன், இது வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2026-11-23
சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை உருவாக்குவதில் விசேட கவனம் – கௌரவ சபாநாயகர்சிறுவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துடன் சிறந்த முறையில் ஒத்துப்போவதாகவும், அவற்றை யதார்த்தமாக்குவது ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், சிறுவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பது ஒரு சந்தர்ப்பத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும், அதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது பெரியவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் அண்மையில் (நவ. 20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற “குட்டி அமாயாவும் நண்பர்களும் : இலங்கைக்கான ஒரு விருப்பம்” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.சிறுவர்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகளைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்கம், மேற்பார்வை, பிரதிநிதித்துவம் மற்றும் வரவுசெலவுத் திட்டப் பணிகள் ஊடாகக் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டில் உள்வாங்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சிறுவர்களின் குரலுக்குப் பாராளுமன்றத்தில் வாய்ப்பளிப்பதற்கும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், பத்தாவது பாராளுமன்றத்தில் கட்சி பேதங்களுக்கு அப்பால் அதனைத் துரிதமாக ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தையும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தினார். அத்துடன், கடந்த எட்டு தசாப்தங்களாக இலங்கையின் சிறுவர்களின் சுகாதாரம், போஷாக்கு, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக UNICEF நிறுவனம் ஆற்றிய பணிகளையும் சபாநாயகர் பாராட்டினார்.சிறுவர்களின் கருத்துக்கள் மற்றும் தேவைகள் தேசியக் கொள்கைகள், சட்டவாக்கம் மற்றும் வரவு செலவுத் திட்டத் தீர்மானங்களை மேற்கொள்ளும்போதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.சிறுவர், மகளிர் மற்றும் இளைஞர் உரிமைகளை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ளடக்குவதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற பேதமின்றி இணக்கப்பாட்டுக்கு வருவதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். அத்துடன், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் போஷாக்கின்மை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான அரச கொள்கையொன்று அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட 55 சிறுவர் பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றத்தில் முன்வைத்ததன் மூலம், சிறுவர்களின் குரலை கொள்கை உருவாக்கச் செயற்பாட்டில் உள்வாங்குவதன் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமும் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சிறுவர்களுக்கான பாராளுமன்ற சிறுவர் மன்றத்தைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.சிறுவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்டத் தீர்மானங்கள் அவர்களின் வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது பிரதேசத்திலுள்ள அனைத்துச் சிறுவர்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர் என UNICEF இலங்கைக்கான பதில் பிரதிநிதி பெகோனா அரெல்லானோ தெரிவித்தார். இலங்கையுடனான 80 ஆண்டுகால ஒத்துழைப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்துடன் மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதன்போது, 2036ஆம் ஆண்டளவில் இலங்கை எத்தகைய நாடாக இருக்க வேண்டும் மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் முக்கியமான விடயங்கள் எவை என்ற இரண்டு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு, சிறுவர்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகளை உள்ளடக்கிய “இலங்கைக்கான ஒரு விருப்பம்” பிரகடனத்தை ஏழு சிறுவர்கள் முன்வைத்தனர்.மேலும், “சட்டவாக்கம், மேற்பார்வை, பிரதிநிதித்துவம் மற்றும் வரவு செலவுத் திட்டப் பணிகள் ஊடாக சிறுவர் உரிமைகளை வலுப்படுத்துவதில் பாராளுமன்றத்தின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக UNICEF அதிகாரிகளால் விசேட அமர்வொன்றும் நடத்தப்பட்டது.இந்நிகழ்வில், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள், UNICEF நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-11-23
இந்தியாவின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் 09 பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 2026.06.23ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒப்பந்தப் பெறுமதியில் 10 சதவீதத்தைச் செலுத்துவதற்குத் தேவையான ஆவணங்களைப் பொறியியல் பிரிவு தற்போது தயாரித்து, அங்கீகாரத்திற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாமிந்தாணி கிரிஎல்லே வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விக்கு, கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சபையில் சமர்ப்பித்த எழுத்துமூல பதிலிலேயே இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் காரணமாகக் கட்டுமானச் செலவுகள் அதிகரித்தமை ஆகியவற்றினால், ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபா நிதியுதவியின் மூலம் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பணிகளை முன்னெடுக்க முடியாது எனப் பொறியியல் பிரிவு அறிவித்திருந்தது. இதற்கமைய, பொறியியல் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 600 மில்லியன் ரூபா பெறுமதியான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு அமைய, இந்திய அரசாங்கம் 2024ஆம் ஆண்டில் குறித்த நிதியுதவியை 300 மில்லியன் ரூபாவிலிருந்து 600 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.2020–2021 காலப்பகுதியில் நிலவிய கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2022ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியன இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மாகாணப் பொறியியல் திணைக்களங்களினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தொழில்நுட்ப ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அந்தத் திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு கணிசமான காலம் தேவைப்பட்டமை, ஒவ்வொரு கேள்விப்பத்திர ஆவணத்திற்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தமை மற்றும் கொள்வனவு செயன்முறையை முன்னெடுப்பதற்கு முன்னர் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் அவதானிப்புகளை உள்ளடக்குவதற்கு மேலதிக காலம் தேவைப்பட்டமை ஆகியன இத்திட்டத்தின் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்களாக அமைந்ததாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks