2023-05-23
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட குஷானி ரோஹணதீர அவர்கள் இன்று (மே 23) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய பதவியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக் காலை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ரோஹனதீர அவர்களை, பாராளுமன்ற உதவிச் செயலாளர்களான டிக்கிரி கே.ஜயதிலக மற்றும் ஹங்ச அபேரத்ன ஆகியோர் வரவேற்றனர்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் புதிய செயலாளர் நாயகம் பதவிச் சத்தியம் செய்துகொண்டதுடன், மகா சங்கத்தினர் ஆசீர்வதித்து மத அனுஷ்டானங்களை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்படவுள்ள ரத்தனதிஸ்ஸ அறக்கட்டளை (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் உண்மைப் பிரதியில் கையொப்பமிட்டு அவர் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, குஷானி ரோஹணதீரவின் குடும்ப உறுப்பினர்கள், பாராளுமன்றத் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தனர்.
இன்று மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது படைக்கலசேவிதர் முன்செல்ல சபாநாயகர், செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலாளர்கள் குழுவினர் சபா மண்டபத்துக்குள் வருகை தந்தனர்.
பின்னர், அரசியலமைப்பின் 65(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ சனாதிபதி அவர்களால் பாராளுமன்ற பணியாட்டொகுதிப் பிரதானியாகவும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமாக பதவி வகித்த திருமதி குஷானி அனூஷா ரோஹணதீர அவர்கள் 2023 மே 23 ஆம் திகதி முதல் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றச் செயலாளர் நாயகமாக பதவி வகித்த தம்மிக தசநாயக்க அவர்கள் 2023 மே 23 ஆம் திகதி முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதையும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை அம்பலாங்கொட தர்மாஷோக்க கல்லூரியில் பூர்த்தி செய்த இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத்தில் இளவிஞ்ஞானமானிப் பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் சட்டத்தரணியுமாவார்.
பாராளுமன்றத்தில் தனது சேவையை 1999ஆம் ஆண்டு ஆரம்பித்த இவர், தற்போதைய நியமனத்தைப் பெறுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் பல்வேறு அலுவலகங்களில் உதவிப் பிரதான உத்தியோகத்தர், பிரதிப் பிரதான உத்தியோகத்தர், உதவிச் செயலாளர் நாயகம், பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
பாராளுமன்ற சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்னர் சம்பத் வங்கியின் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரியாகவும், என்வயர்ன்ட்மென்டல் பவுன்டேஷன் நிறுவனத்தில் கனிஷ்ட விஞ்ஞானியாகவும், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரின் (தொலைதூரக் கல்வி) செயலாளராகவும், இன்போமட்டிக்ஸ் தனியார் நிறுவனத்தின் நிலைய இணைப்பாளராகவும் தனியார் துறையில் பணியாற்றியுள்ளார்.
இவர் இந்திய லோக்சபாவின் பாராளுமன்ற கற்கைகள் மற்றும் பயிற்சிகள் நிறுவகம், கனடாவின் மொன்ரியல் மக்கில் பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவங்களில் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள், சட்டவாக்கம் உள்ளிட்ட விடயங்களில் விரிவான பயிற்சியைப் பெற்றுள்ளார்.
சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹணதீரவை மணந்துள்ள அவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
2026-09-22
“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (22) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.இந்த அறிவிப்பு பின்வருமாறு;அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை (திருத்தம்)”எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்துள்ளது;• அரசியலமைப்பின் 83-வது உறுப்புரையின் ஏற்பாடுகளின்படி, "அரசியலமைப்பிற்கான இருபத்திரண்டாவது திருத்தச் சட்டமூலம்" அல்லது அதன் எந்தவொரு பகுதியையும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை.• “அரசியலமைப்பிற்கான இருபத்தி இரண்டாவது திருத்தம்” மசோதாவின் வாசகம் 2 இல் உள்ள காப்பு வாசகத்தின் படி, அதில் தோன்றும் “හැට හතට එලඹෙන දිනය” என்ற சொற்றொடர் “හැට හත සම්පූර්ණ කළ දිනය” என்ற சொற்றொடரால் மாற்றப்படும்.• "அரசியலமைப்பிற்கான இருபத்திரண்டாவது திருத்தச் சட்டமூலத்தின்" வாசகம் 2க்கு இரண்டாவது காப்பு வாசகமாக பின்வருவன சேர்க்கப்பட வேண்டும்:"மேலும், முதல் காப்பு வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வருட பதவிக்கால வரம்பு, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் எந்தவொரு நபருக்கும் பொருந்தாது."மேலும், உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்துள்ளது:• "நீதித்துறை (திருத்த)" சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல; எனவே, இதனை பாரளுமன்றத்தின் எளிய பெரும்பான்மை மூலம் நிறைவேற்றலாம்.உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன்.
2026-09-21
செப்டம்பர் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற வாரத்தில், செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளுக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இன்று (செப். 21) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாம் மதிப்பீடு), செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகச் சட்டமூலத்தைச் சமர்பிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2497/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான “ட்ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் இரண்டாம் வாசிப்பின் பின்னர், சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.அத்துடன், செப்டம்பர் 23 ஆம் திகதி புதன்கிழமை மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபா நிதி மானியத்தை வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீடும் அங்கீகரிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டிற்குத் தேவையான நிதியொதுக்கீடானது, 2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுகளுக்கு (Line Ministries) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்படமாட்டாது என அடையாளம் காணப்பட்ட நிதியொதுக்கீடுகளின் மூலமே பெறப்படுகின்றது. அதற்கமைய, இந்நிதியொதுக்கீட்டு பரிமாற்றமானது 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளுக்குத் தீர்மானிக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
2026-09-21
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் 2026 செப்டெம்பர் 13 முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்ற 69ஆவது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் (CPC) இலங்கைப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்றதுடன், ஜனநாயகம், சர்வதேச சட்டம் மற்றும் பாராளுமன்றங்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் பங்களித்தனர்.தென்னாபிரிக்கப் பாராளுமன்றம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) தென்னாபிரிக்கக் கிளை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாடு, “மாறிவரும் உலகச் சூழலில் சர்வதேச சட்டத்தையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதில் பொதுநலவாயத்தின் தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது.இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு கௌரவ வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன தலைமை தாங்கியதுடன், கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுட, கே. இளங்குமரன், சுகத் வசந்த.த சில்வா மற்றும் சுரங்க ரத்நாயக்க ஆகியோரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் இலங்கைக் கிளையின் செயலாளருமான குஷானி ரோஹணதீர மற்றும் சிரேஷ்ட பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் எதீரிசிங்க ஆரச்சிகே அமரசேன ஆகியோரும் இக்குழுவில் அங்கம்பெற்றிருந்தனர்.பொதுநலவாய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் (CWP) ஆசிய பிராந்திய பிரதிநிதியான கௌரவ வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, அச்சங்கத்தின் 10ஆவது மாநாட்டில் “அனைவருக்குமான சட்டங்களை உருவாக்குதல்: நடைமுறைகள், செயற்பாடுகள் மற்றும் கொள்கைகளில் பாலின சமத்துவத்தை பிரதான நீரோட்டத்தில் இணைத்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற செயலமர்வை வழிநடத்தினார்.இங்கு, சட்டவாக்கம், பாராளுமன்ற நடைமுறைகள், குழு அமர்வுகள், வரவுசெலவுத் திட்டத் தயாரிப்பு மற்றும் சட்டவாக்கத்திற்குப் பின்னரான கண்காணிப்பு ஆகியவற்றில் பாலின சமத்துவத்தை உள்ளடக்குவதற்கான நடைமுறை அணுகுமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.2026 செப்டெம்பர் 17ஆம் திகதி கேப் டவுனில் நடைபெற்ற பொதுநலவாய ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினர் விருது வழங்கும் நிகழ்வில், இயலாமையடைய நபர்களின் உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுகத் வசந்த.த சில்வா 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருதைப் (CPA New Parliamentarian Award 2026) பெற்றுக்கொண்டார்.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராகச் செயற்பட்டு, இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக அவர் வழங்கிய பங்களிப்பும் இவ்விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, பொதுநலவாய இயலாமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதில் பாராளுமன்றங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களிலும் பங்கேற்றார்.இதேவேளை, பாராளுமன்ற செயலாளர் நாயகமும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் இலங்கைக் கிளையின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, பொதுநலவாய பாராளுமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் கலந்துகொண்ட 60ஆவது Society of Clerks-at-the-Table (SoCATT) கூட்டத்திலும் பங்கேற்றார். இதில் நிறுவன ரீதியான நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வது மற்றும் பாராளுமன்ற நிர்வாகம், நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 69ஆவது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இலங்கை பங்கேற்றதன் மூலம், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொதுநலவாய பாராளுமன்றங்களின் பிரதிநிதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், பாராளுமன்ற அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும், பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு பங்களிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.அத்துடன், பொதுநலவாயத்தின் ஏனைய பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம், பொதுநலவாய பாராளுமன்ற வலையமைப்புகளுக்குள் இலங்கையின் தொடர்ச்சியானதும் செயற்பாட்டு ரீதியிலானதுமான பங்கேற்பு மேலும் வெளிப்படுத்தப்பட்டது.
2026-09-18
இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜேர்மன் பாராளுமன்றத்தின் தெற்காசிய பாராளுமன்றக் குழுவின் தூதுக்குழுவொன்று செப்டெம்பர் 16ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிக்லஸ் காப்பே அவர்கள் தலைமையிலான இந்தக் குழுவில், கௌரவ கெரோல்ட் ஓட்டன், கௌரவ ஜோஹன் சாத்தோஃப் மற்றும் கௌரவ உல்லே ஷாவுஸ் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். அத்துடன், இலங்கைக்கான ஜேர்மன் பிரதித் தூதுவர் சாரா ஹாசல்பார்த், பாராளுமன்றச் செயலகப் பணியாளர் கதரீனா பீனெர்ட் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் தாரிணி தழுவத்தே ஆகியோரும் இத்தூதுக்குழுவில் இணைந்திருந்தனர்.கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள் இத்தூதுக் குழுவை வரவேற்றதுடன், இலங்கை - ஜெர்மனி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் மதிய போசனத்துடனான கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் இலங்கை ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இலங்கைப் பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.இச்சந்திப்பில், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் குழு முறைமை, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் தலைமையை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், மற்றும் அரசியல் செயற்பாடுகளில் இளம் தலைமுறையினரின் அதிகளவிலான பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நேர்மை மற்றும் சட்டத்தை மதித்தல் தொடர்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், இன மற்றும் மத ரீதிதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அனைத்துச் சமூகங்களிடையேயும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மதிய போசனக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஜேர்மன் தூதுக் குழுவினர், மூன்று அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் மற்றும் இரண்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடனான இணைந்த கலந்துரையாடலிலும் பங்கேற்றனர். வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எஸ். எம். மரிக்கார் ஆகியோருடன் மேற்படி குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் சிலரும் இணைந்துகொண்டனர்.தூதுக்குழுவினரால் அடையாளம் காணப்பட்ட ஆர்வமுள்ள துறைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்திய கருத்துப் பரிமாற்றத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் இக்குழுக்கள் வட்டமேஜைக் கலந்துரையாடலில் பங்கேற்க அழைக்கப்பட்டன. இக்கலந்துரையாடலானது அந்தந்தக் குழுக்களின் முக்கிய பங்களிப்புகள், தற்போதைய செயற்பாடுகள் மற்றும் மூலோபாய முன்னுரிமைகள் குறித்த பார்வைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது. இதில் கழிவு மேலாண்மை, நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு, மின்சாரம் மற்றும் சக்தி, அத்துடன் பொருளாதாரம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.இந்தக் கலந்துரையாடல்கள் இலங்கை மற்றும் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அனுபவங்களையும் பார்வைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்த உதவியது.