logo

01

E   |   සි   |  

2023-06-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு, சர்வதேச வியாபாரங்களை ஒழுங்குமுறைப்படுத்த பொறிமுறையொன்று அவசியம் – வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண் பெறுமானத்தை அதிகரிப்பது குறித்த விசேட குழுவில் அவதானம்

இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் வியாபார செயற்பாடுகள், அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வரி அறவீடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த இதுவரை உரிய பொறிமுறையொன்று இல்லையென்றும், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ மதுர விதானகே தலைமையில் அண்மையில் (ஜூன் 13) கூடிய இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான  பாராளுமன்ற விசேட குழுவிலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

தற்பொழுது காணப்படும் தொழில்வழங்குநருக்கும் ஊழியருக்கும் இடையில் காணப்படும் பாரம்பரிய தொழில் ஏற்பாடுகளுக்கு மாறாக தொழிற் சந்தையில் சுயமான தொழிலாளர்கள் (Freelancer) உள்ளடங்கலாக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள பொருளாதாரம் அல்லது கிக் பொருளாதார நிலைமை (Gig economy) தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

ஒன்லைன் தளங்களின் ஊடாக வர்த்தங்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் வரிகளைச் செலுத்தாது பெருமளவு பணத்தை வெளிநாட்டிலுள்ள தமது வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுக் கொள்வது இங்கு தெரியவந்தது. இதற்கமைய இணையத்தை அடிப்படையாகக் கொண்டு வணிகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு சம வர்த்தக சூழலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

வர்த்தக வங்கிகளின் தலைவர்கள், ஒன்லைன் தளங்களில் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிரடிட் கார்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கிக் பொருளாதாரம் (Gig Economy)வேகமாக வளர்ச்சிகண்டு வருவதால், ஒன்லைன் தளங்களின் ஊடான வர்த்தக செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் அதேநேரம், டிஜிட்டல் சேவை வரியொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், டிஜிட்டல் தளங்களைக் கொண்ட வர்த்தகங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் பலவற்றை நாட்டுக்குள் ஈர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் ஏற்படும் வரி சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான இரண்டாவது தூண் தீர்வுக்கு அமைய (G20 /OECD) 140 உறுப்பினர்களைக் கொண்ட உலக அமைப்பில் இலங்கை, பாகிஸ்தான், கென்யா மற்றும் நைஜீரியா போன்ற நான்கு நாடுகள் மாத்திரமே கைச்சாத்திடவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது.

அதேநேரம், நாணயத் தாள்களுக்குப் பதிலாக டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்தும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். நாணயத் தாள்களை அச்சிட்டு அவற்றைப் பயன்பாட்டுக்கு விடுவதற்கு வருடாந்தம் 3.2 பில்லியன் செலவு ஏற்படுவதாகவும், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை அதிகரிப்பதன் ஊடாக இந்தச் செலவீனங்களைக் குறைக்க முடியும் என இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்கப்படுத்துவது தொடர்பில் மத்திய வங்கி தயாரித்துள்ள திட்டம் குறித்த அறிக்கையொன்றைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ லலித் வர்ணகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

மத்திய வங்கி, சட்டமா அதிபர் திணைக்களம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, நிதி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், அவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் பங்கெடுத்திருந்தனர். நிறுவனங்களின் பதிவாளர் நாயகம், மத்திய வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, HNB வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, NDB வங்கி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின் தலைவர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், சிரேஷ்ட முகாமையாளர்கள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், இலங்கையில் உள்ள ஒன்லைன் சேவை வழங்குனர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Lanka Pay, Pick me, Uber, Master, Visa, Daraz ஆகிய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் இக்குழுவில் தமது கருத்துக்களை முன்வைத்தனர். எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படாத வரையில் நிறுவனங்களைப் பதிவு செய்வதை கட்டாயப்படுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது என்றும், நிறுவனப் பதிவுத் துறையானது தகவல்களைத் தாக்கல் செய்யும் முகவராகச் செயல்படும் என்றும் குழுவில் கலந்துகொண்டிருந்த நிறுவனப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டினர். தனிநபர் வியாபாரங்கள் மற்றும் பங்குடமைகள் பிரதேச செயலகங்களினால் பதிவுசெய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை முதலீடு செய்தல் மற்றும் வழங்குதல் என்பன இருவேறுபட்ட விடயங்கள் என அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி விவேகா சிறிவர்தன தெரிவித்தார்.இலங்கையில் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கும் வரி செலுத்துகின்றபோதும் சில சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-08-11

காணி முகாமைத்துவத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் நவீனமயப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-08-11

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக, நிதி மற்றும் டிஜிட்டல் முகாமைத்துவ செயற்பாடுகள் குறித்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் அவதானம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவம், நிறுவன ஆளுகை, உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு, டிஜிட்டல் கட்டமைப்புகளின் முகாமைத்துவம், ஒழுக்காற்று விசாரணைகள், வெளிநாட்டு கல்வி விடுமுறையைப் பெற்றுக்கொண்ட விரிவுரையாளர்களின் பிணை ஒப்பந்தங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பேராதனைப் பல்கலைக்கழகம் உள்நாட்டு தரவரிசையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், உலகளாவிய தரவரிசையில் பின்னடைவை எதிர்கொள்வதாகக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட நிலைமையல்ல என்றும், சர்வதேச போட்டித்தன்மை அதிகரித்துள்ளதன் காரணமாக ஏற்பட்ட நிலைமையாகும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தரவு முகாமைத்துவம் தொடர்பிலும் குழு விசேட கவனம் செலுத்தியது. ERP கட்டமைப்பின் நிலையான சொத்துக்கள் குறித்த மொடியுலை நடைமுறைப்படுத்தும்போது சேவை வளங்குனரின் திறன் போதுமானதாக இல்லாமை, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை, தனியார் துறையுடன் ஒப்பிடுகையில் நிலவும் சம்பள வேறுபாடுகள் காரணமாக திறமையான தொழில்நுட்ப அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் காணப்படும் சிரமம், கட்டமைப்புகளைப் புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாத மென்பொருள் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நிரந்தரமானதும் நிபுணத்துவம் வாய்ந்ததுமான தொழில்நுட்பக் குழுவொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பிலும் குழு கடுமையான கவனம் செலுத்தியதுடன், சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாமல் இருப்பது மற்றும் சட்டரீதியான, நிர்வாகரீதியான தாமதங்கள் காரணமாக நிறுவனத்திற்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்தது.வெளிநாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத விரிவுரையாளர்கள் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. இதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பிணை ஒப்பந்தங்களை மீறியமை தொடர்பில் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 201 மில்லியன் ரூபாய் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முடிந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்தப் பிரச்சினையை தனியொரு பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரம் தீர்க்க முடியாத காரணத்தால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு அனைத்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் வகையில் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், பிணை ஒப்பந்தங்களை மீறிய விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி, அவர்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையவழி ஊடாக இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் பங்களிக்கச் செய்வது போன்ற மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது  குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.இறுதியாக, பல்கலைக்கழகத்தின் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்துவதற்காக, கணக்காய்வு பரிந்துரைகள் மற்றும் குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டிஆரச்சி, தினேஷ் ஹேமந்த, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷண எகொட விதான, எம். கே. எம். அஸ்லம் மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-08-10

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், ஒரு தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்குத் தேவையான அதிகாரிகளை சேவையில் இணைந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினர்.புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நன்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு நடவடிக்கைகளை திறைமையான முறையில் முன்னெடுப்பதற்கு சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, முஜிபுர் ரஹ்மான், எம்.கே.எம்.அஸ்லம், தர்மசிறி விஜேசிங்ஹ, மேஜர் ஜெனரல் (ஒய்வு)  ஜி.டி.சூரியபண்டார ஆகியோரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 


2026-08-10

தரமான கல்வி முறைக்காக ஆசிரியர் சேவை மற்றும் உயர்கல்வித் துறையை வலுப்படுத்துவது தொடர்பில் அவதனாம்

தரமான கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர் சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துதல், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்த்தல், உயர்கல்வி நிறுவனங்களின் மனித வளத்தை வலுப்படுத்துதல் மற்றும் கல்வித் துறையில் காணப்படும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் குறித்த குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் பாடசாலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல், ஆசிரியர் இடமாற்றச் செயன்முறையை முறையாக முன்னெடுத்தல் மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் ஆசிரியர் தேவைகள் காணப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.ஆசிரியர் இடமாற்றச் செயன்முறையை வெளிப்படைத்தன்மையுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துதல், கஷ்டப் பிரதேச சேவை கொடுப்பனவுகளை வழங்கும் முறைமை மற்றும் பாடசாலைகளின் கஷ்டநிலைமையைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல்களை மீளாய்வு செய்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரையில், பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்விசார் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புதல், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) செயற்றிறனை மேம்படுத்துதல் மற்றும் கல்வித் துறையில் தர உறுதிப்படுத்தல் செயன்முறையை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பாடசாலை காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளுக்கான உள்ளடக்கக் கல்வி வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அதற்குத் தேவையான கொள்கை ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் கௌரவ நளின் ஹேவகே உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks